ஆண்டவனை அறிய முடியுமா? 

ஸ்ரீ ஆதி சங்கரரின் முதல் சீடர் பத்ம பாதர்.   அவரது இயற் பெயர் சனந்தன் என்பதாகும்
ஆண்டவனை அறிய முடியுமா? 

ஸ்ரீ ஆதி சங்கரரின் முதல் சீடர் பத்ம பாதர். அவரது இயற் பெயர் சனந்தன் என்பதாகும். குருவின் மேல் அபார பக்தி கொண்டவர்.

ஒரு முறை, கங்கை நதியின் ஒரு பக்க கரையிலிருந்த பகவத் பாதாள், தன்னுடைய சிஷ்யனைக் கூப்பிட்டார். குருவின் குரல் கேட்டதுதான் தாமதம். பிரவாகித்துக் கொண்டிருந்த கங்கையை மறந்து, நதியில் பாதங்களைப் பதித்து, குரல் வந்த திக்கு நோக்கி நடக்கத் தொடங்கினார். 

கங்கை மாதாவிற்கு மனம் பொறுக்கவில்லை. சனந்தர் பதித்த ஒவ்வொரு பாதத்தையும் ஒவ்வொரு தாமரை புஷ்பத்தினால் தாங்கினாள். 

அதனால் அவர்  பத்ம பாதர்  என்றழைக்கப்பட்டார். 

அவர், ஸ்ரீ ஆதிசங்கரரால், சீடராக ஆசிர்வதிக்கப்படுவதற்கு முன்,  ஒரு பெரியவரிடம், ஸ்ரீ நரசிம்ஹ மந்திரத்தை உபதேசம் பெற்றிருந்தார். 

அதை ஸ்மரணம் செய்து, எப்படியாவது ஸ்ரீ நரசிம்ஹ பகவானை தரிசனம் செய்ய வேண்டும் என்கிற வைராக்கியத்தில் இருந்து வந்தார். 

அதனால், ஒரு காட்டில், அமைதியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே அமர்ந்து, நரசிம்ஹ மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தார். சனந்தரை, தினமும் ஒரு வேடன் ஆச்சரியத்துடன் பார்த்துவந்தான். 

 ஒரு நாள்,  அதீத ஆவலால், அவரை அணுகினான். 

'சாமீ எதுக்காக தவஞ்செய்யறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?' என்று கேட்டான். 

' நரசிம்ஹனைத் தேடிக்கொண்டிருக்கிறேன்'

'நரசிம்மனா? அது யார் சாமீ?'

'உனக்கு புரியாதப்பா'

'புரிஞ்சுக்கிறேன் சாமீ. சும்மா சொல்லுங்க'

'மனித உடலும், சிங்க முகமும் கொண்ட ரூபமப்பா. அவரைத் தேடித்தான் வந்திருக்கிறேன்' 

'இத்தன நாளா இந்தக் காட்டுல இருக்கேன். அப்படி ஒரு ஜீவன நா பாத்ததில்ல சாமீ' என்றான். 

ஆனால், சனந்தர், பிடிவாதமாக ஸ்ரீ நரசிம்ஹரின் ரூப லாவண்யத்தை விளக்கிக் கூறி, தான் தரிசிக்கவே தியானம் இருப்பதாகக் கூறினார்.     

'சாமீ, இவ்வளவு தூரம் நீ சொன்னதால,  நா, அந்த மிருகத்த தேடி,   பொழுது சாயரதுக்குள்ள உங்கிட்ட கொண்டு வந்து நிறுத்தறேன். அப்படி கிடைக்கலேன்னா, உயிர விட்டுடறேன்.'

தனக்குள் சிரித்துக் கொண்டார், சனந்தர். 

இப்படி கூறிச் சென்ற வேடன், அன்று முழுவதும் நீர், அன்னம் மறந்து, அவர் கூறிய அந்த மிருகத்தைக்  காணும் வேட்கையிலேயே அலைந்து திரிந்தான். 

அந்தி சாயும் வேளை நெருங்கியது. வேடனுக்கு நம்பிக்கை குறையத் தொடங்கியது. 

காட்டுக் கொடிகளை முறுக்கி, கழுத்தில் கட்டிக்கொண்டு, உயிரை மாய்த்துக் கொள்ள எத்தனித்தான். 

அப்பொழுது, ஸ்ரீ நரசிம்ஹர், வேடனுக்கு முன்பு பிரசன்னமானார். 

'அட பாழும் மிருகமே, இத்தன நாளும் இந்த காட்டில தான் இருக்கியா? வா என்னோட' என்று கூறியபடி, கையிலிருந்த முறுக்கிய கயிற்றினை, ஸ்ரீ நரசிம்ஹ பகவானின் மேல் போட்டு, தர தர வென்று சனந்தரிடம் இழுத்துச் சென்றான். 

'சாமீ... நீ சொன்னது தான் சரி.இதோ பாரு நீ கேட்ட மிருகத்த புடிச்சு கொண்டு வந்துட்டேன். இத்தன நாளு இந்த மிருகம் எப்படி என் கண்ணுல படாம போச்சு. புரியலையே'

சனந்தர், வேடனை நோக்கினார். வேடன், கையில் காட்டுக் கொடி யுடன் எதையோ பிடித்துக் கொண்டிருந்த பாவனையுடன் காணப்பட்டான். 

'ஏனப்பா, என் கண்களுக்கு ஒன்றுமே தெரியவில்லையே? எங்கேயப்பா என் தெய்வம்?'

'அட போ சாமீ. எத்தன நேரமா இத கஷ்டப்பட்டு அடக்கி வச்சிருக்கேன். நீ என்னமோ தெரியலன்னு சொல்றியே '

அந்த சமயத்தில், கானகமே நடுங்கிப்போகும் வகையில் ஸ்ரீ நரசிம்ஹ பகவான் ஹுங்காரம் செய்தார். 

சனந்தரின் கண்களில் கண்ணீர் ஆறாகப் பெருகியது. 

'பகவானே, இத்தனை நாட்களும்  உங்களையே தியானித்திருந்தேனே. என் கண்களுக்கு காட்சி கொடுக்காமல், இந்த வேடனுக்கு அருள் பாலித்திருக்கிறீர்கள் ' என்று பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். 

அப்பொழுது அசரீரி ஒலித்தது. 

'சனந்தா, ஒருவன் விடாமல்  நூறு வருடங்கள் பகவத் தியானம் செய்தால் என்ன பலன் சம்பவிக்குமோ அந்த பலன் இந்த வேடனுக்கு ஒரு நாளிலேயே கிடைத்து விட்டது.  இவன் என்னைத் தவிர வேறு சிந்தனை இல்லாமல் தனக்கு தோன்றிய ரூபத்தையே மனதில் இருத்தி, என்னைத் தேடி அலைந்தான். நான் வரவில்லையென்றால், தன் உயிரையே மாய்த்துக் கொண்டிருப்பான்.  அவனால் தான் உனக்கு என் சப்தத்தைக் கேட்கும் பாக்கியமாவது உண்டானது. உனக்கு மந்திரம் சித்தியாகி விட்டது. உனக்கு எப்பொழுது தேவையோ அப்பொழுது வருவேன் ' என்று அனுக்கிரகம் செய்து விட்டு மறைந்து போனார்.

சனந்தரின் கண்களுக்கு, வேடனே, தெய்வத்தை உணரச் செய்த  குருவாகத் தோன்றினான். 

என்ன வாசகர்களே, ஒன்று புரிகிறதா? எனக்கு உடல் நலம் இல்லை, பண வசதி இல்லை, தொலைவில் இருப்பதால் வண்டி வாகனம் ஏறிச் சென்று கடவுளை தரிசனம் செய்ய முடியவில்லை என்று ஆதங்கப்படவே வேண்டாம். முழு மனதோடு,  மனம் ஒன்றி பகவானை வேண்டிக்கொண்டால், ஆத்மானுபூதி    நிச்சயம் கைகூடும் என்பது புரிகிறதல்லவா? 

மாலதி சந்திரசேகரன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com