சூரிய புத்திரன் சனைச்சரன்! 

நவக்கிரங்களில் எந்த கோளுக்கு பயப்படுகிறோமோ இல்லையோ, ஒரு கோளின்
சூரிய புத்திரன் சனைச்சரன்! 

நவக்கிரங்களில் எந்த கோளுக்கு பயப்படுகிறோமோ இல்லையோ, ஒரு கோளின் பெயரைக் கேட்டாலே, சப்த நாடியும் ஒடுங்கிவிடும். புரிந்திருக்குமே! அதுவேதான். ஆம். ஈஸ்வரப் பட்டத்தையும் பெயரோடு சேர்த்து, நம்மால் வணங்கப்படும், வெரி வெரி இம்பார்ட்டன்ட் கடவுளான ஸ்ரீ சனைச்சரன் தான். 

ஸ்ரீ சூர்ய பகவானுக்கும், தக்ஷ புத்ரி, சந்தியா தேவிக்கும், வைவஸ்வத மனு, யமதர்மன், யமுனா ஆகியவர்கள் பிறந்தார்கள். நாளுக்கு நாள், சூரியனின் உக்கிரகம் அதிகமாகிக் கொண்டே வந்ததால், அந்த உஷ்ணத்தை சந்தியா தேவியால் தாங்க முடியவில்லை. அதனால், சந்தியா தேவி, தன்னைப் போலவே ஒரு நிழல் உருவத்தை உண்டாக்கி, ஜீவன் கொடுத்து, அதற்கு சாயா எனப்பெயரும் சூட்டினாள். தான் பெற்ற குழந்தைகளை, சாயாவிடம் ஒப்படைத்துவிட்டு, சிவ தியானத்தில் ஈடுபட, கானகம் சென்றாள், சந்தியா. தன் மனைவியானவள், சந்தியா அல்ல நிழல் உருவினள் என்பதை அறிந்திராத சூரியன், சாயாவுடன் சந்தோஷமாகக் காலத்தைக் கழிக்கலானான். 

சாயா, ஸ்ரீ சிவபெருமான் மேல் அதீதமான பக்தி கொண்டவளாக விளங்கினாள். அதிகமான சூரிய உஷ்ணத்தில் தன்னை வருத்திக்கொண்டு, சிவ தியானத்தில் மூழ்கிவிடும் வழக்கத்தைக் கொண்டிருந்தாள். கருவுற்றிருந்த சமயத்திலும் அவ்வழக்கத்தை, அவள் கை விடவில்லை. (அதனால்தான், கருவிலிருந்த சிசு கருத்த நிறத்தில் பிறந்தது என்று குறிப்புகள் தெரிவிக்கின்றன). 

ஸ்ரீ சூரியனுக்கும், சாயா தேவிக்கும், வைகாசி மாதம், அமாவாசையன்று, மூத்த புதல்வனாக, ஸ்ரீ சனைச்சரன் பிறந்தார். இரண்டாவதாக தப்தி (நதி ரூபம்) பிறந்தாள். ஸ்ரீ சனைச்சரன் பிறந்த  அன்றைய தினமே, சனைச்சர  ஜெயந்தி ஆகக் கொண்டாடப்படுகிறது. தென் இந்தியாவில், இந்நாள் விமரிசையாகக் கொண்டாடப்படுவதில்லை. ஆனால், வட இந்தியாவில், இந்நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம்,  பக்தர்கள்,  பகல் முழுவதும் உபவாசம் இருந்து, சனி பகவானை தரிசனம் செய்துவிட்டுதான் ஒரு வேளை மட்டும் ஆகாரம் உட்கொள்கிறார்கள். 

மகராஷ்டிரா மாநிலத்தில், அகமத் நகர் மாவட்டத்திலிருந்து, முப்பத்தைந்து கிலோ மீட்டர் தொலைவில், 'சனி சிங்கனாப்பூர்’ என்னும் இடத்தில், ஸ்ரீ சனைச்சரனுக்கு  பிரம்மாண்ட கோயில் இருக்கின்றது. இங்கு பகவான், கருப்பு நிற ஸ்வயம்பு கல்லாக ,கலியுகம் தொடங்கிய நாளிலிருந்து,எழுந்தருளி, அருள் பாலித்து வருகிறார். அன்றைய தினம், லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். 

ஸ்ரீ சனைச்சரனுக்கு, கருப்பு வஸ்திரம், கருப்பு எள், கருப்பு எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய் ஆகியவை உகந்தது, ஆகையால், அவற்றை பகவானுக்கு சமர்ப்பிக்கிறார்கள். 

இக்கோயில், 'ஜாக்ருத் தேவஸ்தான்’ என்று வழங்கப்படுகிறது. அதாவது, ஸ்ரீ சனைச்சரன், நித்ய ஜீவனுள்ள ஸ்வரூபியாகப் போற்றப்படுகிறார். 

தவறு செய்பவர்களுக்கு, தண்டனையை அளிக்க தவறுவதில்லை என நம்புகிறார்கள். அவ்வூரில் எந்த வீட்டிற்கும் தாழ்ப்பாள் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனால் திருட்டு பயமும் கிடையாது. தப்பு செய்பவர்கள் ஊர் எல்லையைக்கூடத்தாண்டமுடியாது என்று மார்தட்டிக் கொள்கிறார்கள். அன்றைய தினத்தில், ஸ்ரீ அனுமான் கோயிலிலும் மக்கள் க்யூ வரிசையில் தரிசனத்திற்கு நிற்பதைக் காண முடிகிறது. 

ஒருமுறை, ராவணேஸ்வரன், ஸ்ரீ சனைச்சரனை, சிறையில் அடைத்து வைத்திருந்தானாம். சீதாதேவியைத் தேடி இலங்கை சென்ற ஸ்ரீ அனுமான், ஸ்ரீ சனைஸ்வரனை அங்கிருந்து விடுவித்தாராம். அதற்கு நன்றிக்கடனாக, ஸ்ரீ அனுமானை, வணங்கி தரிசிப்பவர்களுக்கு, தன்னால் தீங்கு நேராது என்னும் வரத்தினை, ஸ்ரீ சனி பகவான் அளித்தாராம். 

எந்த வெளியிடங்களுக்குச் சென்றிருந்தாலும், ஸ்ரீ சனைச்சரனுக்கு,  உகந்த நாளான, சனிக்கிழமையன்று வீடு திரும்புதல் மிகுந்த சுபிட்சத்தைத் தரும். ஸ்ரீ சூரிய பகவானின் புத்திரர், ஸ்ரீ சனைச்சரன். ஸ்ரீ சூரிய பகவானின் மாணாக்கர், ஸ்ரீ அனுமான். இருவரையுமே இந்நன்னாளில், நமஸ்கரித்து, வேண்டிய அனுகூலங்களைப் பெறுவோம். 

- மாலதி சந்திரசேகரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com