குருகாவலப்பரின் மாசிமக உற்சவம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரத்திற்கு அருகிலமைந்துள்ளது குருகாவலப்பர்
குருகாவலப்பரின் மாசிமக உற்சவம்!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சோழபுரத்திற்கு அருகிலமைந்துள்ளது குருகாவலப்பர் திருக்கோயில். ஸ்ரீ நாதமுனிகள் சீடரான குருகைக்காவலப்பரிடம் இக்கோயில் ஒப்படைக்கப்பெற்று குருகைக்காவலப்பர் கோயிலெனத் திகழ்ந்து தற்போது குருகாவலப்பர், குருவாரப்பர் கோயில் என அழைக்கப்படுகின்றது. குறைவற்ற யோகத்தினால் எம்பெருமானைக் கண்ணாரக்கண்டு போற்றியவர் குருகைக்காவலப்பர்.

குருகாவலப்பர் திருக்கோயில் கிழக்குதிசை நோக்கியுள்ளது. எம்பெருமான் திருநாமங்கள்: வேதநாராயணன், வீரநாராணன் என்பதாகும். நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். தாயார் திருநாமங்கள்: வேதவல்லி, மரகதவல்லி ஆகும். யோகவர்த்தன விமானம். 

ஸ்ரீ வேதநாராயணப்பெருமாள் ஒவ்வோர் ஆண்டும் மாசிமகத்தன்று கொள்ளிடக்கரையில் தீர்த்தவாரி கண்டருள்வது வழக்கம். அன்று விடியற்காலை 3.00 மணிக்கு பல்லக்கில் எம்பெருமான் புறப்பாடு கண்டருளி சுமார் நான்கு மணிநேரகாலம் பல்லக்கில் பவனிகண்டு குறிப்பிட்ட இடத்திற்கு சென்று சேருவார். தீர்த்தவாரி முடிந்தபின் அங்குள்ள மண்டபத்தில் எம்பெருமானை எழுந்தருளப்பண்ணி திருமஞ்சனாதி உபசாரங்களைச் செய்துவைப்பர்.  அன்று மாலை எம்பெருமான் அந்த ஊர் அக்ரஹாரத்திற்கு விஜயம்செய்து, திருவாராதனத்தை மண்டபத்தில் முடித்துக்கொண்டு பின்னர் அங்கிருந்து குருகாவலப்பர் கோயிலுக்கு எழுந்தருள்வார். பல வருடங்களாக கடைப்பிடிக்கப்பட்ட இந்த உற்சவ சம்பிரதாயத்தை, தற்போது சென்னை குப்புசாமி அய்யங்கார் குமாரர்கள் தொடர்ந்து அத்திருக்கோயிலிலேயே நடத்தி வருவதாகத் தெரியவருகிறது.

காஞ்சீபூர்ணர் என்று அழைக்கப்படும் திருக்கச்சிநம்பிகளான ஆசார்யப் பெருமகனார் நந்தவனங்கள், திவ்ய தேசங்கள் பல மங்களாசாஸனம் செய்தவராய் குருகாவலப்பர் கோயிலுக்கு எழுந்தருளி தமக்கும் பரமாசார்யரான நாதமுனிகள் யோகத்திலே எழுந்தருளியிருந்த ஸ்தலத்தையும் (குருகாவலப்பர் கோயிலை) சேவித்துச்சென்றார் என்ற குறிப்பை குருபரம்பரை நூல் தருகிறது.

இவ்வாறு மாசி மிருகசீரிஷத்தாரரான திருக்கச்சிநம்பிகள் மங்களாசாஸனம் செய்ததும், ஸ்வாமி தேசிகனின் திருக்குமாரர் குமாரவரதாசார்யர், பிரம்மதந்த்ர ஸ்வதந்த்ர ஸ்வாமி, மூன்று யதிவரர் அனுயாத்திரையுடன் திருக்குடந்தை தேசிகன் ஆகியோர் மங்களாசாஸனம் செய்த வேதநாராயணப் பெருமாளை மாசிமக நன்னாளாம் புண்ணிய நாளில் நினைத்துப் போற்றுவோம்.
- முனைவர் ஆ. வீரராகவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com