பகுதி - 457

வெட்சிப் பூவையும் மாலையாகச் சூடிய

பதச் சேதம்

சொற் பொருள்

பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் ரெட்டால் வைத்தே பத்தி பட வேயும்

 

ஏழெட்டு: (7x8) ஐம்பத்தாறு; ஈரெட்டு: பதினாறு; ஏழ் இரட்டால்: பதினான்கு (மொத்தம் 96—96 தத்துவங்கள்); பத்திப்பட: வரிசைப்பட

பை பீறல் கூரை பாசத்தா  சற்காரத்துக்கு இரை தேடி

 

பை: தோற்பை; பீறல்: கிழிந்த; கூரை: குடில்; பாசத்தா: பாசத்தினால்; சற்காரம்: உபசாரம் (இந்த உடலை உபசரிப்பதற்காக, பேணுவதற்காக);

எத் தேசத்து ஓடி தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி

 

எத்தேசத்து: எந்தெந்த தேசங்களுக்கோ; தேசத்தோடு ஒத்து; அந்தந்த தேசங்களுக்கு ஏற்றவாறு; சப்தத்திலும்: (சப்தம்: ஏழு) ஏழு தீவுகளுக்கும்;

எய்த்தே நத்தா பற்றா மல் தாது இற்றே முக்க கடவேனோ    

 

எய்த்து: இளைத்து; நத்தா: நத்தி, விரும்பி; பற்றா: பற்றி, பற்றியிருந்து; மல்: திரண்ட, வளமான; தாது: வாத, பித்த, சிலேத்துமங்கள்; முக்க: மூழ்க;

சத்தே முற்றாய் அத்தானை சூர் கல் சாடி கற்பு அணி தேசா

 

சத்தே: சத்தான பொருளே; முற்றாய்: முதிராதவனே, என்றும் இளையவனே; அத்தானை: அந்தத் தானை, அச்சேனை; சூர்: சூரனையும்; கல்: மலை—கிரெளஞ்சம்; சாடி: தாக்கி அழித்து; கற்பு அணி தேசா: (கற்பு: நீதி) அணி—அணிந்த, மேற்கொண்ட); தேசா: தேசுடையவனே, ஒளியுடையவனே;

சட் சோதி பூதி பாலத்தா அ கோடல் செச்சைய மார்பா

 

சட்சோதிப் பூதிப் பாலத்தா: (அன்வயம்) சோதிப் பூதி ஷட் பாலத்தா; கோதிப் பூதி: ஒளிபொருந்திய விபூதி; ஷட் பாலத்தா: ஆறு திருநெற்றிகளை (பாலம்: நெற்றி); கோடல்: வெண்காந்தள்; செச்சை: வெட்சி;

முத் தாபத்தர் எட்டா வைப்பா வித்தா முத்தர்க்கு இறையோனே

 

முத்தாபத்தர்: (மண், பெண், பொன் என்று) மூன்று தாபங்களை உடையவர்கள்; எட்டா: எட்டுவதற்கு அரிதான; வைப்பா: நிதியே (வைப்பு: நிதி); வித்தா: வித்தே, விதையே;

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.

 

முத்தா: முத்துப் போன்றவனே; முத்தீ அத்தா: மூன்று வகையான தீயாலும் வளர்க்கப்படும் ஓமங்களுக்கும் தலைவனே; முத்தா: முக்தனே;

பத்து ஏழு எட்டு ஈரெட்டு ஏழ் ரட்டால்... பத்து, ஏழெட்டு (ஐம்பத்தாறு), ஈரெட்டு (பதினாறு), ஏழ் இரட்டால் பதினான்கு (ஆக 10+56+16+14=96) (அல்லது 10+7+8+16+7=48; இதன் இரட்டி 96—கணக்கை எப்படியும் போடலாம்) ஆகிய தொண்ணூற்றாறு தத்துவங்களால்,

வைத்தே பத்திப் பட வேயும் பைப் பீறல் கூரை பாசத்தா(ல்)... அமைக்கப்பட்டதும்; வரிசைப்படி பொருத்தப்பட்டதும்; தோற்பையும், கிழிபடக்கூடிய குடிலுமான இந்த உடல்மீது வைத்துள்ள பாசத்தின் காரணமாக,

சற்காரத்துக்கு இரை தேடி... (இநத உடலுக்கு) உபசாரம் செய்து பேணுவதற்காக உணவைத் தேடி;

எத் தேசத்து ஓடித் தேசத்தோடு ஒத்து ஏய் சப்தத்திலும் ஓடி... எந்தெந்த தேசங்களுக்கோ ஓடிச் சென்றும் அந்தந்த தேசங்களுக்கு ஏற்ப அங்க இருந்தும்; ஏழு தீவுகளுக்கும் சென்றும்;

எய்த்தே நத்தா பற்றா... இளைத்தும்; விருப்பத்துடனும் பற்றுமிகக் கொண்டும்;

மல் தாது இற்றே முக்கக் கடவேனோ... திரண்டிருக்கும் (வாத, பித்த, சிலேத்தும) தாதுக்கள் ஒடுங்கி இற்றுப்போக, நான் இவ்வாறு முழுகுவதுதான் எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறதோ.  (இவ்வாறு மூழ்காமல் ஆண்டருள வேண்டும்).

சத்தே முற்றாய் அத்தானைச் சூர் கல் சாடிக் கற்பு அணி தேசா... மெய்ப் பொருளே!  என்றும் இளையவனே!  அத்தனை சைனியங்களோடு வந்தவனான சூரபத்மனையும் கிரெளஞ்ச மலையையும் சாடி அழித்து

சோதிப் பூதி சட் பாலத்தா... ஒளி நிறைந்ததான திருநீற்றை அணிந்த ஆறு திருநெற்றிகளை உடையவனே!

அக் கோடல் செச்சைய மார்பா... அந்த வெண்காந்தள் மலரையும் வெட்சி மாலையையும் அணிந்த மார்பனே!

முத் தாபத்தர் எட்டா வைப்பா... மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்று ஆசைகளைக் கொண்டவர்கள் அடைவதற்கு அரிதான வைப்பு நிதியே!

வித்தா முத்தர்க்கு இறையோனே... (முக்திக்கு) வித்தாக அமைந்தவனே!  முக்தர்களான ஞானவான்களுக்கு முதல்வனே!

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.... முத்தைப் போல அரியவனே! (ஆகவனீயம், காருகபத்தியம், தக்கிணாக்கினி என்ற) மூன்று தீக்களால் வளர்க்கப்படும் வேள்விகளுக்குத் தலைவனே!  தூயவனே! முத்தனே!  முக்தியை அளிக்கவல்ல பெருமாளே!

சுருக்க உரை

மெய்ப்பொருளே!  என்றும் இளையவனே!  பெரிய சேனைகளோடு வந்த சூரனையும் எதிர்ப்பட்ட கிரெளஞ்ச மலையையும் சாடி அழித்தவனே!  நீதிநெறியைப் பூண்டு ஒளிபொருந்தித் திகழ்பவனே!  ஒளிநிறைந்ததான திருநீறு விளங்குகின்ற ஆறு திருநெற்றிகளைக் கொண்டவனே!  வெண்காந்தளையும் வெட்சிப் பூவையும் மாலையாகச் சூடிய மார்பனே!  மண், பெண், பொன் ஆசைகளை உடையவர்களுக்கு எட்டாத சேமப் பொருளே!  முக்திக்கு வித்தே!  ஞானவான்களுடைய இறைவனே!  முத்தைப் போல அரியவனே!  மூன்று தீக்களால் வளர்க்கப்படும் வேள்விகளுக்குத் தலைவனே!  பரிசுத்தனே!  பற்றற்ற முக்தனே!  முக்திதரவல்ல பெருமாளே!

தொண்ணூற்றாறு வகையான தத்துவங்களால் அமைக்கப்பட்டதும்; தோற்பையாலும், கிழிந்துபோகின்ற கூரையாலும் அமைந்த உடலாகிய இந்தக் குடிலை உபசரித்துப் பேணுவதற்காக உணவு தேடியும்; அதற்காக பல தேசங்களுக்கு ஓடியும்; அந்தந்த தேசங்களுக்கு ஏற்ப வாழ்க்கை நெறிகளை அமைத்துக்கொண்டும்; ஏழு தீவுகளுக்கும் சென்றும்

இளைத்துப் போயும்; தீராத விருப்பத்துடனும்; விடாமல் பற்றியிருந்தும்; இந்த உடலில் வளமாக இருந்த தாதுக்கள் முற்றிலும் அழிந்துபோய் இந்த வேதனைகளிலேயே நான் முழுகி அழிந்துபடுவேனோ!  (அவ்வாறு அழியாமல் அடியேனைக் கடைத்தேற்றியருள வேண்டும்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com