வங்கி கணக்குக்கு பூட்டு: இரும்பு பெட்டிக்கு சாவி!

பணமே பிரதானம் என்ற அடிப்படையில் இன்று எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம்.
வங்கி கணக்குக்கு பூட்டு: இரும்பு பெட்டிக்கு சாவி!

பணமே பிரதானம் என்ற அடிப்படையில் இன்று எல்லோரும் ஓடிக் கொண்டிருக்கிறோம். பணத்தின் தேடலில் நாம் தொலைத்தவற்றை பட்டியலிட்டு சொல்ல முடியாத அளவுக்கு நம் இழப்புகள் போய்க் கொண்டிருக்கிறது.

எவற்றை எல்லாம் இழக்கிறோம் என்றுகூட தெரியாத அளவில் நாம் இழந்து கொண்டிருக்கும் விலை மதிக்க முடியாதவை எத்தனை எத்தனையோ.. இயற்கை வளங்கள் தொடங்கி இனிய உறவுகள் வரைக்கும் அத்தனையையும் பணத்தின் தேடலில் தொலைக்கிற நமக்கு, இறுதியில் மிச்சம் என்ன இருக்கும். 

நாம் தேடிச் சேகரித்த பணம், இழந்த எல்லாவற்றையும் மீட்டு தந்து விடுமா என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கட்டும். அதை விட மிக கொடுமையான விசயமாக நாம் இன்று பார்த்துக் கொண்டிருப்பது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் நம் கண் முன்னே கொள்ளை போவதுதான்..

அதிலும் மக்களுக்கும் மக்களின் உடமைகளுக்கும் பாதுகாப்பு தரவேண்டிய அரசும் பொதுத்துறை நிறுவனங்களுமே அந்த கொள்ளைச் செயலில் ஈடுபடுவதுதான் வேதனையிலும் வேதனை. ஆம் வரி என்ற பெயரிலும் அபராதம் என்ற பெயரிலும் மக்களை சுரண்டத் தொடங்கியுள்ள இந்த அரசையும் பொதுத்துறை நிறுவங்களையும் ஒரு சாமானியனால் என்ன செய்துவிட முடியும் என்ற தைரியம்தான் அவர்களை அப்படிச் செய்யத் தூண்டுகிறது.  

அப்பாவின் சட்டைப்பையில் இருந்து பணம் எடுக்க மகனுக்கே உரிமை இல்லாத போது நம் பொதுத்துறை வங்கிகள் வாடிக்கையாளரின் கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு காரணங்களை மட்டும் நமக்கு சொல்வது சரிதானா...? பொதுத்துறை நிறுவனங்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்கா, அல்லது அரசுக்கு வருவாய் ஈட்டித் தருவதற்கா என்பதுதான் தெரியவில்லை.

நாட்டில் இன்றைய சூழலில் சுமார் 249 மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. ரயில், எஃகு, எண்ணெய், சுரங்க மற்றும் தாதுக்கள், விவசாயம், உற்பத்தி, கட்டுமானம், மின்சாரம், சேவை துறை, பாதுகாப்பு போன்ற துறைகள் உள்ளன. இவற்றின் மொத்த முதலீடு 5.8 லட்சம் கோடி ருபாய் ஆகும். அரசு வருவாய்க்கு இந்நிறுவனங்களின் பங்களிப்பு பெரிதும் உதவுகின்றன.

இவை மட்டுமின்றி, சுங்க வரி, கலால் வரி, நிறுவனங்களின் வருமான வரி, போன்ற பல்வேறு வரிகள் மூலமாகவும் ஈவுத்தொகை, பங்கு விற்பனை மூலமாகவும் அரசின் வருவாய்க்கு இந்த பொதுத்துறை நிறுவனங்கள் பெரும் பங்களிக்கின்றன.

அதே சமயத்தில் பொதுத்துறை வங்கிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் ரூ.5 லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளன. இவற்றில் 5 நிறுவனங்கள் மட்டும் வைத்துள்ள மொத்த கடன் பாக்கி ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஆகும். லாங்கோ, ஜி.வி.கே., சுஸ்லான் எனர்ஜி, இந்துஸ்தான் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி, அதானி குழுமம் ஆகியவைதான் அந்த 5 நிறுவனங்கள். இந்த 5 நிறுவனங்களில், அதானி குழுமம் மட்டும், நீண்ட கால கடன், குறுகிய கால கடன் என மொத்தம் ரூ.72 ஆயிரம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளது.

இந்தகடன் தொகையை வசூலிப்பதில் பொதுத்துறை வங்கிகளும் அரசும் ஆர்வம் காட்டுகிறதோ இல்லையோ சாமானியனின் பணத்தை எப்படி பறிப்பது என்பதை மட்டும் நன்கு திட்டம் போட்டு செய்து கொண்டு இருக்கிறது.  அதற்கு உதாரணம் தான்  எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணகில் குறைந்தபட்ச இருப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் இருக்க வேண்டும். அப்படி இல்லாத வங்கி கணக்குகளில் ரூ.50 முதல் 100 வரை அபராதம் வசூலிக்கப்படும் என, வங்கி அறிவித்துள்ளது.

ஒருபுறம் கருப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அனைவரும் பணமில்லா பரிவர்த்தனை செய்ய வேண்டும். வங்கிகளின் மூலமே அனைத்து செலவுகளையும் மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது. மேலும் வங்கியில் ஜீரோ பேலன்ஸ் எனப்படும், இருப்புத் தொகை இல்லாத கணக்குகளையும் மத்திய அரசு தொடங்கியது. இன்னொருபுறம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ. 150 அபராதம், வங்கியில் இருப்புத் தொகை உயர்வு போன்ற அறிவிப்புகளை வங்கிகள் வெளியிட்டு வருகிறன..

மேலும் ஒரு வங்கியில் கணக்கு வைத்திக்கும் வாடிக்கையாளர்கள் அந்த வங்கியின் ஏ.டி.எம். சேவையை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இது ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி, வங்கியில் கூடும் மக்கள் கூட்டத்தை குறைப்பதற்கான நடவடிக்கை என்றுதான் துவக்கத்தில் சொல்லப்பட்டது.  

ஆனால் நாளடைவில் சேவை என்ற வார்த்தையை மறந்து கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.களில் மாதம் 5 முறையும், மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மாதம் 3 முறையும் மட்டுமே கட்டணமின்றி பணம் எடுக்க முடியும். அதற்கு மேல் தங்களது வங்கியின் ஏ.டி.எம். சேவையைப் பயன்படுத்தினால் ஒவ்வொரு முறையும் ரூ. 20 கட்டணம் வசூலிக்கப்படும் என தனது வசூல் வேட்டையை தொடங்கியது.

வாடிக்கையாளர்கள் சேமித்து வைக்கும் பணத்தினால்தான் வங்கிகள். வங்கிகளில் வாடிக்கையாளர்கள் கணக்கு தொடங்குவதன் நோக்கமே தங்களிடம் உள்ள பணத்தை வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கும், தேவைக்கு ஏற்ப எடுத்து பயன்படுத்துவதற்கும் தான். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கட்டணமின்றி செய்து தர வேண்டியது வங்கிகளின் அடிப்படைக் கடமையாகும்.

இதை உணராமல் வட்டிக் கடை நிறுவனம் போல் வாடிக்கையாளர்களை பணம் காய்க்கும் மரமாக நினைப்பது பேராபத்தை விளைவிக்கும். இதையெல்லாம் உணாரமல் அவ்வளவு சாதாரணமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு அதை நடைமுறைப் படுத்திவிட முடியும் என்றால் ஏன் வராக்கடனை வசூலிப்பதில் வங்கிகள் இத்தனை தீவிரம் காட்டுவதில்லை என்ற கேள்வி இயல்பாகவே எழத்தான் செய்கிறது. 

எது எப்படியோ தொடர்ந்து சாமானியனின் குரல்வலையை நெரித்துக் கொண்டிருக்கும் இந்த அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் திருந்தப் போவதில்லை வழக்கம் போல் விதி என்று புலம்பும் கூட்டம் இந்த முறையும் அதே புலம்பலோடு சுருக்குப்பையையும், திண்டுக்கல் இருப்பு பெட்டியையும் தேடிச் செல்ல தொடங்கியுள்ளது. 
                                                                                 - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com