வடலூர் வள்ளலார் அருளிய தைப்பூச ஜோதி தரிசனம்

வடலூர் வள்ளலார் அருளிய தைப்பூச ஜோதி தரிசனம்

வள்ளலார் ஒளிநெறி அடைந்த தைப்பூச திருநாளை, ஞான நிறைவை குறிப்பிடும்

வள்ளலார் ஒளிநெறி அடைந்த தைப்பூச திருநாளை, ஞான நிறைவை குறிப்பிடும் விழாவாக சன்மார்க்க அன்பர்கள் கொண்டாடி வருகிறார்கள். தாம்பரம் அடுத்து, படப்பை, அருட்ஜோதிபுரத்தில் 7 திரைநீக்கி ஜோதி தரிசனப் பெருவிழா 9.2.2017 வியாழக்கிழமை 6.30 மணிக்கும், பகல் 1 மணிக்கும், இரவு 8 மணிக்கும் என மூன்று காலத்தில் காட்டப்பட உள்ளது. 8.2.2017 புதன்கிழமை வள்ளலார் கருத்தரங்கம், பட்டிமன்றம், ஊர்வலம், நடைபெற உள்ளது.

வள்ளலாரின் பெருமைகளை நினைவுகூறும் கட்டுரை ஒன்றினை வாசகர்கள் கவனத்துக்காக பதிவு செய்கிறோம்.

வள்ளலார் வருகை

1823-ம் ஆண்டு அக்டோபர் 5-ம் நாள் அருட் பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை ஆண்டவர் திருவுள்ளத்திற்கிசைய, வள்ளலார் இம்மண்ணுலகில்  பிறந்தார்.

வருகை நோக்கம்

அகமாகிய ஆன்மாவின் இயற்கை இரக்கம். இதை தயவு, ஞானம், வெள்ளை, நிர்மலம், ஆன்ம இயற்கை என்றூ வள்ளலார் கூறுவார். இரக்கமே தம் உயிராக இருக்க வேண்டிய மானிடர் உள்ளம் தயவில்லாத ‘கடின சித்தமாக’ உள்ளது. அதாவது கருப்பாக உள்ளது. புறத்தே வெள்ளாடை அணிந்து பகட்டாக திரிகின்றனர். அகம் கருத்தும் புறம் வெளுத்தும் உள்ளனர். இப்படிப்பட்ட உலக மக்கள் அனைவரையும் கருணை உள்ள ஒழுக்க சீலர்களாக மாற்றி, இந்த உடம்பிலேயே ‘பரமாகிய’ பேரின்ப வாழ்வை அடைய செய்விக்கவே, சன்மார்க்க சங்கம் கண்டார் வள்ளலார்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்

வடலூரை அடுத்த கருங்குழி என்னும் கிராமத்தில் சுமார் 8 ஆண்டுகளாக தங்கி இருந்து, தமது மிக உயர்ந்த அகில உலக சகோதரத்துவக் கொள்கையை, ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை கொள்கையை நிலை நாட்ட 1865-ல் சமரச வேத சன்மார்க்க சங்கம் அமைத்தார். 1872-ல் அதன் பெயர் மாற்றப்பட்டது. சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என அழைத்தார் வள்ளலார்.

சங்க கொள்கைகள்

இவ்வுடம்பிற்கு ஓர் உயிர் போல், அகில உலகிற்கும் ஒரே கடவுள் மட்டுமே உள்ளார் என்று தமது முதல் கொள்கையை வகுத்தார்.

அக்கடவுள் அருட்பெருஞ்ஜோதி என அழைக்கப்பட்டார். அக்கடவுளின் திருவருளைப் பெறுவதே மனித குல முழுமைக்குமான நோக்கம் என்று அறுதியிட்டு உரைத்தார் வள்ளலார். அக்கடவுளின் திருவருளைப் பெறுவதன் மூலமே, இவ்வுடம்பை அருள் வட்டிவாக மாற்றி மரணமிலாப் பெருவாழ்வில் நிலைத்து வாழ முடியும் என்றார். அக்கடவுளின் திருவருளை, எல்லா ஜீவர்களிடத்து காட்டும் தயவின் (கருணை) மூலமே பெற முடியும் என்றார். ஜீவகாருண்யம் என்கின்ற உயிர் இரக்கம் மூலமே கடவுள் எழுந்தருளியிருக்கும் கோட்டையை திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முக்தர்களாய் வாழ முடியும் என்றார். எனவே அருள் என்கின்ற மோட்ச வீட்டின் திறவுகோல் ஜீவகாருண்யமே என்று முடிவாகத் தெரிவித்தார். இந்த ஜீவ தயவு காட்டுவதற்கு, தடைகளாக இருப்பது சாதி, சமய, மத, வருண, ஆச்சிரம, ஆச்சார, மார்க்க வேறுபாடுகள். இவைகளை பற்றற விட்டுவிட வேண்டும் என்றார். கற்பனை கலைகளான வேத, ஆகம், புராண இதிகாசங்கள் முதலிய எவற்றிலும் லட்சியம் வைக்கக் கூடாது என்றார். இறந்தவர்களை புதைக்க வேண்டும் என்றார்.

சத்திய தருமச்சாலை

1867-ம் ஆண்டு வைகாசி மாதம் 11-ம் நாள், வடலூரில் ஏழைகளின் பொருட்டே சத்திய தருமச்சாலை ஒன்றை நிறுவினார்கள். சன்மார்க்க சங்கத்தின் கொள்கை விளக்கமாக, உயிர்களுக்கு உபகார சக்தியாக சத்திய தருமச்சாலை அமைக்கப்பட்டது. ஏழைகளின் பசித் துன்பத்தை நீக்குவதும், உயிர்க்கொலையை தடுக்க உதவுவதும், நம்மிடம் உள்ள இயற்கையான கருணையை வெளிப்படுத்திக் கொள்ள உதவுவதும் இந்த சத்திய தருமச்சாலையே. சத்திய தருமச்சாலையில் எந்த பேதமும் (தேச, குல, கோத்திர, இன பாகுபாடுகள்) இன்றி அனைவருக்கும் உணவு வழங்கப்படுவதன் மூலம் ஆன்ம நேய சகோதர உரிமை வளர்ந்து, அகில உலகமும் அருளாட்சி கொண்டு விளங்கும். உயிர்க்குலம் இன்புற்று வாழும் என்பதே சத்திய தருமச்சாலை அமைத்ததின் உள்நோக்கமாக இருக்கின்றது.

சத்திய ஞான சபை

1872-ம் ஆண்டு வடலூரில் சத்திய ஞான சபை என்ற, எவ்வுலகிலும் இல்லாத ஒரு சபையினை வள்ளலார் நிர்மானித்தார்கள். இச்சபை எண்கோண வடிவுடன், மனிதனின் தலைப்பகுதியை நினைவுபடுத்தும் வகையில், தாமரைப் பூவை கவிழ்த்திப் பிடித்தால் எவ்வாறு இருக்குமோ அப்படி அமைக்கப்பட்டுள்ளது. இச்சபை எல்லா சமயத்தவரும், எல்லா மதத்தவரும், எல்லா மார்க்கத்தவரும், எல்லா சாதியினரும், எல்லா நாட்டவரும் ஒருங்கிணைந்து வழிபடக்கூடிய வகையீல் அமைத்து, ‘உலகம் உத்தர ஞான சிதம்பரம் (வடலூர் ஞானசபை) என்றார் வள்ளலார். முழுக்க முழுக்க நமது உடம்பின் தத்துவ விளக்கமாக புறத்தே அமைக்கப்பட்ட சத்திய ஞான சபையின் நடுவே ‘அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்’ அமர்ந்து அருள்நடம் புரிவதற்கு ஒரு பீடம் அமைக்கப்பட்டு அதன் முன்னே ஒரு கண்ணாடியும், அதன் முன்னே 7 திரைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இது, நமது ஆன்மாவின் நடுநாயகமாக கடவுள் அமர்ந்து, ஒவ்வொரு கணப் பொழுதும் தமது பேரருளை வெளிப்படுத்திக் கொண்டும் இருக்கும் உண்மை நிலையை காட்டும் புற அடையாளமே சத்திய ஞான சபை. ஆன்ம நாயகனான அருட்பெருஞ்ஜோதி கடவுளை நாம் அறிய முடியாமல், நம்மை உணர முடியாமல் செய்யும் தத்துவத் திரைகளை நாம், திருவருள் துணை கொண்டு விலக்கிக் கொள்ள வேண்டும். அந்த மாயத்திரைகளே, நாம் அனுபவதித்து வரும் 7 விதமான துன்பங்கள். பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை என்ற ஏழுவகை துன்பங்களே எல்லா துன்பங்களாக விரிவடைந்துள்ளது. இத்துன்பங்களை உயிர்கள் அடைந்து வருந்தி களைத்த போதெல்லாம், அத்துன்பத்தை நீக்கி அவ்வுயிர்க்கு இன்பம் (சந்தோஷம், திருப்தி) செய்விப்பதே நமது கடமையும், அதுவே இறைவன் அருளை பெறுவதற்கான வழியும் என அறிதல் வேண்டும். அதுவன்றி, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், கொலை எனும் 7 வகை குற்றங்களே நமது ஆன்ம தரிசனத்தையும், கடவுள் தரிசனத்தையும் மறைக்கும் 7 திரைகள் என வள்ளலார் உணர்த்துகின்றார். தூக்கம், சோம்பல், துயரம், மாயை, வினை, மறைப்பு, ஆணவம் என்னும் 7 வகை மாயாமலங்களை 7 திரைகளாக உவமிக்கப்பட்டுள்ளது என அறிதல் வேண்டும். இவ்வாறு மனித உள்ளமாகிய ஆன்மாவே சத்திய ஞானம் என வள்ளலார் குறீப்பிடுகின்றார்.

‘சபை எனது உளம் எனத் தானமர்ந்து எனக்கே அபயம் அளித்தோர் அருட்பெருஞ்சோதி’ என்று தம் அனுபவத்தை வள்ளலார் கூறுவர். சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்! சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்! என்றும் வள்ளலார் கூறுவர்.

சித்திவளாகத் திருமாளிகை

சங்கம், சாலை, சபை கண்ட வள்ளலார் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண் முன்னே, 1874-ம் ஆண்டு ஜனவரி மாதம் (தை மாதம்) 30-ம் நாள் இரவு 12 மணிக்கு (தைப்பூச நாளில் வடலூரையடுத்த மேட்டுக்குப்பம் என்னும் அற்புத ‘குடில் ஒன்றில் சுமார் 4 ஆண்டுகளாக தனித்து உறைந்த வள்ளலார், அக்குடிசையின் உள்ளே சென்று திருக்காப்பிட்டுக் கொண்டார்கள். அவரது தேகம் திருக்காப்பிட்டுக் கொள்வதற்கு முன் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பே ஒளி நிலை அடைந்திருந்ததாகவும், அநேக அற்புதங்கள் வெளிப்பட்டதாகவும் வரலாறு தெரிவிக்கின்றது. சுத்த, பிரணவ, ஞான தேக நிலையில் தாம் வெளிப்பட இருப்பதாக கூறி அன்பர்களை சமாதானப் படுத்திவிட்டு, தமது அறையை தாளிடச் செய்துவிட்டு எவ்விடத்தும், எவரும் தங்கள் அருள் அனுபவத்தில் அவரை தரிசிக்க முடியும் என்பதை உணர்த்தும் அற்புத பேரருள் நிலையை அடைந்தார்கள்.

தைப்பூச சித்தி ஞான நிறைவு தினத்தை சிறப்பிக்க ஆன்மிக அன்பர்கள் அனைவரும் கலந்து பலன் பெற அன்புடன் அழைக்கிறோம் வருக! வருக, வந்தனம்.

- இரா.பாலகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com