பகுதி - 521

உன் பாதத்திலே வைத்த ஒப்பில்லாத

பதச் சேதம்

சொற் பொருள்

புற்பதம் என நாம அற்ப நிலையாத பொய் குடில் குலாவும் மனையாளும்

 

புற்புதம்: நீர்க்குமிழி; நாம: பெயர்(உடையதாய்);

புத்திரரும் வீடு மித்திரருமான புத்தி சலியாத பெரு வாழ்வு

 

மித்திரர்: நண்பர்;

நிற்பது ஒரு கோடி கற்பம் என மாய நிட்டையுடன் வாழும் அடியான் யான்

 

கற்பம்: கல்பம், பலகோடி ஆண்டுகள்; மாய நிட்டை: பொய்யான நிஷ்டை, நினைப்பு;

நித்த(ம்) நின தாளில் வைத்தது ஒரு காதல் நிற்கும் வகை ஓத நினைவாயே

 

நினதாளில்: நினது தாளில்;

சற்ப கிரி நாத முத்தமிழ் விநோத சக்ர கதை பாணி மருகோனே

 

சற்பகிரி: பாம்பு மலை, சர்ப்பகோத்ரம், திருச்செங்கோடு; விநோதம்: மகிழ்ச்சி, வியப்பு, அழகு; பாணி: கை; சக்ர கதை பாணி: திருமால்;

தர்க்க சமண் மூகர் மிக்க கழு ஏற வைத்த ஒரு காழி மறையோனே

 

மூகர்: ஊமையர்; காழி மறையோன்: சீகாழியில் தோன்றிய திருஞான சம்பந்தர்;

கற்பு வழுவாது வெற்பு அடியில் மேவு கற்றை மற  வாழ்நர் கொடி கோவே

 

கற்பு வழுவாது: உறுதி கெடாமல்; வெற்பு அடியில்: மலையின் அடிவாரத்தில்; கற்றை: கூட்டம்;

கைத்த அசுரேசர் மொய்த்த குல கால கற்ப தரு நாடர் பெருமாளே.

 

கைத்த: கசந்த, வெறுத்த; அசுரேசர்: அசுரர் தலைவர்கள்; மொய்த்த: நெருங்கிய; கற்ப தரு: கற்பக மரம்;

புற்புதம் என நாமம் அற்ப நிலையாத பொய்க்குடில் குலாவு மனையாளும்... நீர்க்குமிழி என்ற பெயரைப் படைத்ததாய் சிறு காலமும் நிலைக்காத பொய்யான குடிலான இந்த உடலோடு குலாவுகின்ற மனைவியும்;

புத்திரரும் வீடு மித்திரரும் ஆன புத்திசலியாத பெருவாழ்வு... பிள்ளைகளும் வீடும் நண்பர்களும் நிறைந்ததும்; புத்தியில் சோர்வு ஏற்படாததுமான இந்த வாழ்வு, பெரும் வாழ்வே.

நிற்பதொரு கோடி கற்பமென மாய நிட்டையுடன் வாழும் அடியேன்யான்... இது பலகோடி ஆண்டுகளக்கு நிலைத்து நிற்கும் என்ற பொய்யான கருத்தில் மனத்தை வைத்து வாழுகின்ற அடியேனான எனக்கு,

நித்தநின தாளில் வைத்ததொரு காதல் நிற்கும்வகை ஓத நினைவாயே... உன் பாதத்திலே வைத்த ஒப்பில்லாத அன்பு (பக்தி) எப்போதும் நிலைத்து நிற்கின்ற வழியை உபதேசித்து அருளவேண்டும்.

சற்பகிரி நாத முத்தமிழ்விநோத சக்ரகதை பாணி மருகோனே... (நாக மலை, சர்ப்ப கோத்திரம் என்றெல்லாம் அறியப்படும்) திருச்செங்கோட்டின் தலைவனே!  முத்தமிழில் மகிழ்பவனே!  சுதர்சன சக்கரத்தையும் கௌமோதகி என்ற கதையையும் கையில் பிடித்திருக்குத் திருமாலின் மருகனே! 

தர்க்கசமண் மூகர் மிக்க கழுவேற வைத்த ஒரு காழி மறையோனே... வாதத்திலே தோற்ற காரணத்தால் (பேச்சிழந்த) ஊமைகளாக நின்ற சமணர்களை மிகுதியாகக் கழுமரத்திலே ஏறச்செய்த ஒப்பற்ற சீகாழி அந்தணனான திருஞான சம்பந்தராக வந்தவனே!

கற்பு வழுவாது வெற்பு அடியின் மேவு கற்றைமறவாணர் கொடிகோவே... மன உறுதி தவறாதவர்களும் மலையடிவாரத்திலே வாழ்பவர்களுமான வேடர் கூட்டத்தின் குலக்கொடியான வள்ளியின் தலைவனே! 

கைத்த அசுரேசர் மொய்த்தகுல கால கற்பதரு நாடர் பெருமாளே.... (தேவர்களையும் உன்னையும்) வெறுத்த அசுரத் தலைகர்கள் நிறைந்த அசுரகுலத்துக்கு யமனே!  கற்பக மரம் நிறைந்ததான அமரலோகத்தவருடைய (தேவருடைய) பெருமாளே!

சுருக்க உரை

சர்ப்ப மலை எனப்படும் திருச்செங்கோட்டின் தலைவனே!  முத்தமிழில் மகிழ்பவனே!  சக்கரத்தையும் கதையையும் ஏந்திய கையரான திருமாலின் மருகனே!  வாதத்திலே தோற்றதால் வாயடைத்துப் போன சமணர்களைக் கழுவேறச் செய்த திருஞான சம்பந்தராக வந்தவனே!  மன உறுதி குலையாதவர்களும்; மலையடிவாரத்திலே வாழ்பவர்களுமான வேடர்களின் குலக்கொடியான வள்ளியின் நாயகனே!  உன்னையும் தேவர்களையும் வெறுத்த தலைவர்கள் நிறைந்த அசுரர் குலத்துக்குக் காலனே!  கற்பக மரங்கள் நிறைந்த அமராவதியிலே வாழும் தேவர்களுடைய பெருமாளே!

நீர்க்குமிழி என்ற பெயரைப் படைத்து அற்பமான காலத்திலே மறையக்கூடியதும்; பொய்யானதும்; மனைவியால் நேசிக்கப்படுவதுமான இந்த உடலும்; இதற்கு ஏற்பட்டுள்ள மக்களும் நண்பர்களும் வீடும் என்று பெருகுகின்றதும், புத்தி சோர்வடையாததுமான இந்த வாழ்வு பெருவாழ்வு (இது மிக இனிது); பலகோடி வருடங்களுக்கு நிலைத்திருக்கும் என்ற பொய்யான நினைப்பை மனத்தில் இருத்திக்கொண்டிருக்கும் அடியேனாகிய எனக்கு, உன்னுடைய திருவடிகளிலே வைத்திருக்கும் அன்பு என்றென்றும் மாறாமல் நிலைத்திருக்கும் வழியை உபதேசித்தருள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com