பகுதி - 509

பேரிகைகளின் ஓசையானது திசைகளை

பதச் சேதம்

சொற் பொருள்

நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது அப்பு பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்)

நில் பொன் ககனமொடு ஆம் இவை பூத கலவை மேவி

 

பிணி: நோய்; காயம்: உடல்; அப்பு: நீர்; பிருதிவி: மண்; வாயு: காற்று; தேயு: நெருப்பு; நில்: நிற்கின்ற, உள்ளதான; பொன் ககனம்: பொலிவுள்ள ஆகாயம்; பூதக் கலவை: ஐம்பூதங்களின் சேர்க்கையால்; மேவி: ஏற்பட்டு;

நிற்கப்படும் உலகு ஆளவும் மாகர் இடத்தை கொளவுமே நாடிடும் ஓடிடு(ம்) நெட்டு பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை

 

நிற்கப்படும்: நிற்பதாகும்; மாகர்: விண்ணவர் (மாகம்: விண்); நெட்டு: செருக்கு; பணி: ஆபரணம்; கலை: ஆடை; மட ஆண்மை: மடத்தனமான அகங்காரத்துடன்;

எத்தி திரியும் இது ஏது பொய்யாது என உற்றது தெளிவு உணராது மெய் ஞானமொடு இச்சை பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை

 

எத்தி: ஏமாற்றி, வஞ்சித்து; பொய்யாது: பொய்க்காது, பொய் ஆகாது;

எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது இட்டு திருவடியாம் உயர் வாழ்வு உற இனிது ஆள்வாய்

 

எத்தில்: வஞ்சனையில்; கொடு: கொண்டு;

தத்தத்........என பேரி

 

 

சத்தத்து ஒலி திகை தாவிட வானவர் திக்கு கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட சர்ப்ப சத முடி நாணிட வேல் அதை எறிவோனே

 

திகை: திசை; திகை தாவிட: திசைகளைக் கடந்திட; வானவர் திக்குக் கெட: தேவர்கள் வாழும் திசை (கலக்கத்தால்) கெட; சர்ப்ப: பாம்பின்; சதமுடி:, (படம்கொண்ட) நூறு தலைகள்; நாணிட: நாணம் கொள்ள, அஞ்ச;

வெற்றி பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர் வெற்பு புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா

 

பொடியணி மேனியர்: திருநீற்றைப் பூசும் சிவனார்; கோகுல சத்திக்கு: திருமாலுக்கு; இடமருள்: இடது பாகத்தைக் கொடுத்த; தாதகி: ஆத்தி—ஆத்தி மாலை; வெற்புப் புரம்: மலைபோன்ற திரிபுரம்; நீறெழ: சாம்பலாக; காணியர்: கண்டவர்;

வெற்பு தட முலையாள் வ(ள்)ளி நாயகி சித்தத்து அமர் குமரா எமை ஆள் கொள வெற்றி புகழ் கருவூர் தனில் மேவிய பெருமாளே.

 

 

நித்த(ம்) பிணி கொடு மேவிய காயம் இது... இந்த உடலானது என்றென்றும் பிணிகளுக்கு ஆளாகி நிற்பதாகும்;

அப்புப் பிருதிவி வாயுவு(ம்) தேயுவு(ம்) நில் பொன் ககனமொடு ஆம் இவை பூத கலவை மேவி நிற்கப்படும்... இது நீர், மண், காற்று, நெருப்பு, பொலிவுள்ளதாகிய ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் சேர்க்கையான் உண்டாகி நிற்கிறது.

உலகு ஆளவும் மாகர் இடத்தைக் கொளவுமே நாடிடும் ஓடிடு(ம்)... உலகம் எல்லாவற்றையும் ஆளவேண்டுன்றும்; விண்ணோருடைய நாட்டைக் கொள்ளவேண்டுமென்றும் ஆசையுற்று அதற்காக ஓடியலைகின்றதும்;

நெட்டுப் பணி கலை பூண் இடு நான் எனும் மட ஆண்மை எத்தித் திரியும் இது ஏது... கர்வத்தோடு ஆடை அணிகலன்களை அணிந்துகொண்டும்; ‘நான்’ என்ற மடத்தனமான ஆணவத்தோடு ஏமாற்றித் திரிகின்ற இது என்ன?

பொ(ய்)யாது என உற்றுத் தெளிவு உணராது மெய் ஞானமொடு இச்சைப் பட அறியாது பொய் மாயையில் உழல்வேனை... இந்த நிலை என்றென்றும் பொய்க்காமல் (அப்படியே) நிலைத்திருக்கும் என்று நினைத்துக்கொண்டும்; தெளிவான உண்மையை உணராமலும்; மெய்யான ஞானத்தை அறிய விரும்பாமலும்; பொய்யான உலகமாயைகளின் உழன்றுகொண்டிருப்பவனாகிய என்னை,

எத்தில் கொடு நினது ஆர் அடியாரொடும் உய்த்திட்டு உனது அருளால் உயர் ஞான அமுது இட்டுத் திருவடியாம் உயர் வாழ்வு உற இனிது ஆள்வாய்... (ஏதோ ஒரு) தந்திரத்திலாவது (தடுத்து) ஆட்கொண்டு; உன்னுடைய அடியார்களோடு என்னைச் சேர்த்துவைத்து; உயர்வான ஞானமாகிய அமுதத்தை உன்னுடைய அருளாலே எனக்குத் தந்து; உன்னுடைய திருவடிகளாகிய மேலான பதத்தில் நான் நிலைக்குமாறு ஆண்டருள வேண்டும்.

தத்தத் தனதன தானன தானன தித்தித் திமிதிமி தீதக தோதக டத்தக் குடகுகு தாகுட தீகுட...... என பேரி சத்தத்து ஒலி திகை தாவிட... தத்தத் தனதன என்றெல்லாம் (பலவகையான தாளங்களில்) ஒலிக்கின்ற பேரிகைகளின் ஓசை திசைகளையெல்லாம் தாண்டீ அப்பாற் செல்ல;

வானவர் திக்குக் கெட வரு(ம்) சூரர்கள் தூள்பட சர்ப்பச் சத முடி நாணிட வேல் அதை எறிவோனே... தேவர்கள் இருப்பதான (விண் என்கின்ற மேல்) திசை கலக்கமுற்றுக் கெடும்படியாக வந்த அசுரர்கள் நொறுங்கிச் சிதறும்படியாகவும்; (ஆதிசேடனாகிய) பாம்பின் படங்கொண்ட நூறு தலைகளும் அஞ்சி நடுங்கும்படியாகவும் வேலாயுதத்தை வீசியவனே!

வெற்றிப் பொடி அணி மேனியர் கோகுல சத்திக்கு இடம் அருள் தாதகி வேணியர் வெற்புப் புரம் அது நீறு எழ காணியர் அருள் பாலா... வெற்றி நிறைந்ததான திருநீற்றைப் பூசிக்கொண்ட திருமேனியரும்; கோகுலத்தில் வளர்ந்த கண்ணனாகிய திருமாலுக்கு தன் உடலின் இடது பாகத்தைத் தந்தவரும் (சங்கரநாராயணர்); ஆத்தி மாலையை;ச சூடிய சடையைக் கொண்டவரும்; மலைபோனற திரிபுரங்கள் சாம்பலாகும்படியாகக் கண்டருளியருமான சிவபிரானின் மகனே! 

வெற்புத் தட முலையாள் வ(ள்)ளி நாயகி சித்தத்து அமர் குமரா... மலையை ஒத்த தனங்களைக் கொண்ட வள்ளியம்மையின் உள்ளத்திலே குடியிருக்கின்ற குமரனே!

எமை ஆள் கொள வெற்றிப் புகழ் கருவூர் தனில் மேவிய பெருமாளே.... அடியார்களாகிய எம்மை ஆட்கொள்வதற்காகவே வெற்றியின் புகழ் நிலவுகின்ற கருவூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

தத்தத் தனதன என்றெல்லாம் பல்வேறு தாளங்களோடு ஒலிக்கின்ற பேரிகைகளின் ஓசையானது திசைகளைத் தாண்டி தாவிச்செல்லும்படியாகவும்; தேவர்கள் வாழ்கின்ற மேலுலகம் அச்சத்தால் நிலைகுலையும்படியாகவும் வந்த அசுரர்களைத் தூளடிக்கும்படியாக வேலாயுதத்தை எறிந்தவனே!  வெற்றி நிறைந்ததான திருநீற்றைப் பூசுபவரும்; கோகுலத்தில் கண்ணனாக வந்த திருமாலுக்கு (சங்கரநாராயணனானத்) தன் இடது பாகத்தைத் தந்தவரும்; ஆத்தி மாலையைச் சூடிய சடையை உடையவரும்; மலைபோன்ற திரிபுரங்களைச் சாம்பலாகக் கண்டவருமான சிவபிரானுடைய மகனே! மலையை ஒத்த தனங்களைக் கொண்ட வள்ளியம்மையில் திருவுள்ளத்திலே குடியிருப்பவனே!  அடியார்களாகிய எம்மை ஆட்கொள்வதற்காகவே வெற்றியின் புகழ் நிறைந்த கருவூரில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

என்றென்றும் நோய்களுக்கு இருப்பிடமானதும்; நீர், மண், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களால் ஆனதுமான இந்த உடலைச் சுமந்து நான், உலகையெல்லாம் ஆளவேண்டுமென்றும்; தேவர்களின் உலகத்தையும் கைப்பற்ற வேண்டுமென்றும்; அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு திரிபவனும்; கர்வத்தோடு பலவகையான ஆடை ஆபரணங்களை அணிந்துகொண்டும்; ‘நான்’ என்ற மூடத்தனமான அகந்தையோடு வஞ்சித்துத் திரிகின்ற இந்த நிலையை என்னவென்று சொல்வது!  இந்த நிலை என்றும் பொய்க்காமல் நீடிக்கும் என்று கருதிக்கொண்டு உண்மையை உணராமலும்; மெய்ஞானத்தை விரும்பாமலும் உலகின் மாயைகளிலே அகப்பட்டு உழல்பவனான என்னை,

ஏதோ ஒருவகைத் தந்திரத்திலாவது தடுத்தாட்கொண்டு; உன்னுடைய அடியார்களோடு சேர்ப்பித்து; உன்னுடைய திருவருளாலே ஞானமாகிய அமுதத்தைத் தந்து; உன்னுடைய திருவடிகளான மேலான வாழ்வை அடையும்படியாக இனிதே ஆண்டருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com