பகுதி - 427

அழகிய கூர்மையான வேலை ஏந்திய

பதச் சேதம்

சொற் பொருள்

சத்தம் மிகு ஏழு கடலை தேனை உற்று மது தோடு கணையை போர் கொள் சத்தி தனை மாவின் வடுவை காவி தனை மீறு

 

சத்தமிகு: ஓசை நிறைந்த; தேனை: வண்டை (தேன் என்ற சொல்லுக்கே ‘பெண் வண்டு’ என்ற பொருளும் உண்டு); மது: தேன்; தோடு: மலர்; கணையை: அம்பை; போர்கொள் சத்திதனை: போருக்கு எழும் சக்தி வேலை; மாவின் வடுவை: மாவடுவை; காவிதனை: கருங்குவளையை;

தக்க மணம் வீசு கமல பூவை மிக்க விளைவான கடுவை சீறு உதத்து உகளும் வாளை அடும் மை பாவு(ம்) விழி மாதர்

 

மிக்க விளைவான: மிக முதிர்ந்த; கடுவை: நஞ்சை; உதத்து: உதகத்து, நீரில்; உகளும்: பாயும், புரளும்; வாளை: வாளை மீனையும்; அடும்: போட்டியிடும், விஞ்சும்; மை பாவும்: மை பரவிய;

மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே

 

மத்த கிரி: மதங்கொண்ட மலை—யானை; வச்சிர கிரீடம்: வைரக் கிரீடம்; செப்பான: சிமிழ் போன்ற;

வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே

 

வஜ்ர மயில்: உறுதிமிக்கதான மயில், பச்சை மயில்;

சித்ர வடி வேல் ப(ன்)னிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார திக்கினும் நடாவு புரவிக்கார குற மாது

 

சித்ர வடிவேல்: அழகிய, கூரான வேல்; திக்கினும்: (எல்லா) திசைகளிலும்; நடாவு: செலுத்தப்படும்; புரவிக்கார: குதிரையான மயில் வாகனனே;

சித்த அநுராக கலவிக்கார துட்ட அசுரேசர் கலகக்கார சிட்டர் பரிபால லளிதக்கார அடியார்கள்

 

சித்த(ம்): உள்ளம்; அநுராகம்: அன்பு; துட்ட: துஷ்ட; கலகக்கார: போரிடுபவனே; சிட்டர்:  நல்லோர்; பரிபால: காத்தளிக்கும்; லளிதக்கார: அழகிய திருவிளையாடல்களைக் கொண்டவனே;

முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார மு-சகர் பராவு சரணக்கார இனிதான

 

தத்தை: கிளி; வனிதைக்கார: தேவசேனையை உடையவனே; முச்சகர்: மூன்று ஜகத்திலும் உள்ளவர்கள், மூவுலகத்தோர்; பராவு(ம்): போற்றும்;

முத்தமிழை ஆயும் வரிசைக்கார பச்சை முகில் தாவும் புரிசைக்கார முத்து  உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே.

 

வரிசைக்கார: சிறப்பை உடையவனே; பச்சை முகில்: கருமேகம்; புரிசை: மதில்; வேலைநகர்: கடல் சூழ்ந்த திருச்செந்தூர்; முத்தேவர்: சிவன், விஷ்ணு, பிரமா ஆகிய மும்மூர்த்திகள்;

சத்தம் மிகு ஏழு கடலைத் தேனை உற்று மது தோடு கணையைப் போர் கொள் சத்தி தனை மாவின் வடுவைக் காவி தனை மீறு.... ஒலித்து இரைப்பதான ஏழு கடல்களையும்; வண்டையும்; தேன் நிறைந்த மலரையும்; அம்பையும்; போருக்கு எழுவதான சக்தி வேலாயுதத்தையும்; மாவடுவையும்; கருங்குவளைப் பூவையும் விட மேம்பட்டனவாகவும்;

தக்க மணம் வீசு கமலப் பூவை மிக்க விளைவான கடுவைச் சீறு உதத்து உகளும் வாளை அடும் மை பாவு(ம்) விழி மாதர்.... தக்கதும் நறுமணம் வீசுவதுமான தாமரைப் பூவையும்; மிகவும் முதிர்ந்ததான விஷத்தையும்; நீரிலே சீறிக்கொண்டு பாய்ந்து புரள்வதான வாளை மீனையும் விஞ்சுவதான மை தீட்டிய கண்களையுடைய பெண்களின்,

மத்த கிரி போலும் ஒளிர் வித்தார முத்து வடம் மேவும் எழில் மிக்கான வச்சிர கிரீட நிகர் செப்பான தனம் மீதே.... மதங்கொண்ட யானையைப் போல விளங்குவதும்; ஒளிவிடுவதும்; வித்தாரமான முத்து மாலைகளை அணிந்ததும்; அழகு மிகுந்த வைரக் கிரீடத்துக்கு ஒப்பானதும்; சிமிழ் போன்றதுமான மார்பகத்தின் மீது,

வைத்த கொடிதான மயல் விட்டு ஆன பத்தி செய ஏழை அடிமைக்காக வஜ்ர மயில் மீதினில் எப்போது வருவாயே.... நான் வைத்திருக்கிற கொடிய, மயக்கத்தை விட்டு; முறையான பக்தியைச் செய்யும்படியாக ஏழையும் அடிமையுமான எனக்காக, உறுதி தருவதான பச்சை மயில் மீது ஏறிய கோலத்தில் எப்போது எழுந்தருள்வாய்?

சித்ர வடி வேல் ப(ன்)னிரு கைக்கார பத்தி புரிவோர்கள் பனுவல்கார.... அழகும் கூர்மையும் நிறைந்த வேலை ஏந்திய பன்னிரு தோள்களை உடையவனே!  பக்தி செய்வார்கள் பாடும் பாடல்களுக்கு உரியவனே!

திக்கினு(ம்) நடாவு புரவிக்கார குற மாது சித்த அநுராக கலவிக்கார.... ஒவ்வொரு திசையிலும் செலுத்தப்படுகிற புரவியான மயிலை வாகனமாக உடையவனே!  குறப்பெண்ணான வள்ளியை  மனத்தில் எழும் அன்போடு கலக்கின்றவனே!

துட்ட அசுரேசர் கலகக்கார சிட்டர் பரிபால லளிதக்கார.... துஷ்டர்களான அசுரர்களோடு போர்புரிபவனே!  நல்லவர்களைக் காத்து அளிக்கின்ற திருவிளையாடல்களை உடையவனே!

அடியார்கள் முத்தி பெறவே சொல் வசனக்கார தத்தை நிகர் தூய வநிதைக்கார.... அடியவர்கள் முக்தியடையும்படியாக உபதேசிக்கின்ற சொற்களை உடையவனே!  கிளி போன்றவரும் பரிசுத்தமானவருமான தேவசேனையின் மணாளனே!

முச் சகர் பராவு சரணக்கார இனிதான முத்தமிழை ஆயும் வரிசைக்கார.... மூன்று உலகத்தோரும் போற்றிப் பரவுகின்ற திருவடிகளை உடையவனே!  இனியதான முத்தமிழை ஆய்ந்த சிறப்பை உடையவனே!

பச்சை முகில் தாவும் புரிசைக்கார முத்து உலவு வேலை நகர் முத்தேவர் பெருமாளே..... கரிய மேகங்கள் படர்ந்து தாவுகின்ற மதில்களை உடைய (ஆலயத்தில்) விளங்குபவனே!  முத்துகள் நிறைந்துள்ளதும்; கடலால் சூழப்பட்டதுமான திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே!  மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே!

சுருக்க உரை

அழகிய கூர்மையான வேலை ஏந்திய பன்னிரு கரத்தனே!  பக்தி செய்வாருடைய பாடல்களில் விளங்குபவனே!  ஒவ்வொரு திசையிலும் செலுத்தப்படுவதான மயிலை வாகனமாகக் கொண்டவனே!  வள்ளிக் குறமாதை உள்ளன்போடு கலக்கின்றவனே! பொல்லாத அசுரர்களோடு போரிடுபவனே!  நல்லாரைக் காக்கின்ற திருவிளையாடல்களைக் கொண்டவனே! அடியார்கள் முக்தியைப் பெறும்படியாக உபதேசிக்கும் திருச்சொற்களை உடையவனே!  தூய மாதான தேவசேனையின் மணாளனே!  மூவுலகத்தோரும் போற்றுகின்ற திருவடிகளை உடையவனே!  இனிய முத்தமிழை ஆய்ந்த சிறப்பை உடையவனே!  கரிய மேகங்கள் தாவிக் கடக்கும் மதில்களை உடைய ஆலயத்தைக் கொண்டவனே!  முத்துகள் நிறைந்த கடலால் சூழப்பட்ட திருச்செந்தூரில் வீற்றிருப்பவனே!  மும்மூர்த்திகளுக்கும் பெருமாளே!

ஒலிக்கின்ற ஏழு கடல்களையும்; வண்டையும்; அம்பையும்; சக்திவேலையும்; மாவடுவையும்; கருங்குவளை மலரையும்; தாமரைப் பூவையும்; முதிர்ந்த, கொடிய விஷத்தையும்; புரளுகின்ற வாளை மீன்களையும்; கொல்லும் தன்மையையும் உடைய மை தீட்டிய கண்களை உடைய பெண்களின் மதர்த்த மார்பகங்களின்மேல் நான் கொண்டுள்ள தீயதான மையல் என்னை விட்டு அகன்று; உன்மீது முறையான பக்தியைச் செய்யும்படியாக அடியேன் முன்னால் உறுதியைத் தருவதான பச்சைமயில் மீது ஏறிய கோலத்தில் நீ வருவதும் என்னாளோ?  (பச்சைமயில் மீது ஏறிய கோலத்தில் நீ வரவேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com