பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில்  கழிப்பறை வசதியின்றி பொதுமக்கள் அவதி

சென்னை தாம்பரத்தை  அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி இன்றி பயணிகள்   மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதாரமற்ற கழிப்பறைகள்.   
பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் உள்ள சுகாதாரமற்ற கழிப்பறைகள்.   


தாம்பரம், நவ.18: சென்னை தாம்பரத்தை  அடுத்த பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கழிப்பறை வசதி இன்றி பயணிகள்   மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

சென்னை மாநகரின் தென்நுழைவாயிலாக பெருங்களத்தூர் உள்ளது. சென்னையிலிருந்து  தென்மாவட்டங்களுக்கு செல்வோர், அதேபோல் அங்கிருந்து சென்னைக்கு  வருவோர்  பெருங்களத்தூர்  ஜிஎஸ்டி சாலையை பயன்படுத்துகின்றனர். 

சென்னை புறநகர்ப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான பயணிகள் தென்மாவட்டங்களுக்குச் செல்ல அதிக தொலைவில்  உள்ள  கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு செல்வதில்லை. மாறாக, மாநகர பேருந்து ,மின்சார ரயில்கள் மூலம்  பெருங்களத்தூர் பேருந்து நிலையத்துக்கு வந்து அங்கிருந்து  உரிய பேருந்துகளில் ஏறிச்செல்கின்றனர். 

அதே போல் தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பேருந்துகள் மூலம் வரும் பயணிகள், பெருங்களத்தூரில் இறங்கி மின்சார ரயில், மாநகரப் பேருந்துகள் மூலம் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்கின்றனர். தாங்கள் செல்ல வேண்டிய பேருந்து வருகைக்காக பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்,  போதிய கழிப்பறை வசதி இன்றி மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக வயதானவர்கள், பெண்கள், சிறு குழந்தைகள் சிறுநீர் கழிப்பதற்கு சுகாதாரமான கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி இல்லை. 

பெருங்களத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள கழிப்பறையும் பயன்படுத்தமுடியாத அளவுக்கு சுகாதாரச் சீர்கேடுடன் உள்ளது. இதனால் பொதுமக்கள் வேறு வழியின்றி ஜிஎஸ்டி  சாலையோரம் மற்றும் பீர்க்கன்கரணை ஏரிக்கரையை  கழிப்பிடமாகப் பயன்படுத்தும் அவல நிலை நீடிக்கிறது. 

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட பேரூராட்சி உதவி செயற்பொறியாளர் மனோகரனிடம் கேட்டபோது, பெருங்களத்தூர் ஜிஎஸ்டி சாலையின் இருபுறமும் நகரத்தக்க கழிப்பறை வசதிகள் உடனடியாக  செய்து தர  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com