பகுதி - 615

இருண்ட கரிய கூந்தலையும்
பகுதி - 615

பதச் சேதம்

சொற் பொருள்

வெம் காளம் பாணம் சேல்கண் 
பால் மென் பாகு அம்சொல்
 குயில் மாலை

 

வெங்காளம்: கொடிய விஷம்; பாணம்: அம்பு; சேல்: மீன்; மென் பாகு: வெல்லப் பாகு; மாலை: மாலை நேரத்தைப் போன்ற, இருண்ட;

மென் கேசம் தான் என்றே
கொண்டார் மென் தோள்ஒன்ற 
பொருள் தேடி

 

தோள் ஒன்ற: தோளோடு பொருந்த;

வங்காளம் சோனம் சீனம்போய் வன்பே துன்பபடலாமோ

 

சோனம்: சோனகம் (பாரதத்தின் 56 தேசங்களில் ஒன்று);

மைந்து ஆரும் தோள்மைந்தா 
அந்தா வந்தேஇந்த 
பொழுது ஆள்வாய்

 

மைந்து ஆரும்: வலிமை மிகுந்த; அந்தா: அழகா;

கொங்கு ஆர் பைந்தேன்உண்டே 
வண்டு ஆர் குன்றாள் 
கொங்கைக்குஇனியோனே

 

கொங்கு: பூந்தாது, மகரந்தம்;

குன்றோடும் சூழ்அம்பேழும் சூரும் போய்மங்க பொரு கோபா

 

சூழ் அம்போடும்: (அம்பு=அப்பு, நீர் எனவே) சூழ்திருக்கும் கடல்; சூரும்: சூரனும்; பொரு: போரிடும்; கோபா: கோபங்கொண்டவனே;

கங்காளம் சேர் மொய்ம்புஆர் 
அன்பார்கன்றேஉம்பர்க்கு 
ஒரு குரு நாதா

 

கங்காளம்: எலும்பு மாலை; மொய்ம்பு: வலிமை; அன்பார்: அன்பு ஆர்—அன்பு நிறைந்த; கன்றே: குழந்தையே; உம்பர்க்கு: தேவர்களுக்கு;

கம்பு ஊர் சிந்தார்தென்பால் 
வந்தாய் கந்தாசெந்தில் 
பெருமாளே.

 

கம்பு ஊர்: சங்குகள் தவழும்; சிந்தார்: சிந்து (கடல்) ஆர்க்கும்;

வெங்கா ளம்பாணஞ்சேல் கண்; பால் மென்பாகு அஞ்சொற் குயில்...  கொடிய நஞ்சையும் அம்பையும் மீனையும் ஒத்த கண்களையும்; பாலையும் வெல்லப் பாகையும் குயிலையும் ஒத்த இனிய சொற்களையும்;

மாலை மென் கேசந்தா னென்றே கொண்டார் மென்றோள் ஒன்றப் பொருள்தேடி...  இருண்ட கரிய கூந்தலையும் கொண்டுள்ள பெண்களுடைய தோளைச் சேர்வதற்காகப் பொருள் தேடவேண்டி,

வங்காளஞ் சோனஞ் சீனம்போய் வன்பே துன்பப் படலாமோ... வங்காளம், சோனகம், சீனா என்று பல தூர தேசங்களுக்குச் சென்று கொடிய துன்பங்களை அடையலாமோ.  (அவ்வாறு அடையாதபடி),

மைந்து ஆருந்தோள் மைந்தா அந்தா வந்தே யிந்தப் பொழுதாள்வாய்... வலிய தோள்களைக் கொண்ட குமரா!  அழகா!  இப்போதே வந்து என்னை ஆண்டுகொண்டு அருளவேண்டும்.

கொங்கார் பைந்தேனுண்டே வண்டார் குன்றாள் கொங்கைக் கினியோனே... மகரந்தம் நிறைந்த (பூக்களில்) பசிய தேனை உண்கின்ற வண்டுகள் நிறைந்திருக்கின்ற வள்ளி மலையைச் சேர்ந்தவளான வள்ளியம்மையின் மார்புக்கு இனியவனே!

குன்றோடுஞ் சூழ் அம்பேழுஞ் சூரும் போய் மங்கப் பொருகோபா... (சூழ்ந்து அரணாக விளங்கிய) ஏழு மலைகளும், ஏழு கடல்களும், (அவற்றை அரணாகக் கொண்டிருந்த) சூரனும் அழியும்படியாகச் சினங்கொண்டு போர்புரிந்தவனே!

கங்காளஞ்சேர் மொய்ம்பார் அன்பார் கன்றே உம்பர்க் கொருநாதா... எலும்பு மாலையை அணிந்த வலிய தோளையுடையவருக்கு அன்பு நிறைந்த மகனே!  தேவர்களுடைய ஒப்பற்ற தலைவனே!

கம்பு ஊர் சிந்தார் தென்பால் வந்தாய் கந்தா செந்திற் பெருமாளே....  சங்குகள் தவழ்கின்ற கடல் ஆரவாரிக்கும் தெற்குக் கரையிலே நிற்பதற்காக வந்தவனே!  கந்தனே! திருச்செந்தூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மகரந்தம் நிறைந்த மலர்களில் ததும்பும் தேனைப் பருகிய வண்டுகள் நிறைந்திருக்கின்ற வள்ளிமலையைச் சேர்ந்தவரான வள்ளியம்மையின் மார்புக்கு இனியவனே!  சூரனும், அவனுக்கு அரணாக விளங்கிய ஏழு மலைகளும் ஏழு கடல்களும் அழியும்படியாகக் கோபத்துடன் போரிட்டவனே!  எலும்பு மாலையை அணிந்த வலிய தோள்களை உடைய சிவனாரின் அன்புச் செல்வனே!  தேவர்களுடைய ஒப்பற்ற தலைவனே!  சங்குகள் தவழ்கின்ற தென்கடலின் கரையிலே நிற்க வந்தவனே!  கந்தனே! திருச்செந்தூரில் வீற்றருக்கின்ற பெருமாளே! 

கொடிய விஷத்தையும் அம்பையும் மீனையும் ஒத்திருக்கும் கண்களையும்; பாலையும் வெல்லப் பாகையும் குயிலையும் ஒத்திருக்கும் இனிய சொற்களையும்; இருட்டை ஒத்திருக்கும் கூந்தலையும் உடைய பெண்களுடைய தோள்களோடு பொருந்தியிருப்பதற்காகப் பொருள்வேண்டி, வங்கம், சோனகம், சீனா போன்ற பல தூர தேசங்களுக்கு அலைந்து திரிந்து நான் கொடிய துன்பங்களுக்கு ஆளாகலாமா?  (அவ்வாறு துன்பப் படாமலிருக்க) வலிமை மிக்க தோள்களைக் கொண்ட குமரனே! அழகனே!  இப்போதே வந்து என்னை ஆண்டருள்வாயாக.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com