பகுதி - 511

வேங்கை மரங்கள் நிறைந்த வெள்ளிகரத்தில்

பதச் சேதம்

சொற் பொருள்

தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும்

 

தொய்யில்: (மார்பகத்தின் மேல்) சந்தனக் குழம்பால் வரைதல்; செய்யில்: செய்தால், வரைந்தால்; நொய்யர்: தளர்பவர்கள்; கையர்: கீழ் மக்கள்; தொய்யும்: மெலிந்திருக்கும்; ஐய: (உண்டோ இல்லையோ என்று) ஐயத்தை எழுப்பும்;

துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு(ம்) கள்ள விழியாலும்

 

வள்ளை: ஒரு கொடி, காதுக்கு உவமையாகச் சொல்லப்படும் இலை; உள்ளல்: உள்ளியதை, எண்ணியதை;

மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு(ம்) நல்ல குழலாலும்

 

மைய: மை போன்ற—கரிய; மவ்வல்: காட்டு மல்லிகை; மல்கும்: நிறைந்திருக்கும்;

மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ

 

வல்லி: கொடி, கொடிபோன்ற பெண்;

செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல்

 

செய்ய: செந்நிறத்தை உடைய; துய்ய: தூய; புள்ளி நவ்வி: புள்ளிமான்; நவ்வி செல்வி: மான் ஈன்றவளான வள்ளி; கல் வரை: (ஒருபொருட் பன்மொழி) இரண்டுக்குமே மலை என்று பொருள்; ஏனல்: தினை;

தெய்வ வள்ளி மையல் கொள்ளு(ம்) செல்வ பிள்ளை முருகோனே

 

செல்வ பிள்ளை: செல்வப் பிள்ளை, ஓசைக்காக வலி மிகாமல் நின்றது;

மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி நகர் வாழ்வே

 

மெய்யர் மெய்ய: உண்மையானவருக்கு உண்மையானவனே; பொய்யர் பொய்ய: பொய்யருக்குப் பொய்யானவனே; வெள்ளை: வேங்கை மரம்;

வெய்ய சையவில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.

 

வெய்ய: விரும்பத்தக்க; சைய: மலை; சையவில்லி: மலையை வில்லாகக் கொண்ட சிவன்;

தொய்யில் செய்யில் நொய்யர் கையர் தொய்யும் ஐய இடையாலும்... சந்தனத்தைக் கொண்டு மார்பிலே தொய்யில் எழுதும்போது நெகிழ்வுற்றுத் தளர்வதைப் போலச் செய்யும் கீழ்மையுள்ள பெண்டிரின் மெல்லிய, (உண்டோ இல்லையோ என்ற) ஐயத்தை எழுப்புகிற இடையைக் கொண்டும்;

துள்ளி வள்ளை தள்ளி உள்ளல் சொல்லு(ம்) கள்ள விழியாலும்... துள்ளிக்கொண்டு, வள்ளைக் கொடியின் இலையைப் போன்ற காதுவரையில் நீண்டு மனத்திலே கொண்ட எண்ணத்தை (அந்தக் காதிடம் சொல்ல நீள்வது போன்ற) கள்ளப் பார்வையை உடைய கண்ணைக் கொண்டும்;

மைய செவ்வி மவ்வல் முல்லை மல்கு(ம்) நல்ல குழலாலும்... மையைப் போன்று கருமையாக இருப்பதும்; சிவந்த காட்டு மல்லிகையையும் முல்லையையும் சூடியுள்ள கூந்தலைக் கொண்டும்;

மையல் கொள்ள எள்ளல் செய்யும் வல்லி சொல்லை மகிழ்வேனோ... என்னை மையல் அடையுமாறு கேலிப் பேச்சுகளைப் பேசுகின்ற பெண்ணின் பேச்சு எனக்கு மகிழ்ச்சியைத் தருமோ?

செய்ய துய்ய புள்ளி நவ்வி செல்வி கல் வரையில் ஏனல்... சிவந்ததும்; தூய்மையானதும்; புள்ளிகளைக் கொண்டதுமான மான் (திருமகள்) பெற்ற செல்வியும்; மலையிலே தினைப்புனத்தைக் காத்தவளுமான,

தெய்வ வள்ளி மையல் கொள்ளு(ம்) செல்வ பிள்ளை முருகோனே... தெய்வமகளான வள்ளியின்மேல் மோகம் கொண்ட செல்வப் பிள்ளையே!  முருகனே! 

மெய்யர் மெய்ய பொய்யர் பொய்ய வெள்ளை வெள்ளி நகர் வாழ்வே... மெய்யர்க்கு மெய்யனே!  பொய்யர்க்குப் பொய்யனே!  வேங்கை மரங்கள் நிறைந்திருக்கும் வெள்ளிகரத்தின் வாழ்வே! 

வெய்ய சையவில்லி சொல்லை வெல்ல வல்ல பெருமாளே.... விரும்பத் தக்கவரும்; மேரு மலையை வில்லாகக் கொண்டவருமான சிவபெருமான் சொல்லை மீறி (பிரமனைச் சிறைவிட மறுத்த) பெருமாளே! 

சுருக்க உரை

சிவந்ததும் தூயதுமான புள்ளிமானான இலக்குமி பெற்ற செல்வியும்; மலையிலே தினைப்புனத்தைக் காத்தவளுமான தெய்வ வள்ளியின்மேல் மோகம் கொண்ட செல்வப் பிள்ளையே!  முருகனே!  மெய்யர்க்கு மெய்யனே!  பொய்யர்க்குப் பொய்யனே!  வேங்கை மரங்கள் நிறைந்த வெள்ளிகரத்தில் வாழ்பவனே!  விரும்பத் தக்கவரும்; மேருமலையை வில்லாகக் கொண்டவருமான சிவபிரானுடைய (பிரமனைச் சிறையிலிருந்து விடுக என்ற) சொல்லை வெல்ல வல்ல பெருமாளே!

சந்தனக் குழம்பால் மார்பிலே தொய்யில் எழுதும்போது நெகிழ்ந்தும் தளர்ந்தும் பாவனை காட்டும் கீழ்மையான பெண்கள் தங்களுடைய மெல்லிய இடையைக் கொண்டும்; வள்ளைக் கொடியின் இலையைப் போன்ற காதுக்கு மனத்திலே எண்ணியதைச் சொல்வதற்காகத் துள்ளி எழுவதைப் போன்ற நீண்ட கண்களைக் கொண்டும்; சிவந்த காட்டு மல்லியையும் முல்லையையும் சூடிய கரிய கூந்தலைக் கொண்டும் என்னை மையல் கொள்ளச் செய்யுமாறு கேலிப் பேச்சுகளைப் பேச, அந்தப் பேச்சுகளால் நான் மகிழ்ச்சி அடைவேனோ?  (மகிழ்ச்சியடையாத என்தை ஆண்டுகொள்ள வேண்டும்.) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com