பகுதி - 507

பிரளய காலத்தில் பூமியிலே கடல் பொங்குவதால்

பதச் சேதம்

சொற் பொருள்

ஆலம் போல் எழு நீலமேல் அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு(ம்) மாய விழியாலே

 

ஆலம்போல்: நஞ்சைப் போல், ஆலகால விஷத்தைப் போல்; நீலமேல்: நீலோத்பலத்தைவிட மேலானதாக; வரி கோல: வரிகளை—சிவந்த ரேகைகளை—உடையதாக; மாளம்: மாள(ப்) இறக்கும்படியாக (மெலித்தல் விகாரம்)

ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே

 

ஆரம்: மாலை, முத்துமாலை; ஆரம்பால்: ஆரத்தின்பால், ஆரத்தினிடத்திலே; தொடை: மாலை; சால: மிகவும்; ஆலும்: அசையும்; ஆடம்பார்: ஆடம்பரமான;

சால தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே

 

சால: மிகவும்; தாழ்வுறும்: இளைத்துக் காணப்படும்; மால: ஆசையைத் தரும்; ஏல்: பொருந்தி; ஓர் பிடியாய: ஒரு கைப்பிடியளவே உள்ள; துடி: உடுக்கை; நீப: நிப(ம்) ஒத்த, போன்ற (குறுக்கல் விகாரம்);

சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ

 

சாரம்: சார்வதால், சார்ந்திருப்பதால்; சார்விலனாய்: சார்பு (புகல்) இல்லாதவனாக; அநேகம்: கணக்கற்ற; காய்: காயும், கோபிக்கும், கொல்லும்; யமன்மீறு: யமனுடைய (செயல்) மீறுவதான; ஒழிவுஏது: ஒழியுமா சொல்;

பால் அம்பால் மண(ம்) நாறுகால் அங்கே இ(ஈ)றிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா

 

பால்: (பூமியின்)பால், பூமியிடத்திலே; அம்பால்: அப்பு (நீர்) நீரால்; மணம்: மணந்துகொள்ளல், சேர்தல், கலத்தல்; நாறு(ங்)கால்: தோன்றும் போது (நிலமும் நீரும் கலப்பது தோன்றும்போது); இறிலாத: ஈறு இல்லாத, முடிவற்ற; மாது அம்பா: அம்பாளாகிய மாது;

பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே

 

பாடு: பெருமை; அம்புஆர்: அம்பை ஒத்த, கூரிய; அந்தக: அந்தகாசுரன்; அரவு: வருத்தின; ஈர: கருணையாளனான (சிவன்மீது); பாசம்: அன்பு; தா: தாவும், பாயும்;

வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இரு பாலும் உற வீறு

 

வேல் அம்பு ஆர்: வேல் போலவும் அம்பு போலவும் விழிகளை உடைய; குறமாது: வள்ளி; மேல் உம்பார்: மேல், உம்பர்—விண்ணிலுள்ள தேவர்; தருமாது: தேவானை; வீறு: பெருமிதம்; இருபாலும் உற வீறு: இரண்டு பக்கங்களிலும் பொருந்த விளங்கும் (இரண்டாவது ‘வீறு’க்கு பொருந்த என்று பொருள்);

வேத அந்தா அபிராம நாதந்தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே.

 

வேத அந்தா: வேத முடிவில் இருப்பவனே; அபிராம: அழகனே; நாதந்தா: நாத அந்தா, நாத முடிவில் இருப்பவனே; அருள்பாவு: அருள் பரப்பும்; வேலங்காடு: திருவேற்காடு; 

ஆலம் போல் எழு நீலம் மேல் அங்கு ஆய் வரி கோல மாளம் போர் செயு(ம்) மாய விழியாலே... ஆலகால விஷத்தைப் போல உயர்வதும்; நீலோத்பல மலருக்கும் மேலானதும்; செவ்வரியோடிய அழகு வாய்ததும்; கண்டார் இறக்கும்படியாக போர்புரிவதுமான மாயம் வல்லதான கண்களையும்;

ஆரம் பால் தொடை சால ஆலும் கோபுர ஆர ஆடம்பார் குவி நேய முலையாலே... தமக்குமேலே முத்தாரம் மாலையாக மிகவும் அசைவதும்; கோபுரம்போல நிமிர்வதும்; ஆடம்பரமாகக் குவிவதும்; ஆசைக்கு இடமானதுமான முலைகளையும்;

சாலம் தாழ்வுறும் மால ஏல் அங்கு ஓர் பிடியாய வேள் அங்கு ஆர் துடி நீப இடையாலே... மிகவும் மெலிந்திருப்பதும்; ஆசையை ஊட்டுவதும்; ஒரு கைப்பிடியளவே இருப்பதும்; விருப்பத்துக்கு இடமாக விளங்குவதும்; உடுக்கையை ஒத்ததுமான இடையையும்;

சாரம் சார்விலனாய் அநேகம் காய் யமன் மீறு காலம் தான் ஒழிவு ஏது உரையாயோ... சார்ந்து கிடக்கின்ற காரணத்தால் வேறு புகலிடம் எதுவும் இல்லாமலிருக்கின்ற என்னை, பலநூறு பிறப்புகளிலே (உயிரைக் கவர்ந்து சென்று) வென்றவனான யமனுடைய கை ஓங்கியிருக்கின்ற நிலை மாறுவது என்றோ?   (என்றுதான் இந்தப் பிறவித்துயர் நீங்குமோ?)

பால் அம்பால் மண(ம்) நாறுகால் அங்கே இ(ஈ)றிலாத மாது அம்பா தரு சேயே வயலூரா... பூமி முழுவதும் கடல் நீர் நிறைந்து, நீரும் நிலமும் ஒன்று கலக்கின்ற (பிரளய காலம்) தோன்றும்போதும் முடிவு என்பதே இல்லாமல் நிலைப்பவளான அம்பிகை பெற்றெடுத்த மகவே!

பாடு அம்பு ஆர் திரி சூல நீடு அந்தக அர வீர பாசம் தா திருமாலின் மருகோனே... பெருமை நிறைந்ததும்; அம்பைப் போலக் கூரானதுமான திரிசூலத்தால் அந்தகாசுரனை வருத்திய* கருணை வள்ளலான சிவன்மீது அன்பைப் பொழிகின்ற திருமாலின் மருகனே!

(அந்தகாசுரன் இரணியாட்சனுடைய மகன்; பிரகலாதனுடைய தம்பி.  இவன் திருமாலையும் தேவர்களையும் வருத்திய காரணத்தால் கருணை நிறைந்தவரான சிவபெருமான் இவனைத் திரிசூலத்தால் அடக்கினார்.  இதை “இருள்மேவும் அந்தகன்மேல் திரிசூலம் பாய்ச்சி” என்று சுந்தரரும் (7:16:2 திருக்கலயநல்லூர்) “சூலத்தால் அந்தகனைச் சுருளக் கோத்து” என்று அப்பர் சுவாமிகளும் (6:83:9 திருப்பாசூர்) பிறரும் பாடியுள்ளனர்.)

வேல் அம்பு ஆர் குற மாது மேல் உம்பார் தரு மாதும் வீறு அங்கே இரு பாலும் உற வீறு... வேலைப் போலவும் அம்பைப் போலவும் விழிகளைக் கொண்ட குறமகளாகிய வள்ளியும்; விண்ணோர் வளர்த்த தேவானையும் பெருமிதத்தோடு இருபுறங்களிலும் பொருந்தியிருக்க;

வேத அந்தா அபிராம நாத அந்தா அருள் பாவு வேலங்காடு உறை சீல பெருமாளே... வேதத்தின் முடிவாக விளங்குபவனே!  அழகனே!  நாதத்தின் முடிவாக இருப்பவனே!  அருளைப் பரப்புகின்ற திருவேற்காட்டில் வீற்றிருக்கும் பரிசுத்தனான பெருமாளே!

சுருக்க உரை

பிரளய காலத்தில் பூமியிலே கடல் பொங்குவதால் நீரும் நிலமும் ஒன்றாகக் கலக்கும் நிலைதோன்றும் சமயத்திலும் முடிவுகளைக் கடந்து நிற்பவளான அம்பிகை பெற்றெடுத்த சேயே!  அம்பைப் போன்ற கூர்மையான திரிசூலத்தால் அந்தகாசுரனை அடக்கிய சிவனார்மீது அன்பைப் பொழிகின்ற திருமாலின் மருகனே!  வேலைப் போலவும் அம்பைப் போலவும் விழிகளைக் கொண்ட குறமகளான வள்ளியும்; விண்ணோர் வளர்த்தவளான தேவானையும் இருபுறங்களிலும் பெருமிதத்தோடு பொருந்தியிருக்க, வேதத்தின் முடிவாகவும் நாதத்தின் முடிவாகவும் விளங்குபவனே!  அழகனே!  அருளைப் பரப்புகின்ற திருவேற்காட்டில் வீற்றிருக்கும் பெருமாளே!

ஆலகால விஷத்தைப்போல உயர்வதும்; நீலோற்பலத்துக்கும் மேலானதும்; செவ்வரியோடியதும்; அழகு வாய்ந்ததும்; பார்த்தவர்களுக்கு மூச்சு நின்றுபோகும்படியாகப் போரிட வல்லதுமான விழியையும்; மேலே புரளும் முத்தாரத்தைக் கொண்டதும்; நன்றாக அசைவதும்; கோபுரம் போல எழுவதும்; அழகாக் குவிந்துள்ளதும்; ஆசையைத் தூண்டுவதுமான மார்பகத்தையும் சார்ந்து நிற்கின்ற காரணத்தால் வேறு புகலிடமற்றவனான என்னை பிறவி பிறவிதொறும் யமன் என் உயிரைக் கவர்ந்து சென்று எதாடர்ந்து வென்றுகொண்டே இருப்பதான இந்த நிலை என்று மாறுமோ.  (இந்த நிலைக்குக் காரணமான பிறவிப்பிணியை ஒழித்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com