பகுதி - 607

வேண்டிய வரங்களை அளிப்பவனும்
பகுதி - 607

பதச் சேதம்

சொற் பொருள்

வரதா மணி நீ என ஓரில்

 

வரதன்: வரங்களை அருள்பவன்; மணி நீ: கண்மணி போன்றவன், சிந்தாமணி போன்றவன்; ஓரில்: ஓர்ந்து பார்த்தால், ஆராய்ந்து அறிந்தால்;

வருகா(த)து எது தான்அதில் 
வராது

 

வருகாதது: வராதது, கிடைக்காதது;

இரத ஆதிகளால் நவலோகம்

 

இரத ஆதிகளால்: இரசவாதம் முதலியவற்றால்; நவலோகம்: பொன், இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பித்தளை, தகரம், துத்தநாகம், வெண்கலம் ஆகிய ஒன்பது உலோகங்கள்;

இடவே கரியா(கு)ம் 
இதில்ஏது

 

 

சரதா மறை ஓதும் 
அயன்மாலும்

 

சரதா: மெய்யனே; மறை ஓதும் அயன்: மறையை ஓதுகின்ற பிரமன்;

சகல ஆகம நூல் அறியாத

 

நூல் அறியாத: நூலால் அறியப்படாத;

பர தேவதையாள் தருசேயே

 

 

பழனா புரி வாழ்பெருமாளே.

 

 

வரதா மணிநீயென ஓரில்... வேண்டிய வரங்களை அளிப்பவனும்; கேட்டவருக்குக் கேட்டதைத் தரும் சிந்தாமணியும் நீயேதான் என்று ஆராய்ந்து உணர்ந்தால்;

வருகா தெதுஎதுதான் அதில் வாரா(து) .. கிடைக்காதது எது?  (அவ்வாறு உணர்வதால்) எதுதான் அதனால் நிறைவேறாமல் போகும்?

இரதாதிகளால் நவலோகம் இடவே கரியாம் இதில் ஏது... பாதரசம் முதலானவற்றைக் கொண்டு செய்கின்ற ரசவாத வித்தையால் ஒன்பது உலோகங்களின் கலவையை (ஒன்றாகக் கலந்தாலும்) இறுதியில் கரிதான் எஞ்சும்.  இதனால் வேறு பயன் ஏது?

சரதா மறையோது அயன்மாலும் சகலாகமநூல் அறியாத... மெய் வடிவினனே!  மறைகளை ஓதும் பிரமனாலும்; திருமாலாலும்; அனைத்து வேத ஆகம நூல்களாலும் அறியமுடியதவளான,

பரதே வதையாள் தருசேயே பழனா புரிவாழ் பெருமாளே... பரதேவதையான உமையம்மை அருளிய சேயே!  பழனிப்பதியிலே வீற்றிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை

மெய்யனே!  மறைகளை ஓதும் பிரமனாலும் திருமாலாலும் அனைத்து வேத, ஆகமங்களாலும் அறிய முடியதவளும் பரதேவதையுமான உமையம்மை அருளிய சேயே!  பழனிப் பதியிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

எல்லா வரங்களையும் அளிப்பவனும்; வேண்டுவார்க்கு வேண்டுவதை அளிக்கும் சிந்தாமணியும் நீயேதான் என்று ஆராய்ந்து உணர்ந்தால் எதுதான் கிடைக்காது, எதுதான் நடக்காது? (இதைவிட்டு) இரசவாதம் செய்வதற்காக பாதரசம் முதலானவற்றுள் நவலோகங்களையும் இட்டுக் கலந்தாலும் இறுதியில் கரிதானே எஞ்சும்!  அதனால் என்ன பயன்!  (நான் இப்படி அலையாமல் நீயே அனைத்தும் என்று உணரும் வரத்தை அருளவேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com