பகுதி - 687

மேகத்தைப் போன்ற கரிய கூந்தலை

பதச் சேதம்

சொற் பொருள்

கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர்

 

அளகம்: கூந்தல்; கயல்பொருத: கயலைப் போன்ற;

கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய அணை ஊடே

 

ம்ருகமத: கஸ்தூரி; படீர(ம்): சந்தனம்; களப(ம்): கலவை;

விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என நாளும் உலகோர்கள்

 

 

விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள் தாராய்

 

விதரணம்: விதரணை, சாமர்த்தியம்—குத்தலான பேச்சு;

அரி பிரமர் தேவர் முனிவர் சிவ யோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே

 

 

அதிக நடராஜர் பரவு குரு ராஜ அமரர் குல நேச குமரேசா

 

அதிக நடராஜர்: மேம்பட்டவரான நடராஜர்;

சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர்

 

சிரகர கபாலர்: (பிரம) கபாலத்தை ஏந்தியவர்; அரிவை: பெண், உமை; கநக மேனி: கனக, பொன் மேனி; உடையாளர்: உடையவர்;

திரு அருளும் ஆதி புரி தனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே.

 

 

கரிய முகில் போலும் இருள் அளக பார கயல் பொருத வேலின் விழி மாதர்... கார்மேகத்தைப் போன்ற இருண்ட கூந்தல் பாரத்தையும்; கயலுக்கும் வேலுக்கும் இணையான விழிகளையும் உடைய பெண்களோடு,

கலவிகளில் மூழ்கி ம்ருகமத படீர களப முலை தோய... கலந்து தோய்ந்தும்; கஸ்தூரி, சந்தனக் கலவைகள் பூசப்பட்ட மார்பகங்களில் படிந்திருந்தும்;

அணை ஊடே விரகம் அதுவான மதன கலை ஓது வெறியன் என... படுக்கயிலே மன்மதக் கலைக்கான சாத்திரங்களைப் படிக்கின்றவன்; வெறியன் என்றெல்லாம்,

நாளும் உலகோர்கள் விதரணம் அதான வகை நகைகள் கூறி விடுவதன் முன் ஞான அருள் தாராய்... எப்போதும் உலகத்தவர் குத்தலான பரிகாச மொழிகளைப் பேசிச் சிரிப்பதற்கு முன்னால் ஞானத்தை அடியேனுக்கு அருளவேண்டும்.

அரி பிரமர் தேவர் முனிவர் சிவ யோகர் அவர்கள் புகழ் ஓத புவி மீதே அதிக நடராஜர் பரவு குரு ராஜ  அமரர் குல நேச குமரேசா... திருமாலும் பிரமனும் தேவர்களும் முனிவர்களும் சிவயோகிகளும் உன்னுடைய புகழைப் பாடிப் பரவ; பூமியில் மேம்பட்டவரான நடராஜப் பெருமான் போற்றுகின்ற குருராஜனே!  தேவர் குல நேசனே! குமரேசனே!

சிர கர கபாலர் அரிவை ஒரு பாகர் திகழ் கநக மேனி உடையாளர்... கரத்தில் பிரம கபாலத்தை ஏந்தியவரும் மாதொரு பாகரும் பொன்னைப் போன்ற மேனி வண்ணம் கொண்டவருமான சிவனார் வீற்றிருக்கின்றதும்;

திரு அருளும் ஆதி புரி தனில் மேவு ஜெய முருக தேவர் பெருமாளே.... லக்ஷ்மீகரம் நிறைந்ததுமான ‘ஆதிபுரி’ எனப்படும் திருவொற்றியூரில் விளங்குபவனே!  வெற்றி முருகனே!  தேவர்கள் பெருமாளே!

சுருக்க உரை

திருமாலும் பிரமனும் முனிவர்களும் சிவயோகியரும் உன்னுடைய புகழைப் போற்றிப் பரவ; உலகிலே உயர்ந்த நடராஜரும்; பிரம கபாலத்தை ஏந்தியவரும்; உமாதேவியாரை இடப்பாகத்தில் உடையவரும்; பொன்னைப் போன்ற மேனிவண்ணம் கொண்டவருமான சிவன் வீற்றிருக்கின்ற ‘ஆதிபுரி’யான திருவொற்றியூரிலே குடிகொண்டிருக்கும் வெற்றி முருகனே!  தேவர்கள் பெருமாளே! 

மேகத்தைப் போன்ற கரிய கூந்தலையும் கயலையும் வேலையும் ஒக்கும் கண்களையும்; கஸ்தூரியும் சந்தனமும் கலந்த கலவையைப் பூசிய மார்புகளை உடைய பெண்களோடு கூடி, படுக்கையில் மன்மத சாத்திரம் படிக்கின்றவன் இவன் என்று உலகோர் என்னைப் பழிக்கும்சொல் நிலைபெற்றுவிடுவதற்கு முன்னால் எனக்கு ஞானத்தைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com