பகுதி - 539

பாசக்கயிற்றின் நுனியைப் பிடித்து

பதச் சேதம்

சொற் பொருள்

தறுகணன் மறலி முறுகிய கயிறு தலை கொடு விசிறீ கொ(ண்)டு போகும்

 

தறுகணன்: கொடுமையுள்ளவன்; மறலி: யமன்; விசிறீ: விசிறி, வீசி;

சளம் அது தவிர அளவிடு சுருதி தலை கொடு பல சாத்திரம் ஓதி

 

சளம்: துன்பம்; அளவிடு சுருதி: அளந்து வகைப்படுத்தப்பட்டுள்ள வேதம்; தலைகொடு: முதலாக;

அறுவகை சமயம் முறை முறை சருவி அலைபடு தலை முச்சினை ஆகும்

 

சருவி: மாறுபட்டு; தலைமுச்சினை: தலைவேதனை;

அருவரு ஒழிய வடிவுள பொருளை அலம் வர அடியேற்கு அருள்வாயே

 

அருவரு: அருவரு(ப்பான செயல்கள்); அலம்: அமைதி (துன்பம் என்பது பெரும்பான்மைப் பொருள்);

நறு மலர் இறைவி அரி திரு மருக நகம் உதவிய பார்ப்பதி வாழ்வே

 

நறுமலர் இறைவி: இலக்குமி; நகம்: (இமய) மலை; பார்ப்பதி: பார்வதி;

நதி மதி இதழி பணி அணி கடவுள் நடம் இடு புலியூர் குமரேசா

 

நதி: கங்கை; மதி: பிறைச் சந்திரன்; இதழி: கொன்றை; பணி: பாம்பு; புலியூர்: சிதம்பரம்;

கறுவிய நிருதர் எறி திரை பரவு கடல் இடை பொடியா(க) பொருதோனே

 

கறுவிய: கோபித்த;

கழல் இணை பணியும் அவருடன் முனிவு கனவிலும் அறியா பெருமாளே.

 

 

தறுகணன் மறலி முறுகிய கயிறு தலைகொடு விசிறீ...... கொடியவனான யமன் தன்னுடைய வலிமையான பாசக்கயிற்றின் நுனியைப் பற்றியபடி வீசியெறிந்து,

கொடுபோகுஞ் சளமது தவிர அளவிடு சுருதி தலைகொடு பலசாத்திரமோதி... உயிரைப் பறித்துக்கொண்டு போகின்ற துன்பம் ஏற்படாமல் இருப்பதற்காக, வகைப்படுத்தித் தொகுக்கப்பட்டட வேதங்கள் முதலான பலவிதமான சாத்திரங்களையும் ஓதி,

அறுவகை சமய முறைமுறை சருவி அலைபடு தலைமூச்சினையாகும்... ஆறு வகையான சமயங்களும் தமக்குள்ளே மாறுபட்டு தலைவேதனையை உண்டாக்கும்படியாகப் போராடுகிற,

அருவரு வொழிய வடிவுள பொருளை அலம்வர அடியேற்கு அருள்வாயே... அருவருப்பைத் தருகின்ற செயல்களை ஒழித்து; பேரின்ப வடிவமாக இருக்கின்ற பொருளை (அறிவதால்) அமைதி ஏற்படும்படியாக அடியேனுக்கு அருள்புரிய வேண்டும்.

நறுமல ரிறைவி யரிதிரு மருக நகமுதவிய பார்ப்பதி வாழ்வே... மணம் நிறைந்ததான செந்தாமரையில் வீற்றிருக்கும் இலக்குமிக்கும் திருமாலுக்கும் மருகனே!  (இமய) மலையின் மகளான பார்வதி தேவியாரின் செல்வனே!

நதிமதி யிதழி பணியணி கடவுள் நடமிடு புலியூர்க் குமரேசா... கங்கையையும் பிறைச் சந்திரனையும் கொன்றையையும் பாம்பையும் அணிந்துள்ள இறைவன் நடனமாடுகின்ற புலியூரின் குமரேசனே!

கறுவிய நிருதர் எறிதிரை பரவு கடலிடை பொடியாப் பொருதோனே... சினத்தோடு வந்த அசுரர்களை அலைவீசுகின்ற கடலினிடையே தூளடித்துப் போர்புரிந்தவனே!

கழலிணை பணியு மவருடன் முனிவு கனவிலு மறியாப் பெருமாளே... வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைப் பணிகின்ற அடியாரிடம் சினம் கொள்வதைக் கனவிலும் அறியாத பெருமாளே!

சுருக்க உரை

நறுமணம் கமழ்கின்ற செந்தாமரையில் வீற்றிருக்கும் திருமகளுக்கும் திருமாலுக்கும் மருகனே!  இமவான் பெற்றவரான உமையம்மையின் மைந்தனே!  கங்கையையும் பிறைச் சந்திரனையும் கொன்றையையும் பாம்பையும் அணிந்து சிவனார் நடனமாடுகின்ற புலியூரில் வீற்றிருக்கும் குமரனே!  சினத்தோடு வந்த அரக்கர்களை அலைவீசுகின்ற கடலினிடையிலே அழியும் வண்ணமாகப் போர் புரிந்தவனே!  வீரக் கழல்களை அணிந்த திருவடிகளை வணங்குகின்ற அடியார்களிடம் சினம்கொள்வதைக் கனவிலும் அறியாத பெருமாளே!

கொடுமை நிறைந்தவனாகிய யமன் தன்னுடைய வலுவான பாசக்கயிற்றின் நுனியைப் பிடித்து வீசியெறிந்து என் உயிரைக் கவர்ந்து போகின்ற துன்பத்தைத் தவிர்ப்பதற்காக, முறையாகத் தொகுக்கப்பட்ட வேதம் முதலான சாத்திரங்களை ஓதி; தலைவேதனையை உண்டாக்கும்படியாக ஆறு சமயங்களும் தமக்குள்ளே மாறுபட்டுப் போராடுகின்ற அருவருப்பான செயலை ஒழித்து; பேரின்பமே வடிவான பொருளை உணர்ந்து மனத்தில் அமைதி ஏற்படுமாறு அடியேனுக்கு உபதேசித்தருள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com