குடிமல்லத்தில் அருளும் தொன்மையான சிவலிங்கம்

குடிமல்லத்தில் அருளும் தொன்மையான சிவலிங்கம்

நம் நாட்டில் சிறப்பாகப் போற்றி வழிபடப்பெறும் தெய்வ வடிவங்களில் ‘சிவலிங்கம்’

நம் நாட்டில் சிறப்பாகப் போற்றி வழிபடப்பெறும் தெய்வ வடிவங்களில் ‘சிவலிங்கம்’ சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. 

சிவலிங்கம் : ஆலயங்களில் எழுந்தருளி அருள்புரியும் சிவலிங்க வடிவின் அடிப்பகுதி சதுரமாக இருக்கும். இப்பகுதி ‘பிரம்ம பாகம்' எனப்படும். ஆவுடையாருடன் இணையும் பகுதியை "விஷ்ணு பாகம்' என்பார்கள். நாம் வழிபடப்பெறும் பகுதி ‘ருத்ர பாகம்' என அழைக்கப்படுகிறது. லிங்க வடிவில் சிவன், சக்தி, பரநாதம், பரவிந்து, சதாசிவன், மகேசன், உருத்திரன், மால், அயன் ஆகிய ஒன்பது வடிவங்களைத் தன்னுள் கொண்டதாக விளங்குகிறது. ‘பரமசிவன்' எனவும் போற்றி அழைக்கப்படுவதாக ‘திருமந்திரம்' பாடல் (1776) விளக்குகிறது. 

சிவலிங்க வடிவினை பலவகைகளில் போற்றி வழிபடுகிறோம். கருவறையின் மேல் உள்ள விமானம் ‘ஸ்தூல லிங்கம்' எனக் கூறுவர். கருவறையில் வழிபடப் பெறுவது ‘சூக்குமலிங்கம்' எனப்படுகிறது. கல்லிலே ஆகம, சிற்ப இலக்கணங்களுக்கு ஏற்பச் செய்யப்படும் லிங்கம், ‘மானுஷலிங்கம்' எனப்படும். லிங்க பாணத்தில் சிறு சிறு லிங்க வடிவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இதனை, ‘108 லிங்கம்', ‘1008 லிங்கம்' (சஹஸ்ரலிங்கம்) என அழைத்துப் போற்றி வணங்குகிறோம். லிங்க நாளத்தின் ருத்ர பாகத்தில் நான்கு முகங்களாக, சத்யோஜாதம், வாமதேவம், தத்புருஷம், அகோரம் ஈசானம் (தலைப்பகுதி) என்றபடி அமைக்கப்பட்டிருக்கும். இவ்வடிவினை ‘சதுர் முகலிங்கம்' என அழைப்பர். 

இதுபோன்ற வடிவமைப்புள்ள திருமேனியை ‘சதாசிவமூர்த்தி' என்றும் அழைப்பர். காஞ்சிபுரத்தில் ஆதிபீட பரமேஸ்வரி கோயிலின் -ருத்ர பாகத்தில் தேவியை அமர்ந்த கோலத்தில் காணலாம். இதனை, ‘சக்தி லிங்கம்' என்பர். 

இவ்வாறு சிவலிங்கத் திருமேனியை பல்வேறு வடிவமைப்புகளில் வழிபட்டாலும் சென்னைக்கு அருகில் ‘குடிமல்லம்' என்ற ஊரில் ‘பரசுராமேசுவரர்' கோயிலில் வழிபடப்பெறும் திருமேனி அற்புதமானது! மிகவும் தொன்மையான வரலாற்றுச் சிறப்புடையது!

சென்னை- திருப்பதி செல்லும் சாலையில் ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கில் சுமார் 12 கி.மீ. தொலைவில் சுவர்ணமுகி ஆற்றின் கரையில் "குடிமல்லம்' என்ற திருத்தலம் அமைந்துள்ளது.

திருக்கோயில் அமைப்பு : கிழக்கு நோக்கிய திருக்கோயில்! கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. தட்சிணாமூர்த்தி வடிவமைப்பு சிறப்பானது. கோயிலில் நுழைந்து செல்லும் பொழுது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் "குடிபள்ளம்' எனவும் இக்கோயிலை அழைக்கின்றனர்.அம்பாள் ஆனந்தவல்லி என்று பெயர்கொண்டு, தனிச்சந்நிதியில் அங்குசம்- பாசம், அபய- வரத கரங்களுடன் அழகாகக் காட்சி அளிக்கிறாள்.

கல்வெட்டுகள் : இக்கோயில் வரலாற்றுச் சிறப்புடையது. இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இத்திருக்கோயில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்படுகிறது. 

பிற்கால பல்லவ மன்னர்கள், பாண அரசர்கள், சோழ மன்னர்கள், யாதவராயர்கள் போன்றோர் இக்கோயிலைப் போற்றியுள்ளனர் என்பதைக் கல்வெட்டுகள் அளிக்கும் செய்தியினால் அறியமுடிகிறது.

இவ்வாலயத்தில் குடிகொண்டுள்ள இறைவன், பரசுராமேசுவரமுடைய நாயனார், பரசுராம மகாதேவர் எனவும் அழைக்கப்படுகின்றார். ஆலயத்தில் விளக்கு எரிக்கவும் இறைவன் அபிஷேகத்திற்காக கிணறு அமைக்கவும் ராஜராஜசோழன் தானமளித்ததாகவும் விக்கிரமசோழன் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாகவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

அற்புத சிவலிங்கம் : இவ்வாலயத்தின் கருவறையில் அற்புதமான சிவலிங்கத்திருமேனி வழிபடப்படுவதைக் காணலாம். சிவலிங்க பாணத்தில் சிவபெருமான் மனித உருவத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வலது கரத்தில் உயிரற்ற ஆட்டினை தலைகீழாகப்பிடித்துக் கொண்டிருக்கிறார்.இடது கரத்தில் வாய் குறுகிய குடுவை ஒன்றினைப் பிடித்தபடி, இடது தோளின் மீது "பரசு' என்னும் கோடரியை சாய்த்து வைத்துக் கொண்டிருக்கும் கோலத்தைக் காணலாம். தலையில் ஜடாபாரம் என்ற வகையில் முடி அலங்காரம். காதுகளில் பத்ரகுண்டலங்கள். மலர்ந்த அருள் வழங்கும் முகத்தோற்றம்!

பிட்சாடனர் போல ஆடையில்லாத வடிவம். அவருடைய காலின் கீழே யக்ஷன் காலை மடக்கி அமர்ந்து குனிந்த நிலையில் இறைவனைத் தாங்கிக் கொண்டிருக்கிறான். சிவலிங்கத்தின் உச்சிப்பகுதி உருண்டையான ருத்ரபாகத்துடனும் பின்பகுதி பட்டையான வடிவமைப்புடனும் காணப்படுகிறது.

சிவலிங்கத்தில் பொதுவாக, ஆவுடையார் பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். இக்கோயிலில் சிவலிங்கத்தின் கீழ்பாகம் வட்டவடிவமாக கற்களால் ஆன பீடத்தில் சொருகி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘அர்க்க பீடம்' என்று பெயர்.

தொல்லியல் ஆய்வு : இக்கோயிலைச் சீரமைக்கும் பொழுது நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப்பொருள்கள், கல்வெட்டுகள் கிடைத்தன. குடிமல்லம் பரசுராமேசுவரர் ஆலயத்தில் காணப்படும் சிவபெருமானது வடிவம் கி.மு. 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்றும் மிகவும் தொன்மையான வடிவம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

சைவசமயத்தில் பாசுபதம், மாவிரதம், காபாலிகம், வாமம், பைரவம் என்ற பிரிவுகள் உண்டு. "பாசுபதம் என்பது தொன்மையான வழிபாடாகும். குடிமல்லம் கோயிலில் காணப்படும் வடிவத்தின் வழிபாடு, பாசுபத சித்தாந்த வழிபாட்டு முறையினை அடிப்படையாகக் கொண்டது எனக் கருதப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு: 99620 04544.

- கி. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com