முகப்பேர் ஸ்ரீபஞ்சமுக சிவ ஆலயத்தில் மஹாசிவராத்ரி பூஜை!

தடைகளைப் போக்கி நன்மை பயக்கும் முகப்பேர் ஸ்ரீ பஞ்சமுக சிவன்
முகப்பேர் ஸ்ரீபஞ்சமுக சிவ ஆலயத்தில் மஹாசிவராத்ரி பூஜை!

முகப்பேர் மேற்கு 3வது பிளாக் எண்-801ல் அமைந்துள்ளது பஞ்சமுக சிவ ஆலயம். இந்த இடத்தில் அரசர்கள் ஆட்சி புரிந்த காலத்தில் ‘புத்திரகாமேஷ்டி யாகம்’ நடந்துள்ளதால் மகப்பேறு என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

காலப்போக்கில் அது முகப்பேறு என்று அழைக்கலாயிற்று. இதன் அடிப்படையிலேயே, ஸ்ரீ பஞ்சமுக சிவ ஆலயம், ஸ்ரீசந்தான சீனிவாச பெருமாள், ஸ்ரீகற்பகேஸ்வரர், ஸ்ரீமார்கண்டேஸ்வர் என இங்குள்ள ஆலயங்கள் அமைந்துள்ளன.

ஸ்ரீ பஞ்சமுக சிவ ஆலயம் சிறிது வித்தியாசனான அம்சத்துடன் விளங்குகிறது. பொதுவாக எல்லா இடங்களிலும் லிங்க ஸ்வரூபமாகக் காட்சி அளிப்பார் சிவன், இங்கு ஐந்து திருமுகங்களுடன் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ காமேஸ்வரர் இவருடைய திருமேனி காசி-ஷேத்திரத்தில் வடிக்கப்பட்டு இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

இந்த பஞ்சமுக சிவ ஆலயத்தில் ஸ்வாமியின் திருநாமம் ஸ்ரீ (புத்ர) காமேஸ்வரர் என்றும், அம்பாள் காமேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். சிவ பெருமான் மற்றும் அம்பாளின் உருவங்கள் கருப்பு பளிங்கு கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீ காமேஸ்வராரின் திருமுகங்கள் ஈசான முகம், தத்புருஷ முகம், அகோர முகம், வாமமேவ முகம், சத்யோஜாத முகம் என்றும், ஸ்ரீவித்யா உபாசனையின் சிரியானந்த ஸ்வகுரு, பரமகுரு, பரமேஷ்குரு, பராபரகுரு மற்றும் பஞ்சபூத ஷேத்திரங்களான காஞ்சி, காளஹஸ்தி, சிதம்பரம், திருஆணைக்கா, திருஅண்ணாமலை ஆகியவைகளை குறிக்கும் விதமாய் அமைந்துள்ளது.

ஈசனின் அழகிய திருமுகம் பிறை சந்திரனுடனும், ஜடாமுடியுடனும் இருப்பதோடு மட்டும் இல்லாமல், சத்யோஜாதம் என்ற முகத்தின் திருமுடியில் ஒரு முக்கோண வடிவம் அமைந்துள்ளது. இந்த முக்கோண வடிவு அம்பாளுடைய நவாவரண பூஜையில் அதி முக்கியமான இடம். திதி நித்யா தேவிகளும், ஸ்ரீகுருமண்டலம் மற்றும் நடுபிந்து ஸ்வரூபத்தில் சிந்தாமணி க்ரஹத்தில் அம்பாள் அமர்ந்திருப்பாள்.

திரிகோணபிந்து ஸ்தானத்தில் எப்போதும் கங்கா நீர் கொட்டும்படி தாராபத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சன்னதியானது மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ஸ்ரீகாமேஸ்வரி அழகும், அருளும் கொப்பளிக்கும் சிரித முகமும் வலது கையில் அங்குசமும், மற்றொரு வலது கையில் கொஞ்சும் கிளியும், இடது கையில் பாசமும், மற்றொரு இடது கையில் கரும்புடனும், இடது காலை மடித்தும் வலது காலை தொங்கவிட்டுக் கொண்டும் அருள் பாலிக்கிறாள்.

அம்பாளுக்கு அருகில் நீண்ட நாட்கள் பூஜை செய்த ஒரு அடி உயரம் கொண்ட பூர்ண மஹாமேருவை தந்து ஈஸ்வரர் அனுக்கிரகத்தைப் பெற்றுள்ளனர். ஸ்ரீகாஞ்சி காமாட்சி சன்னதியில் ஸ்ரீசக்கரமும், மாங்காடு காமாட்சி சன்னதியில் அர்த்த மேருவும், ஸ்ரீகாளிகாம்பாள் சன்னதியிலும், ஸ்ரீ காமேஸ்வரி சன்னதியிலும் பூர்ண மஹாமேருவும் அமைந்துள்ளது.

பூர்ண மேருவில் ஒவ்வொரு ஆவரணங்களும் நன்கு விரிந்த நிலையில் அந்த தேவதைகளை நினைத்து ஒவ்வொரு புஷ்பம் வைத்து பூஜை செய்ய ஏற்றபடி அமைக்கப்பட்டுள்ளன. அம்பாளுக்கு நவாவர்ணபூஜையும், ஹோமமும், பவுர்ணமி, அஷ்டமி, சதுர்தசி, அமாவாசை ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. காலை, மாலை வேளைகளில் லலிதா சஹஸ்ரநாமமும், திரிசதி பாராயணமும் நடைபெறுகிறது. ஸ்ரீசங்கடஹர துர்க்கை திருவுருவம் வெள்ளை பளிங்கு கல்லால் செய்யப்பட்டுள்ளது. சிம்ம வாகனத்தின் மீது எட்டு கைகளுடன் அமர்ந்து காட்சி தருகிறாள்.

ஸ்ரீவித்யா மஹாகணபதியானவர் கையில் ஏட்டுச் சுவடியுடன் வீற்றிருப்பதால், குழந்தைகளின் படிப்பு முன்னேற வேண்டும் என்பதற்கு தொடர்ந்து 21 நாட்கள் சுற்றிவர வேண்டும். ஸ்ரீவள்ளி தெய்வானையுடன் கூடிய ஞானஸ்கந்தப் பெருமானை, நமக்கு கவலைகள் நீங்க பரிபூர்ண அருளும், மன அமைதியும் ஏற்பட வழிபட வேண்டும். ஸ்ரீதுர்க்கை சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசித்த தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால், மந்திர சித்தியும், குருதோஷம் நீங்கி குருகடாட்சமும் ஏற்படும்.

இந்த ஆலயத்திற்கு வருவதால் பஞ்ச பூத ஷேத்திரங்களை தரிசித்த புண்ணியம் ஏற்படுகின்றது. இந்த ஆலயத்தில் சக்தி வாய்ந்த யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் நீண்ட நாட்களாக தடைபட்டு வரும் திருமணம் நடக்க, ஆண் பெண் இருபாலரும் தங்கள் ஜாதகங்களை வைத்து வேண்டிக் கொள்ள, திருமணத்தடை நீங்கி திருமணம் கைகூடும் என்பது பலர் கண்ட உண்மை.

ஸ்ரீகாமேஸ்வரரை வேண்டிக் கொள்வதால், புத்ரதோஷம் நீங்கி குழந்தை பிறக்கும். மேலும், பிரதோஷ காலத்தில் தொடர்ந்து 11 பிரதோஷம் தரிசிப்பதால், ஜாதகத்தில் உள்ள பித்ருதோஷம் நீங்கி ஏற்றம் பெறுவர். லக்னத்திற்கு 5-ம் இடத்தில் (குருவும், கேதுவும் சேர்ந்து இருப்பது) ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

ஸ்ரீ பஞ்சமுக சிவாலயத்தில் மார்ச் 10ம் தேதி சிவராத்திரி வைபவம் 6 கால பூஜையுடன் சிறப்புடன் நடைபெறும்.

மேலும் விபரங்களுக்கு – வேணுகோபால், அலைபேசி எண் 9444929154

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com