ஈங்கோய்மலை சிவன் கோயில்

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது.
ஈங்கோய்மலை சிவன் கோயில்

திருஈங்கோய்மலை அல்லது ஈங்கோய்மலை திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடப்பட்ட கோயில்களுள் ஒன்றாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 63வது சிவத்தலமாகும்.

கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலையில் இருந்து காவேரி நதியைக் கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். குளித்தலை தான் அகண்ட காவிரி எனப்படும் இடமாகும்.

அகத்திய மாமுனிவர் ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு. மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.

இந்த மலையை மரகதமலை என்பர்.காவிரியின் தென்கரையிலுள்ள கடம்பந்துறையைக் காலையிலும், திருவாட்போக்கியை நண்பகலிலும், இந்த ஈங்கோயை மாலையிலும் ஒரே நாளில் நடந்து சென்று வழிபடுவது சாலச் சிறந்தது எனச் சான்றோர் கூறுவர்.

நக்கீரதேவ நாயனார் என்னும் பத்தாம் நூற்றாண்டுப் புலவர் இம் மலையின் பெருமையைத் திருஈங்கோய்மலை எழுபது என்னும் நூலாகப் பாடியுள்ளார். இத்தல நாதர் மரகத லிங்கமாக விளங்குவதற்கு வரலாறு ஒன்று உண்டு. முன்னர் ஆதிசேஷனும் வாயுவும் தத்தம் வல்லமையை நிலை நாட்டிட கடும் போரில் ஈடுபட்டனர். அச்சமயம், ஆதிசேஷனால் முழுவதுமாக மூடப்பட்டிருந்த மேரு மலையிலிருந்து வைரம், சிவப்பு மணி, மரகதம், மாணிக்கம் மற்றும் நீலம் ஆகியவை சிதறி விழுந்தன. அவ்வாறு மரகதம் வீழ்ந்த இடமே திரு ஈங்கோயில் என்பர். இதன் காரணமாகவே இங்குள்ள மூலவர் மரகதாலேசுவரர் ஆனார்.

ஏனைய மணிகள் வீழ்ந்த இடங்களும் சிவத்தலங்களே: வைரம் திருப்பாண்டிக் கொடிமுடியிலும், மாணிக்கம் திருவாட்போக்கியிலும் (இது திரு ஈங்கோய் மலைக்கு அருகிலேயே உள்ளதாகும்), நீலம் பொதிகை மலையிலும், சிவப்புக் கல் திருவண்ணாமலையில் வீழ்ந்தனவாம் மரகத நாதர் என்னும் திருப்பெயருக்கேற்றவாறு, சிவலிங்கம் பச்சை மாமலை போலப் பளபளக்கும் வண்ணம் கொண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி அல்லது அதற்கு முதல் நாளன்று, ஆதவனின் கதிர்கள் இம்மரகத நாதர் மீது படிவது இத்திருத்தலத்தில் பெரும் சிறப்பு. (ஆனால் நாம் காண சென்றபோது கோயில் குருக்கள் அவ்வப்போது இந்த நாள் மாறுகிறது என்றும் தற்போது மாசி 28,29,30 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி இறைவன் மீது வீழ்கிறது என கூறினார்)

ஒருமுறை இறைவனை காண சுந்தரர் வருகிறார், அப்போது அவரை சிறிது அலைக்கழிக்க எண்ணி இறைவன் புளியமரத்தில் மறைந்து கொள்கிறார், சுந்தரர் பலவாறு வேண்டியும் காட்சி கொடுக்கவில்லை, மாறாக பாடியதற்காக ஒரு பொன் புளியங்காயை அவரிடம் எறிகிறார். இறைவன் புளியமரத்தில் இருப்பதை அறிந்து கொண்ட சுந்தரர். எனக்கு காட்சியளிக்காமல் இடம் கொடுத்த புளியமரம் இனி யாருக்கும் மறைவிடமாக இருத்தல் வேண்டாம் என கூறி சென்றுவிடுகிறார். அது முதல் இத்தலத்தில் புளியமரங்கள் இல்லாது போயிற்று. 

இந்த மலையின் அடிவாரத்தில் போகர் கிழக்கு நோக்கி தனி கோயில் கொண்டுள்ளார். அருகில் விளக்கு தூண் ஒன்று இருபது அடி உயரத்தில் படிகளின் துவக்கத்தில் உள்ளது. 

ஐநூறு படிகள் கொண்ட இந்த மலையின் முகப்பில் ஒரு சுதை வளைவுடன் கூடிய மதில் சுவரும் அதனை அடுத்து மூன்று நிலை முதன்மை கோபுரம் உள்ளது. இறைவன் அம்பிகை இருவரும் கிழக்கு நோக்கிய கருவறையில் உள்ளனர், இறைவனின் இடப்புறம் அம்பிகை உள்ளார். கோபுரம் வழி பிரகாரத்தில் உள்ளே நுழையும்போது சன்னல் ஒன்றும் அதில் ஒரு விநாயகர் தரிசனம் அடுத்து பிரகார வலத்தில் முதற்கோயில் விநாயகருடையது இறைவன் கருவறை கோட்டத்தில் நர்த்தன விநாயகர். அடுத்து முருகன் சிற்றாலயம் உள்ளது. 

கருவறையில் பச்சை நிற கல்லால் ஆனவர் என்பதால் இறைவன் மரகததாசலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். அவரது கருவறை வாயிலில் இடது புறம் விநாயகரும் வலது புறம் அர்த்தனாரீஸ்வரரும் உள்ளனர். அம்பிகைக்கு இடப்பாகம் கொடுத்த இடம் இதுவென்றும், அதன் பின்னரே திருசெங்கோட்டில் கோயில் கொண்டார் என்றும் கூறுகின்றனர் 

அதனால் தான் இங்கு கருவறை வாயிலில் அர்த்தநாரி கோலம் உள்ளது என கூறுகின்றனர். 

அம்பிகைக்கும் இறைவன் சன்னதிக்கும் இடையில் தண்டாயுதபாணியாக முருகன் தனி சன்னதி கொண்டு உள்ளார். 

இறைவனுக்கு எதிரில் முகப்பு மண்டபம் உள்ளது அதில் கொடிமரமும் ஒரு விநாயகரும் உள்ளனர். ஒரு புறம் பைரவர், பிச்சாடனர், சிறிய பைரவர், அப்பர், உள்ளனர் அருகில் ஒன்பதுகோள்கள் உள்ளன. 

அம்பிகை மரகதவல்லி கருவறையில் முகப்பு மண்டபத்தில் ஒரு புறம் சிறிய லிங்கம் அம்பிகை உள்ளனர். இங்கு நந்திக்கு முன் பலி பீடம் உள்ளது இந்த அம்பிகை சக்தி பீடத்தில் ஒன்றென கருதப்படுகிறது. 

வாட்போக்கி, குளித்தலை, ஈங்கோய் மலை மூன்றும் சோமாஸ்கந்த வடிவம் போன்றது. வாட்போக்கி – சிவன், குளித்தலை - கந்தன், ஈங்கோய்மலை – பார்வதி. இந்த சோமாஸ் கந்த வடிவத்தினை ஒரே நாளில் தரிசித்து பிறந்த பயனை அடைவோம்

ஞானசம்பந்தர் தேவாரப் பாடல் - பாடியவர் பாலசந்திரன்

- கடம்பூர் விஜயன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com