பகுதி - 487

மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றி

பதச் சேதம்

சொற் பொருள்

விரகு அற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும் விழி புனல் தேக்கிட அன்பு மேன் மேல்

 

விரகு: சாமர்த்தியம் (Clever) தந்திரம்; (இப்பாடலில் இரண்டிடங்களில் விரகு என்ற சொல் பயில்வதையும் இரண்டிடங்களிலும் பொருள் வேறுபடுவதையும் பார்க்கவும்); விரகற நோக்கி: சாமர்த்தியமாக, தந்திரமாகப் பார்க்காமல் உண்மையாகப் பார்ப்பது;

மிகவும் இரா பகல் பிறிது பராக்கு அற விழைவு குரா புனையும் குமார

 

பராக்கு: Heedlessness, inattentive—மற்ற சிந்தனைகள்; குரா: குரா என்னும் மலர்;

முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலை நுகர் பார்த்திப என்று பாடி

 

ஷடாக்ஷர: ஆறு அட்சரங்களை (சரவணபவ) உடைய; நுகர்: நுகர்ந்த, பருகிய; பார்த்திப: அரசே;

மொழி குழறா தொழுது அழுது அழுது ஆட்பட முழுதும் அ(ல்)லா பொருள் தந்திடாயோ

 

மொழி குழறா: மொழி குழறி;

பர கதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம சம்பராரி

 

விரக: வல்லவனே (தமிழ்விரகன் என்று ஞானசம்பந்தர் தன்னைக் குறிப்பதைக் காண்க); சிலோச்சய: (சிலோச்சயம்—மலை) மலையரசே; சம்பராரி: மன்மதன்;

பட விழியால் பொரு பசு பதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்த வாழ்வே

 

பார்ப்பதி: பார்வதி;

இரை கடல் தீ பட நிசிசரர் கூப்பிட எழு கிரி ஆர்ப்பு எழ வென்ற வேலா

 

நிசிசரர்: (இரவில் உலவுபவர்கள்) அசுரர்கள்;

இமையவர் நாட்டினில் நிறை குடி ஏற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே.

 

 

விரகற நோக்கியும் உருகியும் வாழ்த்தியும்... எந்தத் தந்திரமும் இல்லாதபடி (எந்த மாறுபட்ட நோக்கமும் இல்லாதபடி) உன்னைப் பார்த்தும்; மனமுருகியும்; போற்றியும்;

விழிபுனல் தேக்கிட அன்புமேன்மேல் மிகவும்... கண்களில் பெருகுகின்ற நீர் வழிந்தோடவும்; உன்மேல் ஏற்படும் அன்பு—பக்தி—மேலும் மேலும் பெருகவும்;

இராப்பகல் பிறிது பராக்கற... இரவிலும் பகலிலும்—எல்லாப் போதுகளிலும்—எனக்கு மற்ற சிந்தனைகளே அற்றுப் போக;

விழைவு குராப் புனையுங் குமார... ‘குராமலரை விரும்பிச் சூடும குமரனே!

முருக ஷடாக்ஷர சரவண கார்த்திகை முலைநுகர் பார்த்திப என்றுபாடி... முருகனே! சரவணபவனே! கார்த்திகைப் பெண்களிடம் முலைப் பாலை அருந்திய அரசே என்றெல்லாம் உன்னைப் பாடியும்;

மொழிகுழறாத் தொழுது அழுதழுது ஆட்பட முழுதும் அலாப்பொருள் தந்திடாயோ... பேச்சு குழறும்படியகா உன்னைத் தொழுதும்; (அந்த அன்பின் பெருக்கத்தாலே) இடைவிடாமல் அழுதும்; உன்னாலே ஆண்டுகொள்ளப்படுமாறு உலகச் சார்புடைய எல்லாவற்றையும் கடந்த மெய்ப்பொருளைத் தந்தருள வேண்டும். 

பரகதி காட்டிய விரக சிலோச்சய பரம பராக்ரம... உபதேசித்ததன் மூலமாக அடியேனுக்குப் பரகதியை அளித்த வல்லவனே!  மலையரசனே!  பராக்கிரமம் மிகுந்தவனே! 

சம்பராரி படவிழியாற்பொரு பசுபதி போற்றிய பகவதி பார்ப்பதி தந்தவாழ்வே... மன்மதன் சாம்பலாகுமாறு நெற்றிவிழியாலே அவனை எரித்தவரான பசுபதியாகிய சிவபிரான் போற்றுபவரான பார்வதியம்மை ஈன்ற செல்வமே! 

இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட எழுகிரி யார்ப்பெழ வென்றவேலா... ஒலிக்கின்ற அலைகளைக் கொண்ட கடலில் தீப்பிடிக்கவும்; அசுரர்கள் கூப்பாடு போடவும்; குலகிரிகள் ஏழும் அதிர்ந்து ஆரவாரம் எழும்படியும் வென்ற வேலை உடையவனே!

இமையவர் நாட்டினில் நிறைகுடி யேற்றிய எழுகரை நாட்டவர் தம்பிரானே... தேவர்களை அவர்களுடைய உலகத்திலே நிறைவாகக் குடியேற்றியவனே!  எழுகரைநாடு என்ற தலத்தில் வீற்றிருக்கின்ற தம்பிரானே! 

சுருக்க உரை

உபதேசத்தின் மூலமாக அடியேனுக்குப் பரகதியைக் காட்டிய வல்லவனே!  மலையரசனே!  பராக்கிரமம் நிறைந்தவனே!  மன்மதன் சாம்பலாகும்படியாக நெற்றி விழியைத் திறந்த பசுபதியார் போற்றுபவரான பார்வதியம்மை ஈன்றெடுத்த செல்வமே!  ஒலிக்கின்ற கடலில் தீப்பிடிக்கும்படியும்; அசுரர்கள் கதறிக் கூப்பாடு போடும்படியும்; குலகிரிகள் ஏழும் அதிர்ந்து ஆரவாரம் எழும்படியும் வென்ற வேலை உடையவனே!  தேவர்களை அவர்களுடைய உலகிலே மீண்டும் குடியேற்றியவனே!  எழுகரைநாட்டில் வீற்றிருக்கின்ற தம்பிரானே! 

(உன்னை உனக்காகவே அன்றி) வேறெந்த நோக்கமும் இல்லாமல் உன்னைப் பார்த்தும்; உன்னை நினைத்து உருகியும்; விழிநீர் பெருக்கியும்; உன்மேல் கொண்டிருக்கும் அன்பு மேலும் மேலும் பெருகவும்; இரவு, பகல் எல்லாப் போதுகளிலும் அடியேன் உன்னைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் இல்லாமல் இருக்கவேண்டும்; ‘குரா மலரை விரும்பி அணிபவனே!  குமரனே!  முருகனே!  சரவணபவனே! கார்த்திகை மாதர்களின் முலைப்பாலை அருந்தியவனே!’ என்றெல்லாம் உன்னைப் போற்றிப் பாடவேண்டும்; (அப்படிப் பாடுவதால்) மொழி குழறி, தடுமாறி, உன்மீது பெருகுகின்ற அன்பின் காரணமாக கண்ணீர் பெருக்கியபடி இருக்க வேண்டும்; இந்த உலகச் சார்பற்றதான மெய்ப்பொருளை அடியேனுக்கு நீ தந்தருள வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com