பகுதி - 484

இப்பாடல் வெள்ளிகரம் தலத்துக்கானது

‘உல்லாச நிராகுல யோகவித சல்லாப விநோதனு நீயலையோ’ என்று கந்தரனுபூதியிலே சொன்னதைப் போல ‘அவிரோத உல்லச விநோதந் தருவாயே’ என்று உய்விக்குமாறு கேட்டுக்கொள்ளும் இந்தப் பாடல் வெள்ளிகரம் என்ற தலத்துக்கானது.  இத்தலம் அரக்கோணத்துக்கு வடக்கிலுள்ள வேப்பகுண்டா ரயில் நிலையத்துக்கு மேற்கே 16 கிமீ தொலைவிலுள்ள பள்ளிப்பட்டு என்னும் ஊரிலிருக்கிறது.

அடிக்கு ஒற்றொழித்து 22 எழுத்துகளைக் கொண்ட பாடல்; முதல், மூன்றாம், ஐந்தாம் சீர்கள் ஒற்றொழித்து நான்கு குற்றெழுத்துக்களைக் கொண்டவை; இவற்றில் இரண்டாம் எழுத்து இடையின ஒற்றையோ அதற்கு இணையான ஐகாரத்தையோ கொண்டிருக்கின்றன; இரண்டாம், நான்காம், ஆறாம் சீர்கள் நெட்டெழுத்துடன் தொடங்கி இரண்டு எழுத்துக்களைக் கொண்டதாக அமைந்துள்ளன.  ஒவ்வோரடியிலும் முதற் சீரும் மூன்றாம் சீரும் தமக்குள்ளே எதுகையமைப்புக் கொண்டதாகவும் அமைந்துள்ளன.

தய்யதன தான தய்யதன தான
      தய்யதன தான       -     தனதான

பையரவு போலு நொய்யஇடை மாதர்
         பையவரு கோலந்    -        தனைநாடிப்
      பையலென வோடி மையல்மிகு மோக
         பவ்வமிசை வீழுந்      -       தனிநாயேன்
உய்யவொரு கால மையவுப தேச
         முள்ளுருக நாடும்      -        படிபேசி
      உள்ளதுமி லாது மல்லதவி ரோத
         உல்லசவி நோதந்      -       தருவாயே
வையமுழு தாளு மையகும ரேச
         வள்ளிபடர் கானம்     -       புடைசூழும்
      வள்ளிமலை வாழும் வள்ளிமண வாள
         மையுததி யேழுங்     -       கனல்மூள
வெய்யநிரு தேசர் சையமுடன் வீழ
         வெல்லயில்வி நோதம்   -     புரிவோனே
      வெள்ளிமணி மாட மல்குதிரு வீதி
         வெள்ளிநகர் மேவும்    -     பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com