வாவ் சூப்பர் ஐடியா! வீட்டின் மூலையில் இடத்தை அடைக்காமல் நமக்கே நமக்காக ஒரு சின்னஞ்சிறிய லிஃப்ட்!

வெறும் 250 சதுர அடிக்குள் அதிலும் மூன்றாம் அல்லது நான்காம் மாடியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிப்போருக்கு குறிப்பாக முதியவர்களுக்கு இடத்தை அடைக்காத இம்மாதிரியான சின்னஞ்சிறு லைஃப்ஸ்டைல் லிஃப்டுகள்
வாவ் சூப்பர் ஐடியா! வீட்டின் மூலையில் இடத்தை அடைக்காமல் நமக்கே நமக்காக ஒரு சின்னஞ்சிறிய லிஃப்ட்!

லைஃப்ஸ்டைல் லிஃப்ட்!

யூ டியூபில் காணக்கிடைத்த இந்த புது ஐடியா கொஞ்சமல்ல நிறையவே கவனம் ஈர்க்கிறது.

யோசித்துப் பாருங்கள். வீட்டின் மூலையில் இடத்தை அடைக்காமல் கைக்கு அடக்கமாக நமக்கே நமக்காய் ஒரு சின்னஞ்சிறிய லிஃப்ட் வசதி அருமையான ஐடியா தான் இல்லையா?

இனி வரும் காலங்களில் வீட்டிலுள்ள மற்ற அத்யாவசியப் பொருட்களான கட்டில், பீரோ, ஃப்ரிஜ், வாஷிங் மெஷின், சோஃபா செட் போல இந்தக் குட்டி லைஃப்ஸ்டைல் லிஃப்ட்டும் வீட்டின் அழகுபடுத்தும் புராஜக்டுகளில் ஒன்றாகி விடக்கூடும்.

இந்த வசதி இன்னும் இந்தியாவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. தற்போது இங்கிலாந்தில் விற்பனைக்கு கிடைக்கும் இத்தகைய லிஃப்டுகள் நம் இந்தியாவுக்கு ஒத்து வருமா?! என்றும் தெரியவில்லை. பார்க்க அழகாக இருப்பதோடு அடிப்படையில் அதன் கட்டமைப்பு  திட்டமிட்ட வகையிலும் கூட  இது வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இருக்கும் வீடுகளுக்கு மிகப் பயனுள்ள ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

ஆனால் வீட்டின் ஏதாவது ஒரு மூலையைக் கணக்கில் கொண்டு டிசைன் செய்யப்பட்ட இந்த தானியங்கி லிஃப்ட் இயங்குவது ஹைட்ராலிக் முறையிலா அல்லது மின்சாரத்திலா என்பது குறித்து அங்கே தகவல்களை காணோம். அதுமட்டுமல்ல, லிஃப்ட் இயங்கிக் கொண்டிருக்கையில் அது கட்டமைக்கப்பட்டுள்ள மூலையில் வீட்டின் வளர்ப்புப் பிராணிகளோ அல்லது சிறுவர், சிறுமிகளோ, குழந்தைகளோ கவனமின்றி சென்று நின்று விட்டால் மேலிருந்து வரும் லிஃப்ட் ஆட்டோமேட்டிக்காக சென்ஸார் உதவியால் தானே இயக்கத்தை நிறுத்தி அப்படியே அந்தரத்தில் நிற்குமா அல்லது பொத்தென்று கீழே வந்து நின்று நம் பிரியத்துகந்தவர்களை விபத்தில் சிக்க வைக்குமா என்பதற்கும் அந்த தளத்தில் பதிலில்லை. மின்சாரத்தில் இயங்கும் லிஃப்ட் என்றால் இடையில் ஸ்டக் ஆகி நிற்கையில் வீட்டிற்குள்ளே சிறையில் மாட்டிக் கொண்ட உணர்வு தான்.

இப்படி இந்த லைஃப்ட்ஸ்டைல் லிஃப்ட் குறித்த சந்தேகங்கள் நீண்டு கொண்டே சென்றாலும் கூட ஒரு புதுமையான ஐடியா என்ற வகையில் இம்மாதிரியான எக்கானாமிகல் லிஃப்ட் முயற்சியைப் பாராட்டலாம். உண்மையில் இம்மாதிரியான முயற்சிகள் மேலும் பல கட்ட சோதனைகளுக்குப் பிறகு மேற்கண்ட சந்தேகங்கள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டு முழுமையாக வாடிக்கையாளர்களுக்குப் பயன் தரும் வகையில் மாற்றம் செய்யப்பட வேண்டும். வளர்ந்து வரும் தொழில்நுட்பம் அதற்கு உதவலாம்.

சென்னை, மும்பை மாதிரியான நகரங்களில் குறுகிய இடங்களில் மாடி மேல் மாடி கட்டி சதுரமான வீடுகளுக்குப் பதிலாக குதுப்மினார் மாதிரியான நீளமான உயர்ந்த கட்டிடங்களில் வாழப் பணிக்கப்பட்டவர்களுக்கு இந்த ஐடியாக்கள் எதிர்காலத்தில் பெரும் உதவியாக இருக்கக் கூடும். 

இன்றைய காலகட்டத்தில் அபார்ட்மெண்டுகளில் லிஃப்ட் அமைக்க அங்கு வசிக்கும் மக்கள் எண்ணிக்கையைப் பொறுத்து குறைந்த பட்சம் 100 சதுர அடி இட வசதியாவது தேவைப்படும். வீட்டின் பரப்பே 400 சதுர அடிகள் தான் என்கையில் அப்படிப்பட்ட வீடுகளில் வசிப்போரின் கதியை யோசித்துப் பாருங்கள். மும்பை போன்ற பெருநகரங்களில் வெறும் 250 சதுர அடிக்குள் அதிலும் மூன்றாம் அல்லது நான்காம் மாடியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிப்போருக்கு குறிப்பாக முதியவர்களுக்கு இடத்தை அடைக்காத இம்மாதிரியான சின்னஞ்சிறு லைஃப்ஸ்டைல் லிஃப்டுகள் வரப்பிரசாதங்களே தான்!

லைஃப்ஸ்டைல் லிஃப்ட் இயங்கும் முறைக்கான வீடியோ காட்சி...

இந்த லிஃப்டுகள் இந்தியாவுக்கு எப்போது விற்பனைக்கு வரும் என்று தெரியவில்லை. அப்படியே வந்தாலும் கூட மேலே சொல்லப்பட்ட குறைகளும், சந்தேகங்களும் நிவர்த்தி வேறு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com