கைவிடப்பட்ட சிவன் கோயிலுக்கு உதவ விருப்பமா? திருப்பணிக்காகக் காத்திருக்கிறது பழமையான சிவாலயம்!

கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம் - திருக்கருகாவூர் சாலையில் எட்டு கி.மீ தூரம்..
கைவிடப்பட்ட சிவன் கோயிலுக்கு உதவ விருப்பமா? திருப்பணிக்காகக் காத்திருக்கிறது பழமையான சிவாலயம்!
Published on
Updated on
2 min read

கும்பகோணம் அருகில் உள்ள பாபநாசம் - திருக்கருகாவூர் சாலையில் எட்டு கி.மீ தூரம் சென்றவுடன் வெட்டாறு ஆற்றின் வடக்கு கரையில் இடது புறம் திரும்பினால் மாளிகைத்திடல் அடையலாம். 

ஆண்டு அனுபவிக்கக் கூடி நின்ற சொந்தங்கள், கூடிக்களித்தபின் பாராமுகம் காட்டுவதைப் போல், அனைத்துத் தரப்பிலும் தனித்து விடப்பட்டு நிற்கிறது சிவன்கோயில். திருநல்லூர் சப்தஸ்தானங்களுள் ஒன்று இந்த மாளிகைத்திடல் ஆகும். பிற தலங்கள் - திருநல்லூர், கோவிந்தக்குடி,  ஆவூர், மட்டியான்திடல், பாபநாசம், திருப்பாலைத்துறை ஆகியவையாகும். இதெல்லாம் பழங்கதையாகிப்போனது.

இந்து அறநிலையத்துறை பதிவேட்டில் மட்டுமே இக்கோயில் உள்ளது. வேறெந்த லாபமும் இக்கோயிலுக்கு இல்லை. பல ஆண்டுகளாகப் பராமரித்து வந்த குடும்பம் நொடித்துப் போன நிலையிலும், பிற நபர்களின் உதவியைக் கோருவதில் ஈடுபாடு காட்டாமல் உள்ளது.  

இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியில் இயற்கை தன் கைங்கர்யத்தை ஆரம்பித்துவிட்டது. பூச்சுக்கள் முற்றிலும் உதிர்ந்துவிட்டன. செடிகளும் மரங்களும் வளர்ந்து விரிசல்களும் இடிபாடுகளும் நித்தமும் முன்னேற்றம் காண்கிறது. இங்கு கிழக்கு நோக்கிய மூன்று நிலை முதன்மை கோபுரத்துடன் உள்ளது சிவன்கோயில். பெரும்பாலான நேரங்களில் பூட்டப்பட்டே இருக்கும். கோயில் அருகில் இருக்கும் சாமிநாதன் என்ற பெரியவர்தான் கோயிலைப் பார்த்துக்கொள்கிறார்.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் மராட்டியர் காலத்தில் கட்டப்பட்டகோயில். முழுவதும் செங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. கோபுரம் விரிசல் காண ஆரம்பித்துவிட்டது. முகப்பு மண்டபம் இறைவன் இறைவி இருவரது கருவறைகளை இணைக்கிறது.

இறைவன் சுந்தரேசுவரர் கிழக்கு நோக்கியும், இறைவி சௌந்தர்யநாயகி தென்முகம் கொண்டுள்ளார்.

இக்கோயில் வெட்டாற்றின் வட கரையில் உள்ளது. திருக்கருகாவூர் தென் கரையில் உள்ளது. அங்கே கூடும் கூட்டமென்ன, கொண்டாட்டமென்ன, அன்னதான திட்டமென்ன, 100 மீட்டர் இக்கரையில் சிதைந்து நிற்கும் இக்கோயிலைக் காண்பதற்கே ஆளில்லை.

கோயிலில் நடமாட்டமே இல்லாததால் தென்புறம் உள்ள வில்வமரத்தில் பழங்கள் நூற்றுக்கணக்கில் சிதறிக்கிடக்கின்றன. கருவறை கோட்டத்தில் தென்முகன், சங்கு சக்கரங்களுடன் கூடிய துர்க்கை இருவர் மட்டுமே உள்ளனர்.

பின்புறம் உள்ள மேற்கு திருமாளிகை பத்தியில் கம்பீரமான பெரிய விநாயகர் உள்ளார். அருகில் சிவலிங்கம் அதன் அம்பிகையும் உள்ளனர். அருகில் சிதைந்த நிலையில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ள சன்னதி. அடுத்தாற்போல் வாகன மண்டபம், அதில் மயில், சூரன், ரிஷப வாகனங்கள் உடைந்து கிடக்கின்றன. வடகிழக்கில் மகிஷாசுரமர்த்தினி, அம்பிகை இன்னும் சில சிலைகள் கிடத்தப்பட்டுள்ளன. மிகுந்த அழகுடன் பைரவர் மேற்கு நோக்கி அருள்புரிகிறார். அருகில் சூரியன் உள்ளார்.

தேவைகள்
1. உடனடி உழவாரபணிகள்

2. தினசரி வழிபாடு 

3. திருப்பணி

- கடம்பூர் விஜயன் - 7639606050.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com