முருகப் பெருமானும், வைகாசி விசாகமும்

வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தை, வைகாசி விசாகம் என்று கூறுகிறோம்.
முருகப் பெருமானும், வைகாசி விசாகமும்

வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரம் கூடி வரும் தினத்தை, வைகாசி விசாகம் என்று கூறுகிறோம். இந்த நன்னாளில்தான், ஸ்ரீ முருகப் பெருமானின் அவதாரம் நிகழ்ந்தது என்று புராணங்கள் கூறுகின்றன. 

சூரபத்மன் என்னும் அரக்கன், ஒரு அபூர்வமான வரத்தினைப் பெற்றிருந்தான். அதாவது, பெண் சம்பந்தம் இல்லாமல் பிறந்த, சிவனுக்கு ஒப்பான ஒருவரால்தான் தன்வாழ்வு முடிய வேண்டும் என்பதுதான் அந்த வரம். 

அப்படி ஒருவர் பிறந்து வந்து தன்னை அழிக்க முடியாது என்கிற மமதையில், தேவர்களுக்கு மிகவும் தொல்லைகள் கொடுத்து வந்தான். தேவர்கள், தங்களின் குறையை,  சிவபெருமானிடம் வெளிப்படுத்தினார்கள். 

அவர், தன் நெற்றிக்கண்ணில் இருந்து, ஆறு பொறிகளை உண்டாக்கினார். அந்தப் பொறிகளை, வாயு பகவான், சரவணப் பொய்கையில் கொண்டு சேர்த்தார். அந்தப் பொறிகள், தடாகத்தில் இருந்த ஆறு தாமரை மலர்களை அடைந்ததும், ஆறு குழந்தைகளாக மாறின. இவ்வாறு அமைந்த அவதார தினம்தான் வைகாசி விசாகம் என்னும் உன்னதமான திருநாள்.  அக்குழந்தைகளை பரிபாலனம் செய்ய, ஸ்ரீ பிரும்மா, ஆறு கார்த்திகைப் பெண்களை அனுப்பி வைத்தார். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டவராதலால், கார்த்திகேயன் என்று போற்றப்படுகிறார் முருகப் பெருமான். 

ஆறு குழந்தைகளையும், ஸ்ரீ பார்வதி தேவி ஒன்றாக அணைக்க, ஆறு முகங்கள், பன்னிரெண்டு கைகளுடன் ஆறுமுகனாகக் காட்சி கொடுத்தார். தேவர்களின் சேனைக்கு அதிபதியாக இருந்ததால், தேவசேனாதிபதி என்று அழைக்கப்படுகிறார். ஸ்ரீ முருகப்பெருமான், பெண் சம்பந்தம் இல்லாமல் தோன்றி, சூரபத்மனை வதைத்தது தனி கதை. 

வேறு என்ன சிறப்பம்சம்? 

புத்த பிரான் ஆனவர், வைகாசி மாதம், பௌர்ணமி அன்று அவதாரம் செய்தார். அன்றைய தினம் விசாக நட்சத்திரம் என்பது கூடுதல் தகவல்.

எமதர்ம ராஜனுக்கு உகந்த நாளாம் வைகாசி விசாகத்தில், அவரை வழிபட்டால், நீண்ட ஆயுளைப் பெறலாம். அவருக்கென்றே ஸ்ரீவாஞ்சியத்தில் ப்ரத்யேகக் கோயில் உண்டு. 

வைகாசி விசாகத்தன்றுதான் அர்ஜுனன், பாசுபதாஸ்திரம் பெற்றான். 

அன்றைய தினத்தில், கோயிலுக்குச் சென்று, முருகப் பெருமானை வழிபடுதல் கூடுதல் பலனைத்தரும். 

விக்னங்களைத் தீர்க்கும் விசாகப் பெருமானை, ஆதி சங்கரர் அருளிய ஸ்ரீ சுப்ரமணிய புஜங்கம் ஸ்தோத்திரம் சொல்லி ஆராதித்தால் வேண்டிய அனுக்கிரகங்களைப் பெறலாம். 

அன்றைய தினம், கீழ்க்கண்ட துதியை குறைந்தது பதினெட்டு முறை கூறினால், சங்கடங்கள் விலகி, வாழ்வில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும். 

'விசாகம் ஸர்வ பூதாநாம் ஸ்வாமிநம் க்ருத்திகா ஸுதம் 

ஸதா பாலம் ஜடாதாரம் ஸ்கந்தம்  வந்தே சிவாத்மஜம்.'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com