பகுதி - 683

பேராசைத் தொழில்களைப் புரிந்து அவதியுறுவேனோ!
பகுதி - 683

பதச் சேதம்

சொற் பொருள்

பொன் பூவை சீரை போல போதப் பேசி பொன் கனி வாயின்

 

பொன்: அழகிய; பூவை: நாகண வாய்ப்புள் (மைனா); சீரைபோல: சீராக, நேர்த்தியாக; போதப் பேசி: செவ்வையாகப் பேசி;

பொய் காமத்தே மெய்க்கு ஆம் அப் பூணைப் பூண் வெற்பில் துகில் சாய

 

மெய்க்கு ஆம்: உடலுக்குப் பொருந்துகிற; பூணைப் பூண்: ஆபரணங்களை அணியும்; வெற்பு: மலை, (இங்கே) மார்பகம்; துகில் சாய: ஆடை சரிய;

கற்பால் எக்கா உட்கோலி காசுக்கே கை குத்து இடும் மாதர்

 

கற்பால்: அதட்டிப் பேச்சும் பேச்சால்; எக்கா: எக்கி (எக்குதல்: தள்ளிக்கொண்டு முன்னே செல்லுதல்)—எனவே தாக்கி; உட்கோலி: (கோலுதல்: வளைதல்) மனம் கோணி; கைக்குத்து: கைச்சண்டை;

கட்கே பட்டே நெட்டு ஆசை பாடு உற்றே கட்டப் படுவேனோ

 

கட்கே: கண்ணுக்கே; நெட்டு ஆசை: நெடிய ஆசை, பேராசை; கட்டப் படுவேனோ: கஷ்டப் படுவேனோ;

சொல் கோலத்தே நல் காலை சேவிப்பார் சித்தத்து உறைவோனே

 

சொற்கோலத்தே: அழகிய சொற்களால்; நற்காலை: நல்ல திருப்பாதத்தை;

தொக்கே கொக்காகி சூழ அ சூர் விக்கா முக்க தொடும் வேலா

 

தொக்கே: த்வக் என்றால் தோல், இங்கே உடலுக்கு ஆகிவந்தது; கொக்காகி: மாமரமாகி; விக்கா: விக்கி—திண்டாட; முக்க: முனகும்படியாக; தொடும் வேலா: வேலை எறிந்தவனே

முற் காலத்தே வெற்பு ஏய்வு உற்றார் முத்தாள் முத்த சிறியோனே

 

வெற்பு: மலை (கைலாயம்); ஏய்வுற்றார்: பொருந்தியிருந்தார், வீற்றிருந்தார்; முத்தாள்: முத்துப் போன்றவள்; முத்த: முத்தமிட;

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.

 

முத்தா: முத்துப் போன்றவனே; முத்தீ அத்தா: மூன்று வகையான தீயாலும் வளர்க்கப்படும் ஓமங்களுக்கும் தலைவனே; முத்தா: முக்தனே;

பொன் பூவைச் சீரைப் போலப் போதப் பேசிப் பொன் கனி வாயின்... அழகிய மைனாவின் நேர்த்தியான குரலைக் கொண்டு கொவ்வைக் கனியைப் போன்ற வாயால் இனிக்க இனிக்கப் பேசி,

பொய்க் காமத்தே மெய்க்கு ஆம் அப் பூணைப் பூண் வெற்பில் துகில் சாய... பொய்யான காமத்துக்காகத் தங்கள் உடலுக்குப் பொருத்தமாக அணிந்துள்ள ஆபரணங்களைப் பூண்டுள்ள மார்பகத்தின் மீதுள்ள ஆடை சரிந்து விழ,

கற்பால் எக்கா உட்கோலிக் காசுக்கே கை குத்து இடு(ம்) மாதர்... கடுமையாக அதட்டுவதுபோலப் பேசி உள்ளம் கோணி, காசுக்காக கைகலந்து சண்டையிடும் பெண்களுடைய,

கட்கே பட்டே நெட்டு ஆசைப் பாடு உற்றே கட்டப் படுவேனோ... கண்களின் வசப்பட்டு; பேராசையால் எழும் செயல்களில் நான் ஈடுபட்டுத் துன்புறுவேனோ?

சொல் கோலத்தே நல் காலைச் சேவிப்பார் சித்தத்து உறைவோனே... அழகிய சொற்களால் உன் திருவடிகளைத் தொழுகின்றவர்களுடைய உள்ளத்தில் வீற்றிருப்பவனே!

தொக்கே கொக்காகிச் சூழ அச் சூர் விக்கா முக்கத் தொடும் வேலா... தன்னுடைய உடலையே மாமரமாக்கி சூழ்ந்துகொண்ட சூரன் திண்டாடும்படியாக (விக்க, முக்க) வேலை எறிந்தவனே!

முற்காலத்தே வெற்பு ஏய்வுற்றார் முத்தாள் முத்தச் சிறியோனே... தொன்றுதொட்டே கயிலை மலையில் வீற்றிருப்பவரான சிவனும் முத்தை ஒத்த பார்வதியிம் முத்தமிட்டு மகிழும் இளையவனே!

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.... முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, தூய்மையானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரும் பெருமாளே.


சுருக்க உரை:

அழகிய சொற்களைக் கொண்டு உன் திருவடிகளைப் பாடுபவர்களுடைய உள்ளத்திலே வீற்றிருப்பவனே! தன் உடலையே மாமரமாக மாற்றிக்கொண்டு உன்னைச் சூழ்ந்த சூரன் திண்டாடும்படியாக வேலை எறிந்தவனே!  கயிலையில் வீற்றிருக்கும் சிவனும் முத்தை ஒத்தவளான பார்வதியும் முத்தமிட்டு மகிழும் இளையவனே! முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, தூய்மையானவனே, பற்றற்றவனே, முக்தியைத் தரும் பெருமாளே!

மைனாவின் குரலைப் போன்ற நேர்த்தியான குரலைக்கொண்டு செவ்வையாகப் பேசியும்; அணிந்திருக்கும் ஆபரணங்களும் ஆடையும் சிற்றின்பத்தின் பொருட்டாக நெகிழவிட்டும்; அதட்டிப் பேசியும் அப்படிப்பட்ட பேச்சால் தாக்கியும்; உள்ளம் கோணியும்; காசுக்காக கையால் குத்திச் சண்டையிட்டுக்கொள்ளும் இந்தப் பெண்களின் கண்களுக்கு வசப்பட்டு; பேராசைத் தொழில்களைப் புரிந்து அவதியுறுவேனோ!  (அவ்வாறு அவதிப்படாமல் ஆட்கொண்டருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com