பகுதி - 587

சதுரத்தரை நோக்கிய பூவொடு...

பதச் சேதம்

சொற் பொருள்

சதுர தரை நோக்கிய பூவொடு கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி

 

சதுர, தரை நோக்கிய பூ: மூலாதாரத்தைக் குறிப்பிடுகிறது; கதிர்: சூரிய, சந்திர, அக்கினி என்னும் மூன்று தீக்கள்;கோளகை: மண்டலம்;

சரண கழல் காட்டியே என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ஆறிரு சயில குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்

 

சயிலக் குலம்: மலைக் குலம்;

கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் மயிலின் புறம் நோக்கியனாம் என கருணை கடல் காட்டிய கோலமும் அடியேனை

 

கதிர் சுற்று உக: ஒளி சுற்றிலும் பரவ; நோக்கியனாம்: பாதுகாப்பவனாம் (நோக்கிய என்பதற்குப் பார்க்கின்ற என்றே பொருளிருந்தாலும், நோக்கிய பாதம் என்னும்போது பொருத்தம் கருதி பாதுகாக்கும் என்ற பொருள் மேற்கொள்ளப்பட்டது);

கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே

 

கனகத்தினும்: பொன்னைவிடவும்; முத்தமிழால் புகவே: முத்தமிழாலே (நற்கதில்) புக;

சிதற தரை நால் திசை பூதர(ம்) நெரிய பறை மூர்க்கர்கள் மா முடி சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே

 

சிதறத் தரை: தரை சிதற என்று மாற்றுக; பூதரம்: மலை;

சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா

 

சத்தினி: சக்தி வாய்ந்தவள்; விநாயகி: வினைகளை அறுப்பவள்;

விதுரற்கும் அரா கொடி யானையும் விகடத்து உறவு ஆக்கிய மாதவன் விசையற்கு உயர் தேர் பரி ஊர்பவன் மருகோனே

 

அராக் கொடியான்: பாம்புக் கொடியை உடைய துரியோதனன்; விகடத்து உறவு: இருவர் உறவையும் வேறுபடுத்திய, பிரித்த; விசையற்கு: விஜயனுக்கு, அர்ஜுனனுக்கு;

வெளி எண் திசை சூர் பொருது ஆடிய கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய விறல் மெய் திருவேட்களம் மேவிய பெருமாளே.

 

 

சதுரத்தரை நோக்கிய பூவொடு... (நான்கு திசைகளை உடையதால்) சதுரமாக இருக்கின்ற தரையை நோக்கியிருக்கின்ற பூவான மூலாதாரம் தொடக்கமாக,

கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய சிவ பாக்கிய நாடக அநுபூதி... (சூரியன், சந்திரன், அக்கினி ஆகிய) மூன்று கதிர்களால் அமைந்துள்ள மண்டலங்களும் (மூலாதரம் முதலான ஆறு ஆதாரங்களும்) குளிர்ச்சியடைந்து தழையும்படியாக சிவானுபூதியாகிய பேற்றை,

சரணக் கழல் காட்டியே என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய... திருவடியின் இணைக் கழல்களை காட்டியருளி, என்னுடைய ஆணவமாகிய மலம் அழியுமாறு கெடுத்து;

ஆறிரு சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும்... பன்னிரண்டு மலைகளைப் போன்ற திரண்ட தோள்களோடு ஆறு முகங்களையும்,

கதிர் சுற்று உக நோக்கிய பாதமும்... சுற்றிலும் ஒளியைச் சிந்தி (உயிர்களைப்) பாதுகாப்பதான திருவடியையும்;

மயிலின் புறம் நோக்கியனாம் என கருணைக் கடல் காட்டிய கோலமும்... மயிலின்மேலே வீற்றிருக்கும் கோலத்தில் பாதுகாக்கின்றவனாக கருணைக் கடலான உன் திருக்கோலத்தைக் காட்டி;

அடியேனை கனகத்தினும் நோக்கி இனிதாய் அடியவர் முத்தமிழால் புகவே பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே... அடியேனைப் பொன்னிலும் இனிதான பார்வையார் பார்த்தருளி; அடியார்கள் எல்லோரையும் போலவே நானும் முத்தமிழால் பாடி அதனாலே நற்கதியுள் புகுமாறு பார்த்த உன் அருட்பார்வையை என்றும் மறவேன்.

சிதறத் தரை நால்திசை பூதர(ம்) நெரிய... பூமி அதிரும்படியாகவும்; நான்கு திசைகளிலுமுள்ள மலைகள் நெரிந்து பொடியாகும்படியாகவும்;

பறை மூர்க்கர்கள் மா முடி சிதற கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே... பறையை முழக்கிக்கொண்டு வந்த மூர்க்கர்களான அசுரர்களுடைய பெரிய தலைகள் சிதறும்படியாகவும்; கடல் பேரொலியைச் செய்யும்படியாகவும் கூரிய வேலைச் செலுத்துபவனே!

சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி... சிவனுடைய பத்தினியும்; யமனை உததைத்த பாதத்தைக்* கொண்டவளும்; சக்தி வாய்ந்தவளும்;

(* யமனை உதைத்த பாதம் இடது பாதம் என்பதனாலும், இடது பாதம் அம்மைக்குரியது என்பதனாலும், யமனை உதைத்து அம்மையின் பாதமே என்றொரு கருத்துமுண்டு. ‘வலது பாகத்தில் சிவனைக் கொண்ட பரமகலியாணி’ என்று கந்தர் அலங்காரத்தில் பாடியவர் இப்படிப் பேசுவதில் வியப்பில்லை.)

மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா... எல்லோருக்கும் மூத்தவளும்; அன்பர்களுடைய இடர்களை நீக்குபவளும்; உலகங்களையெல்லாம் இந்தவிதமாகப் படைத்தவளுமான பார்வதி தேவியார் அருளிய பாலனே!

விதுரற்கும் அராக் கொடி யானையும் விகடத் துறவு ஆக்கிய மாதவன்... விதுரனும், பாம்பைக் கொடியாகக் கொண்ட துரியோதனும் மனம் வேறுபடும்படியாக ஆக்கிய மாதவனும்;

விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே... விஜயனுடைய பெரிய தேரின் குதிரைகளைச் செலுத்திய (பார்த்தசாரதி)யுமான திருமாலின் மருகனே!

வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய... எட்டு திக்கு வெளிகளிலும் மிக உக்கிரமாகப் போர் செய்த சூரனை,

கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே... (வென்றதால் அவனுடைய ஒருபகுதி சேவலாக மாற அதைக்) கொடியாகக் கையில் ஏந்தியிருக்கின்ற புகழ்விளங்கும்படியாக உலாவியவனே! வெற்றியும் வாய்மையும் விளங்குவதான திருவேட்களத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே! 

சுருக்க உரை

பூமி அதிரும்படியாகவும்; நாலு திசைகளிலுமுள்ள மலைகள் பொடிபடும்படியாகவும் பறையறைந்தபடி வந்த மூர்க்கமான அசுரர்களுடைய பெரிய தலைகள் சிதறும்படியாகவும்; கடல் கதறும்படியாகவும் வேலை வீசியவனே!  சிவனுடைய பத்தினியும்; எமனை உதைத்த பாதத்தைக் கொண்டவளும்; சக்திவாய்ந்தவளும்; யாவர்க்கும் மூத்தவளும்; அன்பர்களுடைய இடர்களை ஒழிப்பவளும்; உலகங்களைச் சிருஷ்டித்தவளுமான பார்வதி தேவியார் அருளிய பாலனே!  விதுரனுக்கும், பாம்பைக் கொடியாகக் கொண்ட துரியோதனனுக்கும் இடையில் இருந்த உறவு கேடுறும்படி மனவேறுபாட்டை ஏற்படுத்தியவரும்; அர்ஜுனனுடைய தேரைச் செலுத்தியவருமான திருமாலின் மருகனே!  எட்டுத் திக்கு வெளிகளிலும் வீரமாகப் போரிட்ட சூரனை வென்று அவனுடைய ஒருபகுதி சேவலாக மாற, அதைக் கொடியாகப் பிடித்துப் புகழ் விளங்குமாறு உலாவியவனே!  வெற்றியும் வாய்மையும் விளங்குவதான திருவேட்களத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே! 

பூமியின் நான்கு திசைகளையும் பார்க்கும்படியாக நான்கிதழ்கள் கொண்டதாக இருப்பதான மூலாதாரமான கமலம் தொடங்கி; சூரிய, சந்திர, அக்கினி என்னும் முச்சுடர்களால் ஆன மண்டலங்களான ஆறு ஆதாரங்களும் குளிரும்படியாக சிவப்பேற்றைத் தருவதான திருவடியிணையினை அடியனுக்குக் காட்டி; என்னுடைய ஆணவமலத்தைப் போக்கிய உன்னுடைய மலைபோன்ற பன்னிரண்டு தோள்களும்; ஆறு முகங்களும்; சுற்றிலும் பரவுகின்ற ஒளியால் உயிர்களைப் பாதுகாக்கின்ற திருவடியுமாக மயிலின்மேல் வீற்றிருந்தபடி பாதுகாக்கின்ற திருக்கோலத்தையும் காட்டி; மற்ற அடியார்களைப் போலவே நானும் முத்தமிழாலே உய்வடையும்படியாக உன்னுடைய பொன்னினும் இனிய திருப்பார்வையாலே பார்த்தருளியதையும் நான் என்றும் மறவேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com