பகுதி - 562

இந்தப் பாடல் மதுராந்தகத்துக்கானது

இந்த உடலை ஒரு பொருட்டாகக் கருதி இதை இறுகப் பற்றிக்கொள்ளாமல், உன்னுடைய இணையடிகளையே பற்றிக்கொள்ளும் எண்ணத்தைத் தந்தருள வேண்டும் என்று கோரும் இந்தப் பாடல் மதுராந்தகத்துக்கானது.  இங்குள்ள ஆலயத்துக்கு வட திருச்சிற்றம்பலம் என்ற பெயர் இருப்பதனைப் பாடல் குறிக்கிறது.

பெரும்பாலும் மூன்று மூன்று சீர்களாகப் பிரிந்து சுழல்கின்ற சந்தத்தைப் போலில்லாமல் ஒரு முழு அடியையும் ஒரே மூச்சில் படிக்கவேண்டிய அமைப்பைக் கொண்ட பாடல் இது.  அடிக்கு ஒற்றொழித்து 21 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்கள் இடையில் ஒரு வல்லொற்றைக் கொண்ட இரண்டு குற்றெழுத்துகளை உடையவை.  இவற்றில் ஆறாவது சீரில் மட்டும் இரண்டு வல்லொற்றுகள் பயில்கின்றன.  முதற்சீரில் மட்டும் ஒரு நெடில் பயில்கிறது. 

தனதாந்த தத்த தனன தத்தத்
      தந்த தத்த தந்த                     தனதானா

குதிபாய்ந்தி ரத்தம் வடிதொ ளைத்தொக்
         கிந்த்ரி யக்கு ரம்பை               வினைகூர்தூர்
      குணபாண்ட முற்ற கிலமெ னக்கைக்
         கொண்டி ளைத்த யர்ந்து           சுழலாதே
உதிதாம்ப ரத்தை யுயிர்கெ டப்பொற்
         கிண்கி ணிச்ச தங்கை             விதகீத
      உபயாம்பு யப்பு ணையையி னிப்பற்
         றுங்க ருத்தை யென்று            தருவாயே
கதைசார்ங்க கட்கம் வளைய டற்சக்
         ரந்த ரித்த கொண்டல்            மருகோனே
      கருணாஞ்ச னக்க மலவி ழிப்பொற்
         பைம்பு னக்க ரும்பின்             மணவாளா
மதனாந்த கர்க்கு மகவெ னப்பத்
         மந்த னிற்பி றந்த                குமரேசா
      மதுராந்த கத்து வடதி ருச்சிற்
         றம்ப லத்த மர்ந்த                 பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com