பகுதி - 717

ஆடம்பர மூர்த்தியே
பகுதி - 717

பதச் சேதம்

சொற் பொருள்

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம தத்வ ஆதி நமோநம விந்து நாத

 

சத்தி: ஞான சக்தியான வேல்; பாணீ: கையில் ஏந்தியவனே (பாணி: கை); விந்துநாத: விந்து என்பது சிவ தத்துவம், நாதம் என்பது சக்தி தத்துவம்;

சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம தற் ப்ரதாபா நமோநம என்று பாடும்

 

தற் ப்ரதாபா: தனக்குத் தானே நிகரான கீர்த்தியை உடையவன்;

பத்தி பூணாமலே உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கைமேல் வீழ்

 

பத்தி: பக்தி; சவாது: ஜவ்வாது; பச்சை: பச்சை கற்பூரம்; பாடீர(ம்): சந்தனம்; பூஷித: அணிந்த;

பட்டி மாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர் பாத நீ இனி வந்து தாராய்

 

பட்டிமாடு: அடங்காத மாடு, சண்டி மாடு; உலோகித: சிவந்த நிறமுடைய;

அத்ர தேவாயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்(கி)ய(ம்) சோமாசியா குரு சம்ப்ரதாயா

 

அத்ர தேவாயுதா: சக்தி வேலனே; சுரர்: தேவர்கள்; சுசி: பரிசுத்தமான; அர்க்கியம்: தீர்த்த உபசாரம்; சோமாசியா: சோமாசி யாகத் தலைவனே; குரு சம்ப்ரதாயா: குரு பரம்பரைக்கு முதல்வனே;

அர்ச்சனா வாகனா வயலிக்குள் வாழ் நாயகா புய அ(க்)க்ஷ மாலாதரா குற மங்கை கோவே

 

அர்ச்சனா: அர்ச்சனைகளை ஏற்றுக் கொள்பவனே; வாகனா: (மந்திரங்களால் அழைக்க) எழுந்தருள்பவனே; வயலிக்குள்: வயலூரில்; அக்ஷ: ருத்திராட்ச; மாலாதரா: மாலையை அணிந்தவனே;

சித்ர கோலாகலா விர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ர போதா

 

சித்ர: அழகிய; கோலாகலா: ஆடம்பர மூர்த்தியே; விர: வீர; வீரலக்ஷ்மி: உமையம்மை; சாதா: ஜாதா—பிறந்தவனே; ரதா: இனிமையானவனே; திக்கு பாலா: திக்குகளைப் பரிபாலிப்பவனே; போதா: உபதேசிப்பவனே;

சிட்ட நாதா சிராமலை அப்பர் ஸ்வாமீ மகா வ்ருத தெர்ப்பை ஆசார வேதியர் தம்பிரானே.

 

சிட்ட நாதா: மேன்மை தங்கும் நாதனே; சிராமலை அப்பர்: தாயுமானவர்; தெர்ப்பை: தருப்பைப் புல்;

சத்தி பாணீ நமோநம முத்தி ஞானீ நமோநம தத்வ ஆதீ நமோநம... ஞான சக்தியாகிய வேலைக் கரத்தில் பிடித்தவனே போற்றி போற்றி; முக்தியை அளிக்கின்ற ஞான பண்டிதனே போற்றி போற்றி; தத்துவங்களின் முதல்வனே போற்றி போற்றி;

விந்துநாத சத்து ரூபா நமோநம ரத்ந தீபா நமோநம தற்ப்ரதாபா நமோநம... சிவ-சக்தி தத்துவமான விந்து, நாதம் இரண்டுக்கும் சத்தான உருவமாக விளங்குபவனே போற்றி போற்றி; மாணிக்க விளக்கைப் போல ஒளிர்பவனே போற்றி போற்றி; கீர்த்தியில் தன்னிகர் அற்றவனே போற்றி போற்றி;

என்றுபாடும் பத்தி பூணாமலே... என்றெல்லாம் பாடிப் போற்றுகின்ற பக்தியைப் பூணாதபடி,

உலகத்தின் மானார் சவாது அகில் பச்சை பாடீர பூஷித கொங்கைமேல்வீழ்... உலகிலே மான்போன்ற பெண்களுடைய, ஜவ்வாது, அகிற் குழம்பு, பச்சைக் கற்பூரம், சந்தனக் கலவைகளைப் பூசிய மார்பிலே விழுந்து கிடப்பவனும்,

பட்டி மாடான நான் உனை விட்டிராமே உலோகித பத்ம சீர்பாத நீயினி வந்துதாராய்... அடங்காத சண்டிமாடும் ஆகிய நான் உன்னை விட்டு நீங்காமல் இருக்க சிவந்தனவும் தாமரைபோன்றனவுமான உன்னுடை திருவடிகளை இனியெப்போதும் என்முன்னே இருந்தபடி தந்தருள வேண்டும்.

அத்ர தேவ ஆயுதா சுரர் உக்ர சேனாபதீ சுசி அர்க்ய சோமாசியா குரு சம்ப்ரதாயா...... சக்திவேலை ஆயுதமாகக் கொண்டவனே!  தேவர்களுடைய உக்கிரமான சேனாபதியே! தூய்மையான மந்திர நீரோடு சோமரசத்தைப் பிழிந்து செய்யப்படும் சோமாசி யாகத்தின் தலைவனே!  குருபரம்பரையின் முதல்வனே!

அர்ச்சன ஆவாகனா வயலிக்குள் வாழ்நாயகா புய அக்ஷ மாலா தரா குற மங்கை கோவே...... அர்ச்சனைகளை ஏற்பவனே! மந்திரங்களால் அழைக்கப்படுகையில் எழுந்தருள்பவனே!  வயலூரில் வீற்றிருக்கும் தலைவனே!  திருத்தோள்களில் ருத்திராட்ச மாலைகளை அணிந்திருப்பவனே!  குறவள்ளியின் நாயகனே!

சித்ர கோலாகலா விர லக்ஷ்மி சாதா ரதா பல திக்கு பாலா சிவாகம தந்த்ரபோதா... அழகனே!  கோலாகலமானவனே!  வீரலக்ஷ்மியான உமையம்மையிடம் உதித்தவனே! இனியவனே!  பல திக்குகளையும் காப்பவனே!  சிவாகமங்களை விளக்கும் நூல்களை உபதேசிப்பவனே!

சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமீ மகாவ்ருத தெர்ப்பை யாசார வேதியர் தம்பிரானே.... மேன்மை தங்கிய நாதனனே!  திரிசிராமலையப்பரான தாயுமானவருக்கு குருவே!  பெரிய விரதங்களை மேற்கொண்டு தருப்பைப் புல்லும் ஆசாரமுமாக உள்ள வேதியர்களுடைய தலைவனே!


சுருக்க உரை:

சக்தி வேலாயுதனே! தேவர்களுடைய உக்கிரமான சேனாபதியே!  பரிசுத்தமான தீர்த்த உபசாரங்களையும் சோமரசத்தையும் கொண்ட சோமாசி யாகத் தலைவனே! குருபரம்பரையின் முதல்வனே! அருச்சனைகளை ஏற்பவனே!  மந்திரங்களால் அழைக்கப்படுகையில் எழுந்தருள்பவனே!  வயலூரில் வீற்றிருக்கும் தலைவனே!  திருப்புயங்களில் ருத்திராட்ச மாலைகளைத் தரித்தவனே!  குறவள்ளியின் நாயகனே!  அழகனே! கோலாகலனே! வீர லக்ஷ்மியான உமையம்மையிடம் உதித்தவனே!  எல்லாத் திக்குகளையும் காப்பவனே! சிவாகம நூல்களை உபதேசிக்கும் ஞான மூர்த்தியே!  மேன்மை தங்கம் நாதனே!  சிராமலை அப்பரான தாயுமானவருடைய சுவாமியே!  பெரிய விரதங்களை மேற்கொண்டவர்களும் தருப்பைப் புல்லும் ஆசாரமுமாக விளங்கும் வேதியர்களுடைய தம்பிரானே!

 ஞானசக்தியான வேலை ஏந்தியவனே போற்றி போற்றி; முக்தியைத் தருகின்ற ஞான மூர்த்தியே போற்றி போற்றி; தத்துவங்களுக்கு ஆதியாக நிற்பவனே போற்றி போற்றி; விந்து, நாதம் என்னும் இரண்டுக்கும் சத்தான உருவம் கொண்டவனே போற்றி போற்றி; மணிவிளக்கின் ஒளியைக் கொண்டவனே போற்றி போற்றி; கீர்த்தியால் தன்னையே நிகர்த்தவனே போற்றி போற்றி என்றெல்லாம் பாடித் துதிக்கின்ற பக்தியை மேற்கொள்ளாமல்

ஜவ்வாது, அகில், பச்சைக் கற்பூரம், சந்தனம் ஆகிவற்றின் கலவையை அணிந்திருக்கும் மாதர்களுடைய மார்பிலே விழுந்துகிடக்கின்ற அடங்காத சண்டிமாடான நான் உன்னைவிட்டுப் பிரியாமல் இருக்கும்படியாக சிவந்தனவும் தாமரையை ஒத்தனவுமாகிய உன்னுடைய திருவடிகளை எப்போதும் என்னோடு இருந்தபடி அளித்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com