வெள்ளைத்துணிகளில் விடாப்பிடி கறையா? நொடியில் போக்க என்ன செய்யலாம்?

வெண்மை தூய்மையின் நிறம். ஒரு சிறு கரும்புள்ளியோ அல்லது அழுக்கோ அந்த உடைகளில் எங்கேனும் ஒரு மூலையில் இருந்தாலும் கூட அது அந்த உடையின் வெண்மைத்தன்மையை குறைத்து விடக் கூடும்.
வெள்ளைத்துணிகளில் விடாப்பிடி கறையா? நொடியில் போக்க என்ன செய்யலாம்?

பிற மாநிலங்களில் எப்படியோ நம் தமிழக சட்டமன்றத்தை தொலைக்காட்சியில் பார்த்தீர்களானால் அனைத்து அமைச்சர்களும் சுத்த வெண்மையில் பளிச்சென்று தெரிவார்கள். அவர்கள் அணிந்துள்ள வெண்ணிற வேஷ்டி, சட்டைகளின் தயவால் பளீரென்ற வெண்மை பார்ப்பவர்களின் கண்களைப் பறிக்கும். தங்கள் வாழ்வின் வெறெந்த இருட்டு மூலையிலும் பளீரிடும் சுத்த வெள்ளையை அனுமதித்திராத அரசியல்வாதிகள் கூட குறைந்தபட்சம் தங்கள் உடைகளிலாவது அவற்றை அனுமதித்தது ஆறுதலான விஷயம் தான். இல்லையா பின்னே! சரி அதை விடுங்கள்.. கட்டுரை மோசமான அரசியல்வாதிகளைப் பற்றியது அல்ல. உடைகளில் இழந்த வெண்மையை எப்படி மீட்டெடுப்பது என்பதைப் பற்றியது.

நம்மில் பலருக்கும் கூட வெண்ணிற உடைகள் என்றால் இஷ்டம் தான். ஆனால் அவற்றை பராமரிப்பதில் காட்டப்பட வேண்டிய சிரத்தையை முன்னிட்டு அந்த நிறத்தை நாம் பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். வெண்மை தூய்மையின் நிறம். ஒரு சிறு கரும்புள்ளியோ அல்லது அழுக்கோ அந்த உடைகளில் எங்கேனும் ஒரு மூலையில் இருந்தாலும் கூட அது அந்த உடையின் வெண்மைத்தன்மையை குறைத்து விடக் கூடும். அதனால் தான் வெள்ளுடுப்புகளைப் பெரும்பாலோர் தவிர்த்து விடுகின்றனர்.

ஆனால் சிலருக்கு எத்தனை முயன்றாலும் வெள்ளை உடுப்புகளைத் தவிர்க்க முடியாது. கல்லூரிகளில் அறிவியலை முதன்மைப் பாடமாக எடுத்த மாணவ, மாணவியருக்கு சோதனைச் சாலைகளில் அணிய வெள்ளை நிற டாக்டர் கோட் ஒன்று தரப்படும். மூன்றாண்டுப் படிப்போ அல்லது 5 ஆண்டுப் படிப்போ எதுவானாலும் வருட இறுதியில் அந்த கோட்டை அதன் நிஜ நிறம் மாறாமல் காப்பது பெரும் சாதனை. சில மாணவ, மாணவியருக்கு வருட இறுதிக்குள் வெள்ளை கோட், டிடர்ஜெண்டுகள், சொட்டு நீலங்கள், ஒயிட்டனர்கள் எனப் பலத்த சித்ரவதைகளுக்குட்பட்டு கிட்டத்தட்ட பழுப்பு கோட் ஆகியிருக்கும். இதிலிருக்கும் வேதனை என்னவென்றால்... ஆஃப்டர் ஆல் ஓரிரு பீரியட்களுக்கு மட்டுமே அணியும் கோட் தானே அது வெள்ளையாக இருந்தால் என்ன பழுப்பாக இருந்தால் என்ன என்று விட்டு விட முடியாது. அது வெண்மைக்கே உரிய பிரத்யேக குணம். நம்மால் அந்த வெண்மையின் பரிசுத்தத்தைப் பாதுகாக்கவோ, பராமரிக்கவோ முடியாவிட்டால் அதுவே பிறகு தொடர்ந்த மனச்சுமையாகவே கூட மாறி விடும். கல்லூரிக்காலத்தில் இளங்கலை அறிவியல் பயிலும் போது ஆய்வக வகுப்பு நேரத்தின் போது ஒவ்வொரு முறையும் பழுப்பு கோட் அணிய நேர்கையில் இது அனுபவ ரீதியாக நான் அறிந்த உண்மை. சரி அப்படியென்றால் சுத்த வெண்மையை வேறெப்படித்தான் பராமரிப்பதாம்? 

டிடர்ஜெண்டுகள் கூடாது...
ஒயிட்டனர்களும் கூடாது
சொட்டு நீலம் அறவே கூடாது...
பிறகெப்படி 
வெண்மை...வெண்மை... சுத்த வெண்மை சாத்தியமாகும்?

இதோ அதற்கான சில இயற்கை வழிமுறையிலான எளிய டிப்ஸ்கள்...

சமையல் சோடா...

ஒரு பிளாஸ்டிக் டப்பில் 4 லிட்டர் தண்ணீர் நிரப்பி அதில் ஒரு கப் சமையல் சோடாவைப் போட்டு கலக்குங்கள். சமையல் சோடா நன்கு கரைந்ததும் அதில் கறை படிந்த வெண்ணிற ஆடைகளை நனைத்து ஊற வைக்கவும். சில நிமிடங்களிலேயே கறை ஆடைகளிலிருந்து பிரிந்து தண்ணீருக்குள் கரைவது நமக்கு கண் கூடாகத் தெரியக்கூடும். வெண்ணிற ஆடை சிறிது சிறிதாக சில நிமிடங்களில் தனது இயல்பான நிறத்தைத் திரும்பப் பெற்று விடும்.

ஆஸ்பிரின் மாத்திரை...

என்ன தான் சமையல் சோடா கொண்டு ஊற வைத்து அலசியும் சில விடாப்பிடி கறைகள் உண்டு. ஒயின், காஃபிக்கறை, இங்க் கறை, குருமா, கிரேவி கொட்டியதால் உண்டான கறை, எண்ணெய்க்கறை போன்றவற்றை அத்தனை எளிதில் அகற்றி விட முடியாது. அவற்றை அகற்ற வேண்டுமானால் மிக, மிக எளிதான டிப்ஸ் ஒன்று உள்ளது. அதன்படி ஒரு பிளாஸ்டிக் டப்பில் இருக்கும் தண்ணீரில் 6 ஆஸ்பிரின் மாத்திரைகளை நங்கு பொடி செய்து கரைத்து கலக்கவும். ஆஸ்பிரின் கலந்த அந்த தண்ணீரில் விடாப்பிடிக் கறையுள்ள வெண்ணிற ஆடைகளை சுமார் 30 நிமிடங்களுக்கு நனைத்து ஊற வைத்த பின் வழக்கம் போல உங்களது வாடிக்கையான டிடர்ஜெண்ட் சோப் கொண்டு துணிகளைத் தோய்த்து எடுத்து பின் நீரில் அலசினால் போதும் வெண்மை டாலடிக்கும்.

எலுமிச்சை சக்தி மற்றும் வினிகர்...

எலுமிச்சை சாறு மற்றும் வினிகரை சம அளவு எடுத்துக் கலந்து அதை பிளாஸ்டிக் பக்கெட்டில் இருக்கும் தண்ணீரில் கலந்து அதில் விடாப்பிடிக் கறை படிந்த வெண்ணிற உடைகளை முக்கி நனைத்து துவைத்தெடுத்தால் கறை போயே போச்சு!

இம்முறையில் துவைப்பதால் கறை மட்டும் நீங்குவதில்லை, உடைகளில் ஏதாவது துர்நாற்றம் இருந்தால் அதுவும் நீங்கி உடைகளில் எலுமிச்சையின் நறுமணம் சேகரமாகும் என்பதும் உபரி நன்மை!

இங்கே சொல்லப்பட்டுள்ள எளிய முறைகள் தவிர உங்களுக்கே உங்களுக்கென பிரத்யேகமாக வெள்ளை உடைகளில் படிந்துள்ள விடாப்பிடி கறைகளை அகற்ற ஏதேனும் டிப்ஸ் தெரிந்தால் அதை எங்களுடன் பகிரலாம்.

Image Courtesy: you tube.

Article Concept Courtesy: youtube.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com