பகுதி - 531

பிறவித் தொடர் முடியவே முடியாதோ

பதச் சேதம்

சொற் பொருள்

நாடா பிறப்பு முடியாதோ என கருதி நாயேன் அரற்று மொழி வினையாயின்

 

நாடா: நாடாத, நாட்டமில்லாத, விரும்பாத; அரற்று(ம்): ஓலமிடும்; வினையாயின்: வினைப் பயனாக இருந்தால்;

நாதா திருச்சபையின் ஏறாது சித்தமென நாலா வகைக்கும் உனது அருள்பேசி

 

திருச்சபை: சந்நிதி;

வாடா மலர் பதவி தா தா என குழறி வாய் பாறி நிற்கும் எனை அருள் கூர

 

தாதா: கொடு, கொடு; வாய் பாறி: வாய் கிழிபட்டு, வாய் கிழிய;

வாராய் மன கவலை தீராய் நினை தொழுது வாரேன் எனக்கு எதிர் வரவேணும்

 

 

சூடா மணி பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள் பாலா

 

சூடாமணி: தெய்வமணி; கனத்த: பெருமை மிக்க; அரி தோல்: சிங்கத்தின் தோல்; ஆசனத்தி: ஆசனமாக உடையவள்;

தூயா துதிப்பவர்கள் நேயா எமக்கு அமிர்த தோழா கடப்ப மலர்  அணிவோனே

 

 

ஏடு ஆர் குழல் சுருபி ஞான ஆதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா

 

ஏடு ஆர்: மலர் நிறைந்த; சுருபி: ஸ்வரூபி, வடிவத்தைக் கொண்டவள்; ஆதனம்: ஆசனம்; மிகுமேராள்: மிகும் ஏராள் (ஏர்: அழகு) மிக்க அழகுடையவள்;

ஈசா தனி புலிசை வாழ்வே சுரர் திரளை ஈடேற வைத்த புகழ் பெருமாளே.

 

புலிசை: சிதம்பரம்; சுரர்: தேவர்கள்;

நாடா பிறப்புமுடி யாதோ வெனக்கருதி... நான் வேண்டாததாகிய இந்தப் பிறவித் தொடருக்கு முடிவே இல்லையோ என்று நினைத்து,

நாயேன் அரற்றுமொழி வினையாயின்... நான் கதறுகின்ற இந்த மொழி என் முன்வினையின் காரணத்தால் விளைந்ததாக இருந்தால்,

நாதா திருச்சபையி னேறாது சித்தமென நாலா வகைக்கும் உனது அருள்பேசி... நாதனே! (என் கதறல்) உன்னுடைய திருச்சபையிலோ அல்லது உன் உள்ளத்திலோ ஏறாது என்பதை உணர்ந்து, உன்னுடைய திருவருளின் தன்மையைப் பற்றிப் பலவிதமாகப் புகழ்ந்து பேசி,

வாடா மலர்ப்பதவி தாதா எனக்குழறி வாய்பாறி நிற்குமெனை... என்றும் வாடததாகிய உன்னுடைய மலர்ப்பதத்தில் சேர்வதான பதவியைத தரவேண்டும், தரவேண்டும் என்று வாய் கிழிபடும்படியாகவும் நா குழறும்படியாகவும் ஓலமிடுகின்ற எனக்கு,

அருள்கூர வாராய் மனக்கவலை தீராய்... உன் திருவருள் கைகூடும்படியாக (என்னெதிரே) வந்தருள வேண்டும்.  என் மனத்திலுள்ள கவலைகளையெல்லாம் தீர்த்தருள வேண்டும்.

நினைத்தொழுது வாரேன் எனக்கு எதிர் முன்வரவேணும்... உன்னைத் தொடர்ந்து தொழுவது என்பதே இல்லாத என்முன்னே நீ எழுந்தருள வேண்டும்.

சூடா மணிப்பிரபை ரூபா கனத்த அரி தோல் ஆசனத்தி உமை அருள்பாலா... தெய்வமணியுடைய ஒளிபொருந்திய வடிவத்தை உடையவளும்; பெருமைவாய்ந்த சிங்கத்தின் தோலை ஆசனமாக உடையவளுமான உமையம்மை அருளிய பாலனே!

தூயா துதித்தவர்கள் நேயா எமக்கமிர்த தோழா கடப்பமலர் அணிவோனே... தூயவனே!  துதித்துப் போற்றுபவர்களுடைய நேயனே!  அடியேனுக்கு அமிர்தமாக அமைந்திருக்கும் தோழனே!  கடப்ப மலரைச் சூடுபவனே! 

ஏடார் குழற்சுருபி ஞான ஆதனத்தி மிகு மேராள் குறத்தி திரு மணவாளா... மலர் நிறைந்த கூந்தலையும் அழகிய திருவடிவையும் கொண்டவளும்; ஞானமாகியி பீடத்தில் வீற்றிருப்பளும்; அழகியுமான குறவள்ளியின் மணாளனே!

ஈசா தனிப்புலிசை வாழ்வே சுரர்த்திரளை ஈடேற வைத்தபுகழ் பெருமாளே... ஈசனே!  ஒப்பற்ற சிதம்பரத்தில் வீற்றிருப்பவனே!  தேவர்களின் கூட்டத்தை உய்வித்தவனே!  புகழ் நிரம்பியவனான பெருமாளே!

சுருக்க உரை

தெய்வமணியின் ஒளிபொருந்திய வடிவத்தைக் கொண்டவளும்; பெருமைவாய்ந்த சிங்கத்தின் தோலை ஆசனமாகக் கொண்டவளுமான உமையம்மை அருளிய பாலனே!  தூயனே!  துதிப்போர்களுடைய நேயனே!  அடியேனுக்கு அமுதத்தைப் போல விளங்குகின்ற தோழனே!  கடப்ப மலரைச் சூடுபவனே!  மலர் நிறைந்த கூந்தலை உடையவளும்; ஞானமாகிய பீடத்தில் இருப்பவளும்; மிக்க அழகியும் குறமகளுமான வள்ளியின் மணாளனே!  ஈசனே!  ஒப்பற்ற சிதம்பரத்தில் வீற்றிருக்கும் செல்வனே!  தேவர்கூட்டத்தை உய்விக்கச் செய்த புகழைக் கொண்டவனான பெருமாளே!

நான் நாடாமலேயே என்னை அடைந்திருப்பதான இந்தப் பிறவித் தொடர் முடியவே முடியாதோ என்று நான் கதறுகின்ற இந்தச் சொற்கள் என் முன்வினையின் காரணமாக எழுந்திருக்கின்றன என்றால் அவை உன் சந்நிதிக்கோ திருவுள்ளத்துக்கோ ஏற்புடையதாகாது என்பதை நான் உணர்ந்தும்; பலவிதங்களில் உன்னுடைய பெருமையைப் பேசியும் ‘என்றும் நிலைப்பதான உன்னுடைய மலர்ப்பதம் என்னும் பதவியைத் தந்தருள்க’ என்று வாயே கிழிபடும் அளவுக்குச் சொல்லிச் சொல்லி நாகுழறுகிற என்முன்னே உன் திருவருள் பெருகும்படியாக வரவேண்டும்; அடியேனுடைய மனக்குறைகளைத் தீர்த்தருள வேண்டும்; உன்னைத் தொடர்ச்சியாகத் தொழுவது என்பதையே அறியாதவனாக இருப்பினும் அடியேனுடைய முன்னாலே எழுந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com