பகுதி - 451

குளிர்ச்சிக்கு அரசனான சந்திரன் வீசுகின்ற

பதச் சேதம்

சொற் பொருள்

இம ராஜன் நிலா அது எறிக்கும் கனலாலே

 

இமராஜன் நிலா: பனிக்கு அரசனாகிய நிலா; எறிக்கும்: எறிகின்ற, வீசுகின்ற (இது ‘எரிக்கும்’ என்ற சொல்லினின்றும் வேறுபட்ட ஒன்று);

இள வாடையும் ஊரும் ஒறுக்கும் படியாலே

 

இள வாடை: மெல்லிய தென்றல் (வாடை என்ற சொல்லுக்கு வடக்கிலிருந்து வீசும் காற்றென்றும் பொருளுண்டு. ‘அலகின் மாறு மாறாத’ என்ற திருப்புகழில் வாடை என்ற சொல்லை ‘வடவமுகாக்கினி’ என்ற பொருளில் குருநாதர் பயன்படுத்தியிருக்கிறார்.  இங்கே ‘காற்று’ என்று பொருள் கொள்வது பொருந்தும்); ஒறுக்கும்: தண்டிக்கும், துன்புறுத்தும்;

சமர் ஆகிய மாரன் எடுக்கும் கணையாலே

 

சமர்: போர்; சமராகிய: போருக்குக் கிளம்பிய; மாரன்: மன்மதன்;

தனி மான் உயிர் சோரும் அதற்கு ஒன்று அருள்வாயே

 

 

குமரா முருகா சடிலத்தன் குருநாதா

 

சடிலத்தன்: சடாமுடியைக் கொண்டன், சிவபெருமான்;

குற மா மகள் ஆசை தணிக்கும் திரு மார்பா

 

 

அமராவதி வாழ் அமரர்க்கு அன்று அருள்வோனே

 

அமராவதி: பொன்னகரம் எனப்படும் தேவலோகம்;

அருணா புரி வீதியில் நிற்கும் பெருமாளே.

 

 

இமராஜன் நிலாவது எறிக்குங் கனலாலே... குளிர்ச்சிக்கு அரசனான சந்திரன் எறிகின்ற கனலை ஒத்த கதிர்களாலும்;

இளவாடையும் ஊரும் ஒறுக்கும்படியாலே... மெல்லிய தென்றல் காற்றும் ஊராருடைய ஏச்சுகளும் துன்பத்தை விளைவிப்பதாலும்;

சமராகிய மாரன் எடுக்குங் கணையாலே... (என்மீது) போர்தொடுப்பதற்காக மன்மதன் எடுத்துத் தொடுக்கின்ற மலர்க்கணைகளாலும்;

தனிமானுயிர் சோரும் அதற்கு ஒன்றருள்வாயே... ஆதரவற்றுத் தனியாக நிற்கும் மான் போன்ற இந்தப் பெண், உயிர் சோர்ந்து போகிறதே, அவ்வாறு சோர்ந்து போகாமல் இருப்பதற்கான மார்க்கத்தைக் காட்டியருள வேண்டும்.

குமரா முருகா சடிலத்தன் குருநாதா... குமரனே! முருகனே!  சடாமுடியைக் கொண்ட சிவபெருமானுடைய குருநாதனே!

குறமாமகள் ஆசை தணிக்குந் திருமார்பா... குறத்திருமகளான வள்ளியம்மையுடைய ஆசையைத் (தழுவுவதால்) தணிக்கின்ற திருமார்பனே!

அமராவதி வாழ்வு அமரர்க்கன்று அருள்வோனே... பொன்னகரமாகிய தேவலோகத்தில் மீண்டும் வாழும்படியாக தேவர்களுக்கு அருள்புரிந்தவனே!

அருணாபுரி வீதியி னிற்கும் பெருமாளே.... திருவண்ணாமலைத் தலத்து வீதியிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

குமரா! முருகா!  சடாமுடியைத் தாங்கும் சிவபெருமானுடைய குருநாதா!  குறத்திருமகளான வள்ளியம்மையுடைய ஆசையை அணைப்பதால் தணிக்கின்ற திருமார்பை உடையவனே!  அமரர்கள் தேவலோகத்தில் மீண்டும் வாழும்படியாக அருள்புரிந்தவனே!  திருவண்ணாமலையின் வீதியிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

குளிர்ச்சிக்கு அரசனான சந்திரன் வீசுகின்ற நெருப்பை ஒத்த கதிர்களாலும்; தென்றல் காற்றாலும்; ஊராரின் ஏச்சுகளாலும் வருந்துபவளும்; ஆதரவற்றுத் தனியாக இருப்பவளுமான மான் போன்ற இந்தப் பெண் தன் நிலைமையால் உயிர்சோர்ந்து போகிறாள்.  அவ்வாறு சோர்ந்து போய்விடாதபடியான நல்ல வழியைக் காட்டியருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com