பகுதி - 703

பெருகிவருகின்ற நீர் வெள்ளமாக
பகுதி - 703

பதச் சேதம்

சொற் பொருள்

அப்பு இடை வாய்ந்துநீடு குலாவிய
பதுமஆதியை நீந்து உற்பல
ஓடையில் மீதினில்ஊர்ந்து
நீடிய உகள்சேலை

 

வாய்ந்தப்பிடை என்பதை அப்பு இடை வாய்ந்து என்று கொண்டுகூட்டிக் கொள்ள வேண்டும்; உற்பல: நீலோற்பல; நீடிய: நீண்ட தூரம்; உகள்: தாவும்; சேலை: சேல் மீனை (சேல்+ஐ);

வார்ந்து பகழி எதிர்ஆகி 
மை கூர்ந்துபரியா(க) வரி 
சேர்வை சேர்ந்துகுழையோடு 
ஊசல்ஆடிய விழியாலே

 

வார்ந்து: நேராகி, இணையாகி; பகழி: அம்பு; எதிராகி: சமமாகி; பரியா(க); ஏந்துவதாக; வரி: ரேகை; வை: கூர்மை;

சாய்ந்து பனை ஊண்அவர் ஆன 
போல்ஆய்த்து பணினார்இரு 
தாளினில் வீழ்ந்து இப் 
படிமீதினிலே சிறிதுஅறிவாலே

 

பனையூண்: பனங்கள்; அவர் ஆனபோல்: (கள்ளால்) போதையேறியவரைப் போல்; பணினார்: பண்ணினார்—பண்ணைப் பாடும் பெண்கள்; படி: பூமி;

சாந்து அப்பிய மாமலை நேர் 
முலை பாய்ந்து படி(ந்து)வீணிலே 
உயிர் மாய்ந்து 
இப்படிபோகினும் ஓர் 
மொழிமறவேனே

 

சாந்து: சந்தனக் கலவை;

சார்ந்த பெரு நீர்வெ(ள்)ளமாகவே பாய்ந்த அப் பொழுது
ஆரும் இல்லாமல் காந்த 
பெரு நாதனும்ஆகிய 
மதராலே

 

காந்தப் பெருநாதன்: ஒளிவீசுகின்ற பெருநாதன்; மதராலே: களிப்பாலே (மதர்: களிப்பு);

தாந்தக்கிட...........எனதாளம்

 

 

காந்த பதம் மாறிஉலாவு 
உயர் ஆந்தன்குரு நாதனும் 
ஆகியே போந்த பெருமான
முருகா ஒருபெரியோனே

 

காந்தப் பதம்: அழகிய திருவடி; ஆந்தன்: அந்தன்—சங்கார மூர்த்தி;

காந்த க(ல்)லும்ஊசியுமே 
என ஆய்ந்து தமிழ் ஓதியசீர் 
பெறும் காஞ்சி பதிமா 
நகர் மேவியபெருமாளே.

 

 

அப்பு இடை வாய்ந்து நீடு குலாவிய பதும ஆதியை நீந்து உற்பல ஓடையில் மீதினில் ஊர்ந்து நீடிய உகள் சேலை... நீரிடத்திலே நிலைபெற்று பலநாள் விளங்குகின்ற முதன்மையான தாமரையை விஞ்சுகின்ற நீலோத்பல மலர் நிறைந்திருக்கும் ஓடையிலே நெடுந்தொலைவுக்குப் பாயக் கூடிய மீனுக்கு,

வார்ந்துப் பகழீ எதிர் ஆகி மை கூர்ந்துப் பரியா(வரி சேர் வை சேர்ந்துக் குழையோடு ஊசல் ஆடிய விழியாலே... இணையாகியும்; அம்பை நிகர்த்தும்; மையை ஏந்துகின்றதாகியும் (பூசப்பட்டதாகவும்); செவ்வரி படர்ந்ததாகவும்; கூர்மை மிகுந்ததாகவும்; காதிலுள்ள குண்டலத்தோடு சேர்ந்துகொண்டு ஊசலாடுகின்ற கண்களால்,

சாய்ந்துப் பனை ஊண் அவர் ஆன பொல் ஆய்ந்துப் (பா)ணினார் இரு தாளினில் வீழ்ந்து... (என் மனம்) தளர்ந்து, பனங்கள்ளை உண்டவருக்கு ஏற்படுவதைப் போல போதையுற்று; இசைபாடுகின்ற பெண்களுடைய பாதங்களில் வீழ்ந்து கிடந்து;

இப் படி மீதினிலே சிறிது அறிவாலே சாந்து அப்பிய மா மலை நேர் முலை சேர்ந்துப்படி வீணினி லேயுயிர் மாய்ந்து இப்படிப் போகினும் ஓர்மொழி மறவேனே... இப்புவியின் மீது குறைவுபட்ட அறிவின் காரணமாக, சந்தனக் கலவை பூசப்பட்ட மலையை ஒத்த மார்பபத்தைச் சேர்ந்து, வீணாக உயிரை இழந்தாலும் (நீ உரைத்த) ஒப்பற்ற உபதேச மொழியை மறக்க மாட்டேன்.

சார்ந்தப் பெரு நீர் வெ(ள்)ளமாகவே பாய்ந்த அப் பொழுது ஆரும் இல்லாமலெ காந்தப் பெரு நாதனும் ஆகிய மதராலே... பெருகிவருகின்ற நீர் வெள்ளமாகப் பாய்ந்து எங்கும் பரவுகின்ற ஊழிக்காலத்தில், ஓர் உயிரும் இல்லாத சமயத்தில், ஒளிவீசுகின்ற பேரிறைவனாகிய சிவபெருமான் களிப்போடு,

தாந்தக்கிட தாகிட தாகிட தோந்திக்கிட தோதிமி தோதிமி சேஞ்செக்கண சேகெண சேகெண வெனதாளம்... தாந்தக்கிட தாகிட என்றெல்லாம் தாளங்கள் ஒலிக்க,

 காந்தப் பத(ம்மாறி உலாவு உயர் ஆந்தன் குரு நாதனும் ஆகியெ போந்தப் பெருமான முருகா ஒரு பெரியோனே... அழகிய திருப்பாதங்களை மாற்றி மாற்றி வைத்து நடனம் செய்கின்ற சம்ஹார மூர்த்தியான சிவபெருமானுக்கு குருநாதனாக ஆகிவந்துள்ள பெருமானே! முருகனே! ஒப்பற்ற பெரியோனே!

காந்தக் (ல்)லும் ஊசியுமே என ஆய்ந்துத் தமிழ் ஓதிய சீர் பெறு(ம்)... காந்தக் கல்லையும் ஊசியையும் போல குருவும் சீடனுமாக விளங்கி*, ஒன்றுபட்டுத் தமிழை ஓதுகின்ற மேன்மை பொருந்திய,

(* காஞ்சி குமரகோட்டத்தில்அர்ச்சகராக விளங்கிய கச்சியப்ப சிவாசாரியார் தாம் இயற்றிய கந்தபுராணப் பகுதிகளை இரவு நேரத்தில் முருகன் திருவடியிலே வைக்க, மறுநாள் காலையில் அந்தச் சுவடிகளில் காணப்படும் என்றும்; இது ‘காந்தமும் ஊசியும் போல குருவும் சீடனுமாக ஊடாடிய முருகனையும் கச்சியப்ப சிவாசாரியாரையும் குறிக்கலாம் என்று உரையாசிரியர் தணிகைமணி குகத்திரு செங்கல்வராய பிள்ளையவர்கள் கருதுகின்றார்கள்.)

காஞ்சிப் பதி மா நகர் மேவிய பெருமாளே.... காஞ்சிப் பதி என்னும் பெரிய நகரத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!


சுருக்க உரை:

ஒரு உயிரும் மிஞ்சியிராத ஊழிக்காலத்திலே சம்ஹார மூர்த்தியாக ‘தாந்தக்கிட தாகிட’ என்று பல்வேறு தாளங்களுக்கு இசைய தனது அழகிய திருப்பாதங்களை மாற்றி மாற்றி வைத்து நடனமாடும் சிவனாருக்கு குருவாக விளங்குகின்ற முருகா! ஒப்பற்ற பெரியோனே! காந்தக் கல்லும் ஊசியும் என்பதைப் போல குருவும் சீடனுமாக ஒன்று கலந்து தமிழை ஆராய்ந்த மேன்மை பொருந்திய காஞ்சிப் பதியிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

நீரிலே நெடுங்காலமாக அழகுக்குப் பெயர்பெற்று விளங்குகின்ற தாமரைப் பூவையும் தன் அழகாலே விஞ்சுகின்ற நீலோத்பல மலர்கள் நிறைந்துள்ள ஓடைகளில் நெடுந்தொலைவுக்குப் பாயவல்ல மீனை ஒத்தும்; அம்பை ஒத்தும்; மை பூசப்பட்டும்; செவ்வரி படர்ந்ததாகவும்; காதிலுள்ள குழைகளோடு சேர்ந்து ஊசலாடுவதாகவும் உள்ள கண்களால் நான் நிலை தடுமாறிப்போய்; பனங்கள்ளை அருந்தியவனைப் போல போதை மிகுந்து, இசை பாடுகின்ற பெண்களுடை சந்தனக் கலவை பூசப்பட்ட மார்பகங்களில் படிந்து, வாழ்நாளையெல்லாம் வீணாகக் கழித்து என் உயிர் வீணில் அழிந்தாலும் நீ உபதேசித்தருளிய மொழியை ஒருபோதும் மறவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com