பகுதி - 645

புத்தி கெட்டுப் போயும்
பகுதி - 645

பதச் சேதம்

சொற் பொருள்

பெருக்க சஞ்சலித்து கந்தல் உற்று புந்தி அற்று பின் பிழைப்பு அற்று குறைப்பு உற்று பொது மாதர்

 

பெருக்க: மிகவும்; கந்தல்: ஒழுக்கக் கேடு; புந்தி: புத்தி; குறைப்பு: குறைபாடு;

ப்ரியப்பட்டு அங்கு அழைத்து தம் கலைக்குள் தங்கிட பட்சம் பிணைத்து தம் தனத்தை தந்து அணையாதே

 

பட்சம்: அன்பால்; பிணித்து: கட்டிப் போட்டு; அணையாதே: அணைக்காமல்;

புரக்கைக்கு உன் பதத்தை தந்து எனக்கு தொண்டு உற பற்றும் புலத்து கண் செழிக்க செம் தமிழ் பாடும்

 

புரக்கை: புரத்தல், காப்பாற்றுதல்; கண்: ஞானக் கண்;

புல பட்டம் கொடுத்தற்கும் கருத்தில் கண் பட கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபை சித்தம் புரிவாயே

 

புலப் பட்டம்: புலவன் (என்னும்) பட்டம்;

தருக்கி கண் களிக்க தெண்டனிட்டு தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புற சித்தம் தளர்வோனே

 

தருக்கி: உள்ளம் உவந்து, பூரித்து;

சலிப்பு உற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்து தன் சமர்த்தில் சங்கரிக்க தண்டிய சூரன்

 

சலிப்புற்று: சோர்வுற்று; உரத்தில்: வலிமையால்; சம்ப்ரமித்து: களிப்புற்று; சங்கரிக்க: சம்ஹரிக்க, அழிக்க;

சிரத்தை சென்று அறுத்து பந்தடித்து திண் குவட்டை கண்டு இடித்து செந்திலில் புக்கு அங்கு உறைவோனே

 

திண் குவட்டை: வலிய மலையை (கிரெளஞ்ச பர்வதத்தை);

சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திரு சிற்றம்பலத்து அத்தன் செவிக்கு பண்பு உற செப்பும் பெருமாளே.

 

அற்க: (அற்குதல்—நிலைத்தல் ‘அற்கா இயல்பிற்று செல்வம்-குறள் 333) நிலைபெற; அஞ்செழுத்து அத்தம்: அஞ்செழுத்தின் பொருளை;

பெருக்கச் சஞ்சலித்துக் கந்தல் உற்றுப் புந்தி அற்றுப் பின் பிழைப்பு அற்றும் குறைப்பு உற்றும்... (நான்) பெரிதும் சஞ்சலப்பட்டும்; ஒழுக்கக் கேட்டை அடைந்தும்; புத்தி கெட்டுப் போயும்; உய்யும் வழி இல்லாதவனாகவும்; குறைபாட்டை அடைந்தும் போகும்படியாக,

பொது மாதர் ப்ரியப்பட்டு அங்கு அழைத்துத் தம் கலைக்குள் தங்கிடப் பட்சம் பிணித்துத் தம் தனத்தைத் தந்து அணையாதே... பொதுமகளிர் என்னை அன்போடு அழைத்து; தம் வல்லமைகளுக்குள் சிக்கும்படியாக தங்களுடைய அன்பால் என்னைப் பிணித்துத் தங்கள் தனங்களை அளித்துத் தழுவாதபடி,

புரக்கைக்கு உன் பதத்தைத் தந்து எனக்குத் தொண்டு உறப் பற்றும் புலத்துக் கண் செழிக்கச் செந்தமிழ் பாடும் புலப் பட்டம் கொடுத்தற்கும்... என்னைக் காப்பாற்றுவதற்காக உன்னுடைய திருவடிகளைத் தந்து; நான் உனக்குத் தொண்டாற்றச் செய்து; உன்னைப் பற்றம்படியாக ஞானக்கண்ணைத் திறந்துவிட்டு, அடியேன் செழித்தோங்கும்படியாகவும்; (உலகோர்) எனக்குப் புலவன் என்று பட்டம் அளிப்பதற்கும்;

கருத்தில் கண் படக் கிட்டும் புகழ்ச்சிக்கும் க்ருபைச் சித்தம் புரிவாயே... கருத்திலே உன்னுடைய அருட்பார்வை படுவதால் கிடைக்கின்ற புகழைப் பெறுவதற்கும் கிருபை புரிந்து அருளவேண்டும்.

தருக்கிக் கண் களிக்கத் தெண்டனிட்டுத் தண் புலத்தில் செம் குறத்திக்கு அன்புறச் சித்தம் தளர்வோனே... உள்ளம் பூரித்தும்; கண்ணிலே களிப்புத் தோன்றியும்; தண்டனிட்டு வணங்கியுக் குளிர்ச்சியான தினைப் புனத்திலே குறப்பெண்ணான வள்ளியிடத்திலே தோன்றும் அன்பு பெருகுவதால் உள்ளம் உருகியவனே! 

சலிப்பு உற்று அங்கு உரத்தில் சம்ப்ரமித்து கொண்டு அலைத்துத் தன் சமர்த்தில் சங்கரிக்கத் தண்டிய சூரன்.. (தேவர்களைச்) சோர்வு அடையுமாறு செய்து; தன்னுடைய வலிமையால் களிப்புப் பெருகி; (அவர்களைப்) பற்றி அலைத்து; தன்னுடைய திறமையாலே அவர்களை வதைத்து வருத்திய சூரனுடைய,

சிரத்தைச் சென்று அறுத்துப் பந்தடித்துத் திண் குவட்டைக் கண்டு இடித்துச் செந்திலில் புக்கு அங்கு உறைவோனே... சிரத்தைத் துண்டித்துப் பந்தாடியும்; வலிய குன்றமான கிரவுஞ்ச மலையைப் பார்த்துப் பொடியாக்கியும் திருச்செந்தூருக்கு வந்து உறைபவனே!

சிறக்க அற்க அஞ்சு எழுத்து அத்தம் திருச் சிற்றம்பலத்து அத்தன் செவிக்குப் பண்பு உறச் செப்பும் பெருமாளே.... (எல்லோரும்) சிறக்கும்படியாகவும் நிலைக்கும்படியாகவும் (நமசிவாய என்ற) பஞ்சாட்சரத்தின் பொருளைத் தில்லையிலே நடனமாடுகின்ற தந்தையின் செவியில் முறைப்படி உபதேசித்தருளிய பெருமாளே!


சுருக்க உரை:

குளிர்ந்த தினைப்புனத்திலே இருந்த வள்ளியிடத்திலே மனம் பூரித்துக் கண் களிக்கும்படியாகத் தண்டனிட்டுப் பணிந்து அன்பு பெருக உள்ளம் உருகியவனே!  தேவர்கள் சோர்வடையும்படியாகத் தன்னுடைய வலிமையால் களிப்புற்றுக் கிளம்பி அந்தத் தேவர்களைப் பிடித்து அலைத்துத் துன்புறுத்திய சூரனுடைய சிரத்தை அறுத்துப் பந்தாடியும்; கிரெளஞ்சமாகிய வலிய குன்றைப் பொடியாக்கியும் திருச்செந்தூருக்கு வந்து அங்கே வீற்றிருப்பவனே!  எல்லோரும் சிறப்புற்று நிலைபெறும்படியாக ஐந்தெழுத்தின் பொருளைத் தில்லையிலே கூத்தாடும் ஈசனுடைய திருச்செவிகளிலே முறைப்படி உபதேசித்தருளிய பெருமாளே!/

நான் மிகவும் சஞ்சலப்பட்டும் ஒழுக்கக் கேட்டை அடைந்தும் நற்புத்தியை இழந்தும் உய்யும் வழியே இல்லாமல் குறைபாடு அடையும்படியாகப் பொதுமகளிர் என்னிடத்திலே அன்புகாட்டி, என்னை அழைத்துத் தங்களிடத்திலே என்னைத் தங்கச் செய்து தனங்களைத் தந்து தழுவிக்கொள்ளாதபடி

என்னைக் காப்பதற்காக உன்னுடைய திருவடிகளைத் தந்து நான் உனக்கே தொண்டாற்றி, உன்னைப் பற்றிக்கொள்வதற்கான ஞானக்கண்ணைத் திறந்துவிட்டு; உலகம் என்னைப் புலவன் என்று அழைக்குப்டியாகவும்; என்னுடைய எண்ணத்திலே உன் அருட்பார்வை படுவதால் கிடைப்பதான புகழைப் பெறுவதற்காகவும் அருள்புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com