பகுதி - 537

சிவனார் நடனமாடும் திருச்சபையை

பதச் சேதம்

சொற் பொருள்

நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே

 

நாலு சதுரத்த: நாற்சதுர பிரமபீடம்; பஞ்சறை: ஐந்தாவது அறை(யாகிய சுவாதிஷ்டான சக்கரம்); மூல கமலம்: மூலாதாரக் கமலம்; அங்கி: அக்கினி; மந்திர பந்தி: மந்திர ஒழுங்கு;

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர்  நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில்

 

நாரணபுரம்: நாரணனுடைய வீடாகிய மணிபூரகம்; இந்து: அர்த்த சந்திராகாரம் (சந்திர வடிவம்); சுடர் நாற: சுடர் விளங்க; மண்டல சந்தி: மூன்று மண்டலங்களிலும் சந்திக்கும்; ஆறில்: ஆறு ஆதாரங்களில்;

கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்தி இதம் பெறு கோ என முழக்கு சங்கு ஒலி விந்து நாதம்

 

கோலமும்: (எல்லா மூர்த்திகளுடைய) கோலங்களும்; உதிப்ப: தோன்ற; உள: சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள; நாலினை: நாலங்குலப் பிராண கலையை;

கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடன பத அம் சபை என்று சேர்வேன்

 

கூடிய முகப்பில்: (விந்துநாதம்) கூடி முழங்கும் இடத்தில்; அமுதத்தை: தேவாமுதத்தை; ஒருகோடி நடன பத அம் சபை: கணக்கற்ற விதங்களில் ஒரு காலை உயர்த்தி ஆடும் திருச்சபை;

ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குல கொழுந்திலி ஆரணர் தலை கலம் கொளி செம் பொன் வாசி

 

ஆலம்: நீர்; மலர்: தாமரை—தாமரையில் அமர்ந்தவள்; வேரிலி: தோற்றமில்லாதவள்; குலக் கொழுந்திலி: சிறந்த முடிவும் இல்லாதவள்; ஆரணர் தலை: பிரம கபாலத்தை; கலம் கொளி: பாத்திரமாக ஏந்தியவள்; செம்பொன் வாசி:

ஆணவ மயக்கமும் க(ல்)லி காமியம் அகற்றி என்று எனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே

 

கல்லி: வேரோடு பறித்து; காமியம்: ஆசைகள்; பரத்தி: பராசக்தி;

வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா

 

இந்திரர்: இந்திராதி தேவர்கள்; மால்: திருமால்; விதி: பிரமன்; எண்கடல்: எண்ணத்தக்க, மதிக்கத் தக்க கடல்;

வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே.

 

வேத சதுரத்தர்: வேதங்களிலே வல்லவர்கள்; தென் புலியூர்: அழகிய புலியூர்; வீறு: ஒப்பற்ற; இசைந்தருள்: சிவனாருக்கு இசைந்து உபதேசித்த;

நாலு சதுரத்த பஞ்ச அறை மூல கமலத்தில் அங்கியை நாடியில் நடத்தி மந்திர பந்தியாலே... மூலாதாரமான கமலத்திலுள்ள அக்கினியை நாற்சதுர பிரமபீடத்தின் ஐந்தாம் வீடான சுவாதிஷ்டானத்தில் செல்லுமாறு பிராணாயாம மந்திர முறையின்படி செலுத்தி;

நாரண புரத்தில் இந்துவின் ஊடுற இணக்கி நன் சுடர் நாற இசை நடத்தி மண்டல சந்தி ஆறில்... நாராயணனுக்கு உரிய வீடான மணிபூரகத்தில் சந்திராகாரமாய் (சந்திர உருவத்தில்) விளங்கும் விஷ்ணு பீடத்தில் பொருந்தும்படியாகச் சேர்ந்து; நல்ல சுடர் தோன்றும்படியாக (அநாகதம் முதலான மற்ற ஸ்தானங்களிலும்) பொருந்தும்டிபயாகச் செலுத்தி; அக்கினி முதலான மூன்று மண்டலங்களிலும் சந்தித்திருக்கிற ஆறு ஆதாரங்களிலும் (பொருந்தியுள்ள);

கோலமும் உதிப்ப கண்டு உள நாலினை மறித்து இதம் பெறு கோ என முழக்கு சங்கு ஒலி... விநாயகர், சதாசிவம் முதலான பல்வேறு தோற்றங்களும் பிரசன்னமாகக் கண்டு; சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நாலங்குலப் பிராணகலையை (சுவாசத்தின் வழியாகக் கழிந்து போகாமல்) தடுத்து; ‘கோ’ என்று முழங்குகின்ற சங்கின் ஒலி,

விந்து நாதம் கூடிய முகப்பில் இந்திர வான அமுதத்தை உண்டு ஒரு கோடி நடனப் பத அம் சபை என்று சேர்வேன்... விந்தும் நாதமும் (சிவமும் சக்தியுமாய்) ஒலிக்கின்ற இடத்தில் நின்று; இந்திர போகமாகிய தேவாமுதத்தைப் பருகி; கணக்கற்ற விதங்களில் காலை உயர்த்தி குஞ்சிதபாதமாக ஆடும் (நடராஜனுடைய) திருச்சபையை என்றைக்கு அடைவேன்?  (அடைய அருள்புரிய வேண்டும்.)

ஆலம் மலருற்ற சம்பவி வேரிலி குலக் கொழுந்திலி ஆரணர் தலைக் கலம் கொளி செம் பொன் வாசி... நீரிலே தோன்றுவதான தாமரையில் வீற்றிருப்பவளான சாம்பவியும்*; ஆதியும் அந்தமும் இல்லாதவளும்; பிரம கபாலத்தைக் கையிலே பாத்திரமாக ஏந்தியிருப்வளும்; செம்பொன்னைப் போன்ற உயர்ந்த தன்மையைக் கொண்டவளும்;

(உமை தாமரையில் வீற்றிருப்பதை—
ஏடங்கை நாயகி இறைஎங்கள் முக்கண்ணி

வேடம் படிகம் விரும்பும் வெண்டாமரை (முக்கண்ணி விரும்பும் வெண்டாமரை) என்று திருமூலரும் ‘அம்புயமேல் திருந்திய சுந்தரி’ என்று அபிராமி பட்டரும் பாடுகிறார்கள்.)

ஆணவ மயக்கமும் க(ல்)லி காமியம் அகற்றி என்றனை ஆள் உமை பரத்தி சுந்தரி தந்த சேயே... என்னுடைய ஆணவத்தையும் மயக்கத்தையும் வேரோடு பறித்தெறிந்தவளும்; ஆசைகளை ஒழித்தருளியவளும்; என்னை ஆண்டருள்கின்ற உமையும்; பராசக்தியும் அழகியுமான தேவி அருளிய மகவே! 

வேல் அதை எடுத்தும் இந்திரர் மால் விதி பிழைக்க வஞ்சகர் வீடு எரி கொளுத்தி எண் கடல் உண்ட வேலா... வேலைக் கையிலே எடுத்து இந்திராதி தேவர்களும் திருமாலும் பிரமனும் பிழைக்கும்படியாக வஞ்சக அரக்கர்கள் வாழும் இடங்களை எரியூட்டியவனும்; கருதத் தக்க கடல்களை வற்றடித்தவனுமான வேலனே!

வேத சதுரத்தர் தென் புலியூர் உறை ஒருத்தி பங்கினர் வீறு நடனர்க்கு இசைந்து அருள் தம்பிரானே... வேதங்களிலே வல்லவர்களுக்கும்; சிதம்பரத்திலே வீற்றிருப்பவளான உமாதேவியை இடது பாகத்திலே வைத்தவரும்; மேம்பட்ட நடன மூர்த்தியுமான சிவனாருக்கு மனமிசைந்து உபதேசித்தருளிய தம்பிரானே!

சுருக்க உரை

நீரில் மலந்திருக்கும் தாமரையில் வீற்றிருக்கும் சாம்பவியும்; ஆதியும் அந்தமும் அற்றவளும்; பிரமகபாலத்தை ஏந்தியவளும்; பொன்போன்று உயர்ந்த தன்மையைக் கொண்டவளும்; என்னுடைய ஆணவத்தையும் மயக்கத்தையும் வேரறுத்தவளும்; என்னுடைய ஆசைகளை அழித்தவளும்; என்னை ஆண்டருளியவளான உமையும் பராசக்தியும் அழகியுமான தேவி ஈன்ற மகனே!  இந்திராதி தேவர்களும் திருமாலும் பிரமனும் பிழைக்கும் வண்ணமாக வேலைக் கையிலே எடுத்து, வஞ்சக அரக்கர்கள் வாழும் இடங்களுக்கு எரியூட்டி, கடலை வற்றடித்த வேலனே!  வேதங்களிலே வல்லவர்களுக்கும் சிதம்பரத்தில் வீற்றிருக்கின்ற உமையை இடதுபாகத்தில் கொண்டிருக்கும் சிவனாருக்கும் மனமிசைந்து உபதேசித்தருளிய தம்பிரானே!

மூலாதாரக் கமலத்திலிருக்கின்ற நெருப்பை, நாலுசதுரப் பிரமபீடத்தின் ஐந்தாம் வீடாகிய சுவாதிஷ்டானத்தில் செல்லும்படியாகச் சுழிமுனை நாடியின் வழியே செலுத்தி; மணிபூரகத்திலுள்ள விஷ்ணு பீடத்தில் பொருந்துமாறு சேர்த்து; சோதி சுடர்விட்டுத் தோன்றி மற்ற ஆதாரங்களிலும் இணங்குமாறு நடத்தி; அக்கினி முதலான மூன்று மண்டலங்களிலும் சந்தித்துள்ள ஆறு ஆதாரங்களிலும் பொருந்தியிருக்கின்ற (விநாயகர், சதாசிவனார் போன்ற) பலவகைத் திருக்கோலங்களும் பிரசன்னமாவதை தரிசித்து; சரீர நிலைக்கு ஆதாரமாக உள்ள நலங்குலப் பிராணகலை, (சுவாசங்களில் சிறிது சிறிதாகக் கழியாதபடித்) தடுத்து; ‘கோ’ என்று முழங்குகின்ற சங்கதொனியாகிய விந்துநாத (சக்தி-சிவ) சம்பந்தமுள்ள ஒலி முழங்குகின்ற இடத்திலே நின்று இந்திர போகமாகிய தேவாமிருதத்தைப் பருகி; பலகோடிக் கணக்கான வகைகளிலே காலை உயர்த்திக் குஞ்சிதபாதமாக சிவனார் நடனமாடும் திருச்சபையை என்று சென்றடைவேன்?  (அடையுமாறு அருள்புரிய வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com