பகுதி - 489

வழக்காடும் சொற்களைப் பயின்ற

பதச் சேதம்

சொற் பொருள்

வழக்கு சொல் பயில்வால் சளப்படு மருத்து பச்சிலை தீற்றும் மட்டைகள் வளைத்து சித்தச சாத்திர களவு அதனாலே

 

வழக்குச் சொல்: வழக்காடுகின்ற சொற்கள்; பயில்வால்: பயில்வதால்; சளப்படு: வஞ்சனைக்கு உள்ளாகும்; மருத்து: மருந்து; மட்டைகள்: பயனற்றவர்கள்; சித்தச சாத்திரம்: மன்மத சாத்திரம், காம சாத்திரம்;

மனத்து கற்களை நீற்று உருக்கிகள் சுகித்து தெட்டிகள் ஊர் துதிப்பரை மருட்டி குத்திர வார்த்தை செப்பிகள் மதியாதே

 

மனத்துக் கற்களை: கல் போன்ற மனங்களை; நீற்று உருக்கிகள்: பொடியாக்கி உருக்கச் செய்பவர்கள்; தெட்டிகள்: வஞ்சிப்பவர்கள்; ஊர் துதிப்பரை: ஊரிலே துதிப்பவர்களை; மருட்டி: மயக்கி; குத்திர: வஞ்சக;

கழுத்தை கட்டி அணாப்பி நட்பொடு சிரித்து பல் கறை காட்டி கைப்பொருள் கழற்றி கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி

 

அணாப்பி: ஏமாற்றி; கல்: வைரக் கல்; புகர்: கற்களின் நிறமும் குற்றமும்; மாற்று: பொன்னாக இருந்தால் அதன் மாற்று; உரைப்பு: உரைத்துப் பார்ப்பது; கரிசாணி: உரைகல், touchstone;

கணக்கிட்டு பொழுது ஏற்றி வைத்து ஒரு பிணக்கு இட்டு சிலுகு ஆக்கு பட்டிகள் கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ

 

பொழுதேற்றி: பொழுது போக்கி; சிலுகு ஆட்டி: குழப்பத்தை உண்டாக்கி; பட்டிகள்: விபசாரிகள்; கலைக்குள்: மயக்குகின்ற தன்மைக்குள்; புக்கிடு: புகுகின்ற, விழுகின்ற;

அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி அக்கணம் அழித்திட்டு குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய்

 

அழல்கண்: நெருப்பைப் போன்ற கண்; தப்பறை: பொய், சூது; மோட்டு: மடமை; நெருக்கி: நசுக்கி; பொட்டெழ: பொடியாகும்படி; நூக்கி: முறித்து; குறவாட்டி: குறமகள்;

அகப்பட்டு தமிழ் தேர்த்த வித்தகர் சமத்து கட்டியில் ஆத்தம் உற்றவன் அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன்

 

வித்தகர்: வல்லவர்; சமத்துக் கட்டி: திறமையாகக் கட்டப்பட்ட (பாட்டில்); ஆத்தம்: விருப்பம்; கட்செவி: பாம்பு, ஆதிசேடன்;

உழை கண் பொன் கொடி மா குல குயில் விருப்பு உற்று புணர் தோள் க்ருபை கடல் உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே

 

உழைகண்: மான்போன்ற கண்(ணை உடைய திருமகள்); பொற்கொடி: வள்ளி (வள்ளி மானிடத்திலே பிறந்தவர்.  திருமகள் ‘உழைக்கண்’ என்று மானாகச் சித்திரிக்கப்படுகிறார்; 

உரைக்க செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு செறி நால் கவிப்பணர் ஒடுக்கத்துச் செறிவாய் தலத்து உறை பெருமாளே.

 

உரைக்க: மெய்ப் பொருளைச் சொல்ல; செட்டியனாய்: உருத்திரஜன்மன் என்ற பெயரில் செட்டியின் மகனாய்; பன்: பல; கவிப்பணர்: புலவர்கள்;

வழக்குச் சொல் பயில்வால் சளப்படு மருத்துப் பச்சிலை தீற்றும் மட்டைகள்... வழக்காடும் சொற்களைப் பயின்றுள்ள காரணத்தால் வஞ்சனைக்கிடமான மருந்து, பச்சிலைகளை ஊட்டுபவர்களான பயனற்றவர்களும்;

வளைத்துச் சித்தச சாத்திரக் களவு அதனாலே மனத்துக் கற்களை நீற்று உருக்கிகள்... (ஆண்களை) வளைத்துப் பிடித்துக்கொண்டு, மன்மத சாத்திரத்திலே சொல்லப்பட்டுள்ள கள்ளத்தனமான வழிமுறைகளால், வந்திருப்போரின் மனம் கல்போன்று இருந்தாலும் அதைப் பொடியாக்கி உருக்கவல்லவர்களும்;

சுகித்துத் தெட்டிகள் ஊரத் துதிப்பரை மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள்... சுகத்தைப் பெற்று வஞ்சிப்பவர்களும்; ஊரிலே தம்மைத் துதிப்பவர்களை மயக்கி, சூது நிறைந்த வார்த்தைகளைப் பேசுபவர்களும்;

மதியாதே கழுத்தைக் கட்டி அணாப்பி நட்பொடு சிரித்துப் பல் கறை காட்டி...
மதிப்பு எதையும் காட்டாமல், கழுத்தைக் கட்டிக்கொண்ட ஏமாற்றியும் நட்போடு சிரித்தும், பல்லிலுள்ள வெற்றிலைக் கறையைக் காட்டியும்;

கைப்பொருள் கழற்றிக் கல் புகர் மாற்று உரைப்பு அது கரிசு ஆணி கணக்கிட்டுப் பொழுது ஏற்றி வைத்து... கையிலுள்ள பொருளைப் பிடுங்கிக் கொண்டு (அது ரத்தினமானால்) அதன் நிறத்தையும் குற்றத்தையும் கணக்கிட்டும்; (அது பொன்னானால்) உரைகல்லிலே உரசியும் கணக்குகளைப் பார்த்தபடி பொழுதைக் கழித்த(படி இருப்பவர்களும்);

ஒரு பிணக்கு இட்டுச் சிலுகு ஆக்கு பட்டிகள்... சண்டையிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களான விபசாரிகளுடைய,

கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை ஒழியேனோ... தந்திரமான கலைகளுக்குள் அகப்பட்டுக்கொள்கிற பாழான புத்தியை நான் ஒழிக்கமாட்டேனோ?  (ஒழிக்க வேண்டும்).

அழல் கண் தப்பறை மோட்டு அரக்கரை நெருக்கி பொட்டு எழ நூக்கி... நெருப்பைப் போன்ற கண்களையும் பொய்யையும் சூதையும் கொண்ட, மடமை நிறைந்த அசுரகளைப் பொடியாகும்படி முறித்துத் தள்ளி அவர்களை,

அக்கணம் அழித்திட்டுக் குறவாட்டி பொன் தன கிரி தோய்வாய்... அக்கணத்திலேயே அழித்து; குறமகள் வள்ளியின் திருமார்பைத் தழுவுபவனே!

அகப்பட்டுத் தமிழ் தேர்த்த வித்தகர் சமத்துக் கட்டியில் ஆத்தம் உற்றவன்... தமிழிலே தேர்ந்தவர்களான புலவர்களிடத்திலே வசப்பட்டவனும்; அவர்கள் இயற்றுகின்ற பாடல்களில் விருப்பமுள்ளவனும்;

அலைக்குள் கண் செவி மேல் படுக்கையில் உறை மாயன்... கடலிலே ஆதிசேஷனாகிய பாம்பின்மேலே துயில்பவனுமான திருமால் (முனிவரின் வடிவத்திலே வந்தபோது),

உழைக் கண் பொன் கொடி மாக் குலக் குயில் விருப்பு உற்று புணர் தோள் க்ருபைக் கடல்... இலக்குமியாகிய மானினிடத்திலே பிறந்த பொற்கொடியான சிறந்த (வேடர்) குலத்துக் குயிலான வள்ளியம்மையின்மீது விருப்பம் கொண்டு அவருடைய தோள்களை அணைத்த கருணைக் கடலே!

உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன் மருகோனே... உறிக்குள்ளே கையை விட்டு (வெண்ணெய் திருடியவனான) அச்சுதனின் மருமகனே!

உரைக்கச் செட்டியனாய் பன் முத்தமிழ் மதித்திட்டு... எது ஏற்கத்தக்க உரை என்பதைச் சொல்வதற்காக (உருத்திரசென்மன் என்ற பெயரில்) செட்டிமகனாகப் பிறந்து* பல சங்கப் புலவர்கள் சொன்ன உரைகளையெல்லாம் ஆய்ந்து, மதிப்பிட்டு,

(சோமசுந்தரேசர் சொற்படி மதுரையில் தனபதி செட்டியார் என்பவருடைய மகனாக வந்து அவதரித்து உருத்திரசென்மர் (ருத்ரஜன்மர்) என்ற பெயர் படைத்த சிறுவனை அழைத்துத் தொழுது சங்கப் பலகையில் அமர்த்தி இந்தக் கேள்வியை அவன் முன் வைக்க, நக்கீரர், கபில பரணர் ஆகிய மூவரின் உரையே சிறந்தது என்று முகக்குறிப்பால் உணர்த்திய செய்தி சொல்லப்படுகிறதுஇதை சேவல் விருத்தத்தின் நான்காம் பாடலிலும் பார்த்தோம்.)

செறி நால் கவிப்பணர் ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்து உறை பெருமாளே... செறிவான (ஆசு, மதுரம், சித்திர, வித்தார என்ற) நாலு வகைக் கவிகளைப் பாடவல்ல பாணர்களுடன் சேர்ந்து, ஒடுக்கத்துச் செறிவாய் என்ற தலத்தில் உறைகின்ற பெருமாளே!

சுருக்க உரை

நெருப்பைப் போன்ற கண்களையும் பொய்யையும் சூதையும் கொண்டவர்களான  அசுரர்கள் பொடிபடும்படியாகத் தாக்கி; அக்கணமே அவர்களை அழித்து; குறமகளான வள்ளியம்மையின் கொங்கையான மலையை அணைந்தவனே!  தமிழிலே தேர்ச்சிபெற்றவர்களான புலவர்களிடம் வசப்பட்டு; அவர்கள் திறமையாக இயற்றுகின்ற பாடல்களிலே விருப்பம் கொண்டவனும்; கடலிலே ஆதிசேடனின்மேல் துயில்பவனுமான திருமால் (சிவமுனி என்ற முனிவராக) வந்தபோது

இலக்குமியாகிய மானினிடத்திலே தோன்றிய வேடர்குலக் கொடியான வள்ளியின்பேரில் காதல்கொண்டு அவளை அணைத்த தோள்களைக் கொண்ட கருணைக்கடலே!  வெண்ணெய் வைத்த உறிக்குள்ளே கையைவிட்டுத் திருடியுண்ட அச்சுதனுடைய மருமகனே!  சிறந்த உரை எது என்பதைத் தெரிவிப்பதற்காக (தனபதி என்னும்) செட்டியின் மகனான (உருத்திர சென்மனாக) வந்து, சங்கப் புலவர்கள் பலரும் கூறிய உரைகளில் சிறந்ததை ஆராய்ந்து சொல்லி; ஆசுகவி, மதுரகவி, சித்திரகவி, வித்தாரக் கவி என்ற நால்வகைக் கவிதைகளிலே வல்லவர்களான புலவர்களோடு சங்கத்திலே வீற்றிருந்தவனே!  ஒடுக்கத்துச்செறிவாய் என்னும் தலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

வழக்காடும் சொற்களைப் பயின்றவர்களும்; வஞ்சனைக்கிடமான மருந்துகளையும் பச்சிலைகளையும் ஊட்டுபவர்களும்; பயனற்றவர்களும்; ஆடவர்களைத் தம்பால் ஈர்த்து காமசாத்திரத்திலே சொல்லப்பட்டுள்ள வஞ்சகமான வழிமுறைகளால், தம்மை நாடிவந்தவர்களுடைய கல் போன்ற மனங்களையும் உருக்கியும் பொடியாக்கியும்; அவர்களிடத்திலுள்ள பொருட்களைக் கவர்ந்தும்; அவற்றை மதிப்பிட்டுக் கணக்குப் பார்ப்பதிலேயே காலம் கழிப்பவகளும்; அந்தப் பொருள்களின் காரணமாக சண்டையை வளர்த்து குழப்பம் விளைவிப்பவர்களுமான விபசாரிகளுடைய வலையிலே சிக்கத் துடிக்கின்ற இந்தப் பாழும் புத்தியை நான் ஒழிப்பதற்கு அருள்புரிய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com