தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்புமா செங்கொடி சிங்கங்கள்? 

நாட்டில் இன்று ஒரு தொழில் தொடங்குவது போல் அரசியல் கட்சிகள் தொடங்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது. உட்கட்சியில் விரிசல் என்றால் ...
தமிழகத்தின் வெற்றிடத்தை நிரப்புமா செங்கொடி சிங்கங்கள்? 

நாட்டில் இன்று ஒரு தொழில் தொடங்குவது போல் அரசியல் கட்சிகள் தொடங்குவது சர்வ சாதாரணமாகிவிட்டது. உட்கட்சியில் விரிசல் என்றால் புதிய கட்சி தொடங்குவது பின்னர் தேர்தல் வந்து விட்டால் பூசல், விரிசல் எல்லாவற்றையும் மறந்து வாக்கு அரசியலுக்காக கூட்டணி வைப்பது என்ற நிலையிலேயே அரசியல் கள நிலவரம் தொடர்கிறது. அப்படி பிளவு பட்ட கட்சிகள் எவை எவை என்று நாம் பட்டியலிட தேவையில்லை. 

கம்யூனிச சித்தாந்தத்தில் நாம் பின்பற்ற வேண்டியது சீனாவையா, ரஷ்யாவையா என்ற கேள்வி எழுந்த போதுதான்,  சர்வதேச அளவில் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிளந்தது. அதன்பின் இந்தியாவிலும் தமிழகத்திலும், சிபிஐ, சிபிஎம் என்ற இரு கட்சிகள் உருவாகின.

70-களின் மத்தியில் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக மூத்த கம்யூனிஸ்ட் மணலி கந்தசாமி தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். மூத்த கம்யூனிஸ்ட் எம்.கல்யாணசுந்தரமும் கருத்துவேறுபாடு காரணமாக ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கினார்.

அதில் அங்கம் வகித்த தா. பாண்டியன் பின்னாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தமது யு.சி.பி.ஐ இணைத்து மாநிலச் செயலர் பதவியை பிடித்தார். அன்றில் இருந்து இன்று வரையிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பிற கட்சிகளுடன் தேர்தல் கூட்டணியை ஏற்படுத்தியுள்ளதே தவிர இரண்டும் இணைந்து தேர்தலை சந்திக்க எண்ணியதே இல்லை. 

ஒரு பொது எதிரியை வீழ்த்துவதற்கு, எதிர்க்கட்சிகள் கொள்கை வேறுபாட்டை மறந்து கூட்டணி அமைத்து களம் காண்பது என்பது புதிதல்ல. அதற்கு உதாரணமாக 1967-ம் ஆண்டு தேர்தலை குறிப்பிடலாம். ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தத்துவார்த்தப் போரின் காரணமாக இரண்டாக பிளவுபட்ட பின் நடந்த முதல் தேர்தல் அது.  காங்கிரஸ் கட்சியின் ஏகபோகத்தை முறியடிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இதர ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து இந்த தேர்தலைச் சந்தித்தன. 

இந்த தேர்தலில் திமுக, சிபிஎம், நாம் தமிழர், சம்யுக்த சோசலிஸ்ட் கட்சி, தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, இந்திய குடியரசுக்கட்சி, பிரஜா சோசலிஸ்ட் கட்சி, தமிழரசுக்கழகம், சுதந்திர கட்சி ஆகியவை கூட்டு உடன்பாட்டில் தேர்தல் களம் கண்டன. காங்கிரசை எதிர்க்க விரும்பும் சிபிஐயை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் சிபிஎம் தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய தொகுதிகளை அதற்கு விட்டுக் கொடுக்க சம்மதித்தது.

ஆனால் சிபிஐ ஏராளமான இடங்களைக் கோரியது. அவர்கள் கோரும் திண்டுக்கல், வேடசந்தூர், மதுரை மேற்கு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களை அவர்களுக்கு ஒதுக்காவிட்டால், தனித்தே போட்டியிடப் போவதாகவும் அறிவித்தனர். இதனால் அது தனித்து போட்டியிட்டது.

இதேபோல் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலின் போது உருவாக்கப்பட்டதுதான் மக்கள் நல கூட்டணி. அதிமுக, திமுக, பாஜ, காங்கிரஸ் ஆகியவற்றுக்கு மாற்றாக மதசார்பற்ற முற்போக்கு அணியை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட்களும் சில முன் முயற்சிகளை மேற்கொண்டார்கள். இதைத் தொடர்ந்து மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 4 கட்சிகளும் சேர்ந்து மக்கள் நலக்கூட்டணியை அமைத்தன. அதன் பிறகு விஜயகாந்தின் தேமுதிக, ஜி.கே.வாசனின் தமாகா ஆகிய கட்சிகளும் மக்கள் நலக்கூட்டணியோடு சேர்ந்தது. இதுஒருபக்கம் இருக்கட்டும். 

இப்போது நமது கேள்வி என்னவென்றால் சந்தர்ப்பத்துக்காக மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த இடதுசாரிகள் ஒரே கட்சியாக இணைந்து தமிழகத்தில் களம் காண முன்வராதது ஏன்? நாடு சுதந்திரம் பெற்ற காலகட்டத்தில், அன்றைய ஒன்றுபட்ட மதராஸ் மாகாணத்தில், கம்யூனிஸ்டுகளே முக்கிய எதிர்க்கட்சியாக இருந்தன.­ 1952-ம் ஆண்டு பொது தேர்தலிலும், அன்றைய ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சியாக அவர்கள் முன்னிலை வகித்தனர். இன்றைய அரசியல் சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்களிடையே அந்த நிலையை மீண்டும் எட்டுவதற்கான முன்னெடுப்புகள் இல்லாமல் போக காரணம் என்ன..? 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமைப்பு ரீதியாகவும், இயக்க  ரீதியாகவும் தொடர்ந்து ஒரு வலுவான கட்சியாகவே தன்னை அடையாளப்படுத்தி வருகிறது. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அந்த அளவிற்கு வலுவான கட்சியாக நிலை நிறுத்திக்கொள்ளவில்லை என்றே சொல்ல வேண்டும். என்றாலும் அன்றும் சரி இன்றும் சரி பெரும்பாலான நேரங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிரெதிரான நிலையிலேயே செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையை மாற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் தலைமை என்ன முயற்சி மேற்கொண்டு வருகிறது என்ற கேள்வியும்  அதற்கான அவசியம் இதுவரை ஏற்பட்டதாக கட்சி தலைமை ஏன் கருதவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

கம்யூனிஸ்ட்டுகளின் பலம் எப்போதுமே தொழிலாளர் வர்க்கம்தான் என்பதை மறந்து ஒவ்வொரு தேர்தலிலும் தன் இருப்பை காட்டிக்  கொள்வதற்காகவே ஏதோ சில கட்சிகளுடன் ஒன்றிரண்டு இடங்களை பெற்று போட்டி இடுகிறது. அண்டை மாநிலமான கேரளாவில் வலுவாக செயல்பட முடிந்த செங்கொடி சிங்கங்கள் போல் தமிழ்நாட்டில் ஏன் முடியவில்லை. நல்லகண்ணு போன்ற சுயநலம் கருதாத, மக்கள் ஏற்ககூடிய, நாட்டுக்கு உழைக்கும் நற்சிந்தனையாளர்கள் இருந்தும் அவர்களை முன்னிருத்த தயங்குவது ஏன்? காட்டுவழிப்  பயணமாக இருந்தாலும் ஊருக்குள் நுழைய வேண்டிய தருணம் ஒன்று உண்டுதானே. தமிழகத்தின் அரசியல் ஸ்திரமற்ற தன்மையை உணர்ந்து மக்கள் தேடிக் கொண்டிருக்கும் சக்திமிக்க ஒரு தலைவரை இந்த கம்யூனிஸ்ட் கட்சிகளால் அடையாளம் காட்ட முடியுமா.?

இங்கு தொழிலாளர்களின் வாக்கு வங்கியை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்து கொண்டிருக்கிறது இந்த கம்யூனிஸ்டுகள், மற்ற கட்சிகளை போல் கூட்டத்தோடு கொடி பிடிப்பதிலும் கோஷங்கள் எழுப்புவதிலுமே தன் கொள்கையை முடித்துக் கொண்டுவிடுகிறதா..

எப்போதுமே ஏழைகளுக்காகவும் ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடும் கட்சி தமிழ்நாட்டில் சில காலமாக செயல் இழந்து இருப்பதாகவே தெரிகிறது. தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், இளைஞர்கள், மாணவர், மகளிர் இயக்கங்கள் என எல்லாவற்றிலும் செஞ்சட்டை வீரர்களை பார்த்து மகிழ்ந்த ஏழைவர்க்கத்தினர் இப்போது வறண்ட பூமியின் நடுவே வானம் பார்த்து அமர்த்து, தமக்கான அசிரிரி எப்போது  ஒலிக்கும் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கிருக்கின்றன பாவம் எல்லாமும் இங்கே வாக்கு அரசியலாகிப் போனதை அறியாமால்.
                                                                               - திருமலை சோமு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com