பகுதி - 663

சந்திர சூரியரும் மேகங்களும்
பகுதி - 663

பதச் சேதம்

சொற் பொருள்

சருவும்படி வந்தனன்இங்கித மதன் நின்றிடஅம்புலியும் சுடு
தழல்கொண்டிட மங்கையர்
கண்களின் வசமாகி

 

சருவும்படி: எதிர்க்கும்படி; வந்தனன்: ‘வந்து’ என்ற பொருளைத் தரும் முற்றெச்சம்; இங்கித: கருத்தோடு; அம்புலி: நிலவு;

சயிலம் கொளு மன்றல்பொருந்திய பொழிலின்பயில் தென்றலும்
ஒன்றிய தட அம் சுனைதுன்றி 
எழுந்திடதிறமாவே

 

சயிலம்: மலை, மலைச்சாரல்; மன்றல் பொருந்திய: மணம் நிறைந்த; துன்றி எழுந்திட: படிந்த எழுந்திட; திறமாவே: வலிமையாக;

இரவும் பகல் அந்தியும்நின்றிடு குயில் வந்துஇசை தெந்தன என்றிட இரு கண்கள் துயின்றிடல்இன்றியும் 
அயர்வாகி

 

 

இவண் நெஞ்சு பதன் பதன்என்றிட மயல் கொண்டுவருந்திய வஞ்சகன் இனிஉன்றன் மலர்ந்து இலகும்பதம் 
அடைவேனோ

 

இவண்: இங்கே; பதன்பதன் என்றிட: பதைபதைக்க;

திரு ஒன்றி விளங்கியஅண்டர்கள் மனையின்தயிர் உண்டவன் எண்திசை திகழும் புகழ்கொண்டவன் வண் 
தமிழ்பயில்வோர் பின்

 

அண்டர்கள்: இடையர்கள்; வண் தமிழ்: வளமையான தமிழ்;

திரிகின்றவன் மஞ்சு நிறம்புனை
பவன் மிஞ்சு திறம்கொள வென்று 
அடல் செய துங்க முகுந்தன்
 மகிழ்ந்து அருள்மருகோனே

 

மஞ்சு நிறம்: மேகவண்ணம்; அடல்: வலிமை; செய: வெற்றி (ஜய); துங்க: தூய;

மருவும் கடல் துந்துமியும்குட முழவங்கள் குமின்குமின் என்றிட வளம்ஒன்றிய செந்திலில் வந்து
அருள் முருகோனே

 

துந்துமி: துந்துபி (பேரிகை); குடமுழவு: ஒரு தாளக்கருவி;

மதியும் கதிரும் புயலும்தினம் மறுகும்படிஅண்டம் இலங்கிட வளர்கின்ற பரங்கிரி வந்து
அருள் பெருமாளே.

 

மதியும்: சந்திரனும்; கதிரும்: சூரியனும்; புயலும்: மேகமும்; மறுகும்படி: மயங்கும்படியாக;

சருவும்படி வந்தனன் இங்கித மதன் நின்றிட அம்புலியும் சுடு தழல் கொண்டிட மங்கையர் கண்களின்வசமாகி... போர் தொடுக்கும் எண்ணத்தோடு மன்மதன் முன்னே வந்து நிற்கவும்; நிலவும் தீயைப் போலக் கொதிக்கவும்; பெண்களுடைய கண்களுக்கு வசப்பட்டு,

சயிலம் கொளு மன்றல் பொருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய தட அம் சுனை துன்றிஎழுந்திட திறமாவே... மலைச் சாரலில் நறுமணத்தோடு தவழ்ந்து வருகின்ற தென்றலானது அங்கள்ள அழகிய சுனையில் படிந்து வலிமை கொண்டு எழவும்;

இரவும் பகல் அந்தியும் நின்றிடு குயில் வந்து இசை தெந்தன என்றிட இரு கண்கள் துயின்றிடல்இன்றியும் அயர்வாகி...... இரவு, பகல், மாலை என்று மூன்று வேளையும் கூவுகின்ற குயில் ‘தெந்தன’ என்று இசைக்கவும்; இரண்டு கண்களிலும் தூக்கம் தொலைந்து சோர்வு எய்தியும்;

இவண் நெஞ்சு பதன் பதன் என்றிட மயல் கொண்டு வருந்திய வஞ்சகன் இனி உன்றன் மலர்ந்து இலகும்பதம் அடைவேனோ... இங்கே நெஞ்சம் பதைபதைக்க மையலால் வருத்தம் அடைந்த வஞ்சகனாகிய நான் இனியேனும் மலர்ந்து விளகுவதாகிய உன்னுடைய திருவடிகளை அடைவேனோ?

திரு ஒன்றி விளங்கிய அண்டர்கள் மனையின் தயிர் உண்டவன்... செல்வம் நிறைந்த இடையர்களுடைய வீடுகளில் தயிரைத் திருடி உண்டவனும்;

எண் திசை திகழும் புகழ் கொண்டவன் வண் தமிழ் பயில்வோர் பின் திரிகின்றவன்... எட்டு திசைகளிலும் புகழ் வளர்ந்தவனும்; வளமான தமிழைப் பயின்றவர்களுடைய பின்னாலே திரிபவனும்;

மஞ்சு நிறம் புனைபவன் மிஞ்சு திறம் கொள வென்று அடல் செய துங்க முகுந்தன் மகிழ்ந்து அருள்மருகோனே... மேகவண்ணம் கொண்டவனும்; மிகுந்த திறத்துடன் மற்போரைச் செய்து வெல்லும் தூய முகுந்தன் மனமகிழும் மருகனே!

மருவும் கடல் துந்துமியும் குட முழவங்கள் குமின் குமின் என்றிட வளம் ஒன்றிய செந்திலில் வந்துஅருள் முருகோனே... துந்துபியையும் குடமுழவையும் ஒத்து அலைகள் ஒலிக்கின்ற; வளம் பொருந்திய திருச்செந்தூரில் வீற்றிருந்து அருள்கின்ற முருகனே!

மதியும் கதிரும் புயலும் தினம் மறுகும்படி அண்டம் இலங்கிட வளர்கின்ற பரங்கிரி வந்து அருள்பெருமாளே... சந்திர சூரியரும் மேகங்களும் (போக வழியைக் காணாமல்) மயங்கும்படியாகவும்; உலகம் விளங்கும்படியாகவும் வானளாவ வளர்ந்திருக்கின்ற திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே!

சுருக்க உரை:

செல்வ வளம் மிக்க இடையர்களுடைய வீடுகளில் தயிரைத் திருடி உண்டவனும்; எட்டுத் திக்கிலும் புகழ்பரவியனும்; வளமான தமிழைப் பயின்றவர்களின் பின்னே செல்பவனும்; மேக வண்ணனும்; மிக்க திறல்கொண்டு மற்போரில் வெல்லும் ஆற்றல் வாய்ந்தவனும்; வெற்றியும் தூய்மையும் உடையவனுமான திருமாலின் மருகனே!  அலைகளின் முழக்கம் துந்துபியையும் குடமுழவையும் ஒத்து ஒலிக்கின்ற திருச்செந்தூரில் எழுந்தருளியிருக்கின்ற முருகனே!  சூரிய சந்திரர்களும் மேகங்களும் செல்வதற்கு வழி காணாமல் திகைக்கும்படியாகவும்—உலகம் வாழும்படியாகவும்—விண்ணளாவ வளர்ந்திருக்கின்ற திருப்பரங்குன்றத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமாளே!

போர்தொடுக்கும் எண்ணத்தோடு மன்மதன் வந்து நிற்கவும்; நிலவு தீயை உமிழவும்; மலைச்சாரலில் கமழும் மணத்துடன் உலவும் தென்றல் காற்று, சுனை நீரில் படிந்து மேலும் குளிர்ச்சியாக எழவும்; இரவு, பகல், மாலை என்று முப்போதும் குயில் கூவவும்; இரண்டு கண்களிலும் உறக்கம் பறிபோய் களைத்துப் போகவும்; நெஞ்சம் பதைபதைக்கப் பெண்களிடம் மையல் கொண்டு வருந்திய வஞ்சகனான நான் இனியேனும் உன்னுடைய மலர்ந்து விளங்கும் திருவடிகளை அடைவேனோ!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com