உங்கள் பொருள் பணம் நகை எதாவது திருட்டுப் போய்விட்டதா? கவலை வேண்டாம் திரும்பக் கிடைக்க இதோ வழி!

அண்மையில் என்னுடைய குடையை தொலைத்துவிட்டேன். இதென்ன பெரிய விஷயமா என்று திகைக்கிறீர்களா?
உங்கள் பொருள் பணம் நகை எதாவது திருட்டுப் போய்விட்டதா? கவலை வேண்டாம் திரும்பக் கிடைக்க இதோ வழி!

அண்மையில் என்னுடைய குடையை தொலைத்துவிட்டேன். இதென்ன பெரிய விஷயமா என்று திகைக்கிறீர்களா? இது கடந்த பத்து ஆண்டுகளில் நான் தொலைக்கும் ஐம்பதாவது குடை. குடை மட்டுமல்ல, பர்ஸ், பென் ட்ரைவ், கைப் பை, மோதிரம், ப்ரேஸ்லெட், வாட்ச், செல்ஃபோன் என நான் தொலைத்த பொருட்களின் பட்டியலை கூற வேண்டுமானால் இந்தக் கட்டுரை சுயபுராணமாகிவிடும். இனி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், இன்னிலேர்ந்து உஷார் என்று எனக்குள் பல தடவை சொல்லிக் கொண்டாலும் ஒரு ஆப்செண்ட் மைண்டட் புரோபஸர் கடமை தவறாமல் தன் தொலைத்தலில் ஈடுபட்டுவிடுவார். ஏன் இப்படி அடிக்கடி பொருட்களை தொலைக்கிறேன் என்று அதற்கான தீர்வு ஏதேனும் இருந்தாக வேண்டும் என்று முடிவு செய்தேன். ஆனால் அந்த வழி ஈஸியாக இருக்க வேண்டும் என்று கணவரிடம் கேட்டதற்கு கடவுளே வந்தாலும் உன்னைக் காப்பாத்த முடியாது என்று கூறிவிட்டார். 

அடக் கடவுளே என்று தலையில் கைவைத்து அமர்ந்த போது, மாமியார் அவரது ஊரில் உள்ள ஒரு கோவிலைப் பட்ற்றி கூறினார். அந்தக் கோவிலில் உள்ள கால பைரவருக்கு சாம்பிராணி புகை போட்டு கும்பிட்டால் தொலைத்த பொருட்கள் எல்லாம் தானாக வந்து சேரும் என்று ஒரே போடாக போட்டார். என்ன இது அதிசயமா இருக்கே என்று அவரிடம் மேலும் சில தகவல்கள் கேட்டு தெரிந்து கொண்டேன். அந்தக் கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள துர்வாசபுரத்தில் உள்ள திருப்பாதாளேஸ்வரர் கோவில். ஈஸ்வரன் சுந்தரேஸ்வரர் அம்பாள் பாகம்பிரியாள். இந்த அம்மனை மனதார வேண்டி வழிபட்டால் திருமணத் தடை நீங்குமாம்.

இங்குள்ள கால பைரவர் மிகுந்த சக்தி வாய்ந்தவர். இந்த உக்கிரமான பைரவரிடம் என்ன வேண்டினாலும் அது நடக்கும் என்பது ஐதீகம் அல்ல உண்மை என்கிறார்கள் ஊர்க்காரர்கள். கால பைரவரின் சன்னதியில் சாம்பிராணி புகை போட்டு தொலைந்த பொருட்கள் திருடு போய்விட்ட பணம் என எதை நினைத்து வேண்டிக் கொண்டாலும், அவை எல்லாம் திரும்பக் கிடைத்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பைரவர், சம்பாசுரனை வதம் செய்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் சம்ப சஷ்டி விழா நடத்தப்படுகிறது. குழந்தைகளின் படிப்பு, குடும்ப நிம்மதி என எதை வேண்டி விளக்கு ஏற்றினாலும் அந்த பிரச்னைக்கு சரியான தீர்வு கிடைத்துவிடும் என ஊர் மக்கள் நம்புகிறார்கள். 

இந்தக் கோவிலுக்குப் போக வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த போது ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. என்னுடைய ஆட்டோகாரர் தான் பேசினார். அவர் ஆட்டோவில் தான் விட்டிருக்கிறேன் என்று கூறினார். பொருள் சிறிதாக இருந்தால் என்ன பெரியதாக இருந்தால் என்ன, தொலைத்தவனுக்குத் தானே தெரியும் அந்த வலி! அப்பாடா என்றிருந்தது. உழைத்து சம்பாதித்த பொருள் எப்படியாவது திரும்ப கிடைத்துவிடும் என்று என் அம்மா அடிக்கடி சொல்வார். இப்படி நான் தொலைத்த பல பொருட்கள் தானாகவே திரும்பக் கிடைத்துள்ளது. அதற்கு தெய்வ சக்தி நிச்சயம் துணையிருந்துள்ளது. எல்லாம் வல்ல இறைக்கு நன்றி சொல்ல உடனே புதுக்கோட்டைக்கு ஒரு டிக்கெட் எடுக்கப் போறேன் என்றேன். இரண்டு டிக்கெட்டாக எடுத்துவிடு என்றார் மாமியார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com