பகுதி - 387

தீமையான குணங்களே பெருகுவதும்;

பதச் சேதம்

சொற் பொருள்

சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே

 

ஏய்: பொருந்திய, நிறைந்த; குரம்பை: கூடு—உடல்; கங்கு: கங்கம் என்பதன் சுருக்கம், கழுகு என்பது பொருள்; ஒழியாதே: தீராதே;

தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு சேரிடு நரம்பு தான் இவை பொதித்து நிலை காணா

 

தொந்த(ம்): உறவு, சம்பந்தம்; சேரிடு: சேர்ந்திடு;

ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி நிலை என்று மடவார் பால்

 

ஆயது: ஆனது, அப்படிப்பட்ட அது; ஊசிடும்: ஊசிப்போகின்ற; இடும்பை: துன்பம்; பேணி: போற்றி;

ஆசையை விரும்பியே விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும் ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே

 

விரக சிங்கி: விரகமாகிய சிங்கி; சிங்கி: விஷம்—உலோக நஞ்சு, lead monoxide இப்படிக் குறிப்பிடப்படுவது வழக்கம்;

மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க வாய் பிளிறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே

 

கஞ்சனால்: கம்சனால்; தன்கை: துதிக்கை

வாரி உற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம்

 

வீறொடு: செருக்கோடு; வாரண(ம்): யானை—இங்கு குவலாய பீடமாகிய யானை; கோடு: தந்தம்; நெடியோன்: திருமால்;

வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக துங்க வேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக

 

வேய்: மூங்கில்; வேயின் இசை: புல்லாங்குழலிசை; கோநிரை: பசுக்கூட்டம்; மேயல்புரி: மேய்க்கின்ற; துங்க: தூய;

வேலை விடு கந்த காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.

 

 

சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும் மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை... (உடலில் பெருகும்) சீழ், இரத்தம் ஆகியனவற்றில் பொருந்தியுள்ள புழுக்கள் நிறைந்திருப்பதும்; நிலையற்றதும்; மலம், நோய்களுக்கு இருப்பிடமுமான இந்தக் கூட்டை (உடலை);

தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே... தீயும்; நரிகளும்; கழுகுகளும்; காகங்களும் தின்பது முடிவிலாத ஒன்று;

தீது உள குணங்களே பெருகு தொந்த மாயையில் வளர்ந்த... தீமை உள்ள குணங்களே பெருகுகின்றதும்; மாயையின் சம்பந்தத்துடன் வளர்ந்ததும்;

தோல் தசை எலும்பு சேரிடு நரம்பு தான் இவை பொதிந்து நிலை காணா... தோல், சதை, எலும்பு முதலானவற்றோடு சேர்ந்துள்ள நரம்புகள்—எல்லாமும் பொதிந்திருப்பதும்; நிலைக்க முடியாததும்—

ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில் விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி... ஆன இது (இந்த உடலானது), யமன் கையிலே உயிர் போய்ச் சேர்ந்ததும்; அந்த நாழிகையிலேயே (அப்போதிருந்தே)  பெரிய அளவில் ஊசிப்போகின்ற (கெட்டுப் போகின்ற); துன்பத்தால் ஆகிய இந்த உடலைப் போற்றி;

நிலை என்று மடவார் பால் ஆசையை விரும்பியே... (இவ்வுடல்) நிலையானது என்று நினைத்துக்கொண்டு; பெண்களிடத்திலே ஆசையை வளர்த்துக்கொண்டும்; விரும்பியும்;

விரக சிங்கிதானும் மிக வந்து மேவிட மயங்கும் ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே... காமமாகிய நஞ்சும் வந்து பெரிய அளவில் சேர்வதால் மயங்கிப்போய்; ஆழமான துயரத்தில் விழுந்து மடிபவனான என்மீது அன்புகாட்டி அருளவேண்டும்.

மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க... மாயையில் வல்லவனான கம்சன் அனுப்பியதும்; கோபம் கொண்டு, மொத்த உலகமும் அண்டகேளங்களும் நடுநடுங்கும்படியாக;

வாய் பிளிறி நின்று மேக நிகர் தன் கை அதனாலே... வாயால் பிளிறிக்கொண்டும்; மேகத்தைப் போன்ற கரிய துதிக்கையாலே,

வாரி உற அண்டி வீறொடு முழங்கு நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த... அனைத்தையும் வாரிக்கொண்டும்; நெருங்கி வந்தும்; செருக்குடன் முழங்கியும்; நீரைப் பருகியும்; கோபத்துடனும் எதிர்த்து வந்தாகிய,

வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம்... குவலாயபீடம் என்னும் யானையுடைய இரண்டு தந்தங்களையும் ஒடித்து வென்ற நெடியோனும்;

வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து மேயல் புரி செம் கண் மால் மருக... புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக்கூட்டைக்களைக் காத்தும்; மேய்த்தும் (திரிந்தவனான) சிவந்த கண்களை உடையவனமான திருமாலுடைய மருகனே!

துங்கவேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக வேலை விடு கந்த... பரிசுத்தமான வேலை ஏந்தியவனே! கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகும்படி வேலை எறிந்த கந்தனே!

காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க... காவிரியாற்றின் (கரையிலே) விளங்குவதும்; நீர் நிறைந்ததுமான கலிசை என்னும் தலத்தில் வாழ்கின்ற ‘கலிசைச் சேவகன்’ உன்னை வணங்கிய காரணத்தால்,

வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.... வீரை என்ற தலத்துக்கு வந்து எழுந்தருளிய பழநியாண்டவனே!  தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

மாயை வல்லவனான கம்சன் ஏவியதும்; கோபத்துடனே; உலகெல்லாமும் அண்டகோளங்களும் நடுங்கும்படியாக பிளிறிக்கொண்டு வந்து; மேகத்தைப் போலக் கரியதான தன்னுடைய துதிக்கையால் அனைத்தையும் வாரிக்கொண்டும்; அனைவரையும் நெருங்கியபடியும்; செருக்கோடு முழங்கியும்; நீரைப் பருகியும்; கோபத்தோடு எதிர்த்தும் வந்ததான குவலாயபீடம் என்னும் யானையுடை இரண்டு தந்தங்களையும் ஒடித்து வென்ற நெடியவனும்; புல்லாங்குழலின் இன்னிசையால் பசுக்கூட்டங்களைக் காத்து மேய்த்தவனும்; சிவந்த கண்களை உடையவனுமான திருமாலுடைய மருகனே!  பரிசுத்தமான வேலை ஏந்துபவனே!  கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகுமாறு வேலை வீசியவனே!  காவிரியாற்றங்கரையில் நீரால் சூழப்பெற்று விளங்குகின்ற கலிசை என்னும் தலத்தில் வாழ்ந்த கலிசைச் சேவகன் வேண்டிக்கொண்டதால், வீரை என்ற தலத்துக்கு வந்து எழுந்தருளிய பழநிப் பெருமாளே!  தேவர்கள் தலைவனே!

எங்கும் பெருகும் சீழிலும் ரத்தத்திலும் புழுக்கள் நிறைந்திருப்பதும்; நிலையற்றதும்; மலத்துக்கும் நோய்க்கும் இடமாக விளங்குவதுமான கூடாக உள்ள இந்த உடலை நெருப்பும், நரிகளும் கழுகுகளும் காகங்களும் தின்பது என்பது தீராத ஒன்று. 

தீமையான குணங்களே பெருகுவதும்; மாயையின் சம்பந்தமுள்ளதும்; தோல், சதை, எலும்பு, நரம்பு போன்றவை சேர்ந்துள்ளதும்; நிலையற்றதுமான இந்த உடலிலிருந்து உயிர் பிரிந்து யமனுடைய கைக்குப் போன அதே சமயத்திலிந்து கெட்டுப்போகத் தொடங்கும் இந்த உடலைப்போய் நிலையானது என்று கருதிக்கொண்டும்; மங்கையர்கள்மேலே ஆசையை வளர்த்துக்கொண்டும்; விரும்பிக்கொண்டும்; விரகமாகிய விஷம் பெருகுவதால் மயங்கியும்; ஆழமான துயரத்தில் விழுந்தும் மாளுகின்ற என்மீது அன்பு செலுத்தி அருள்புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com