பகுதி - 665

இருளை நீக்குகின்ற நிலவு
பகுதி - 665

பதச் சேதம்

சொற் பொருள்

காது அடரும் கயல்கொண்டு 
இசைந்துஐம்பொறி வாளி மயங்கமனம் 
பயம் தந்து இருள் கால் தரவும் 
இந்துவிசும்பில் இலங்கும்பொழுது 
ஒரு கோடி

 

காது அடரும்: காதை நெருங்கும்; கயல்: மீன்(போன்ற கண்); ஐம்பொறி: ஐம்புலன்களும்; வாளி மயங்க: (காமன்) அம்பால் மயங்க; இருள் கால்தர: இருள் நீங்க; இந்து: நிலவு; விசும்பு: வானம்;

காய் கதிர் என்று ஒளிர்செம் 
சிலம்பும் கணையாழியுடன் 
கடகம்துலங்கும்படி காமன்நெடும் சிலை 
கொண்டுஅடர்ந்தும் பொருமயலாலே

 

காய்கதிர்: சூரியன்; கணையாழி: மோதிரம்; கடகம்: தோள்வளை;

வாது புரிந்து அவர் செம்கை 
தந்து இங்கிதமாக நடந்தவர் 
பின் திரிந்தும்தன மார்பில் 
அழுந்தஅணைந்திடும் துன்பம்அது 
உழலாதே

 

வாதுபுரிந்து: பிணங்கியும்; இங்கிதமாக: இனிமையாக;

வாசம் மிகுந்த கடம்பம்மென் 
கிண்கிணி மாலைகரம் கொளும் 
அன்பர்வந்து அன்பொடு வாழநிதம் 
புனையும் பதம்தந்து உனது 
அருள்தாராய்

 

கடம்பம்: கடம்ப (மலர்); கிண்கிணி மாலை: காற்சதங்கையைப் போலத் தொடுக்கப்பட்ட மாலை;

போதில் உறைந்துஅருள்கின்றவன் 
செம்சிரம் மீது தடிந்துவிலங்கிடும் 
புங்கவ போத வளம் சிவ 
சங்கரன்கொண்டிடமொழிவோனே

 

போதில் உறைந்து அருள்கின்றவன்: தாமரை மலரில் உறைபவன்—பிரமன்; தடிந்து: புடைத்து; புங்கவ: சிறப்புற்றவன்; போத வளம்: ஞானச் செல்வம்;

பூகம் உடன் திகழ் சங்குஇனம் 
கொண்ட கிரீவமடந்தை புரந்திரன் 
தந்துஅருள் பூவை கரும் குறமின் கலம் 
தங்குப(ன்)னிரு தோளா

 

பூகம்: பாக்கு மரம்; கிரீவம்: கழுத்து, கழுத்தை உடைய; புரந்திரன்: இந்திரன்; கரும்குற: கரிய குறவர்களின் (மகளான வள்ளி);

தீது அகம் ஒன்றினர்வஞ்சகம் 
துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த 
தென்பும் பல சேர் நிருதன் 
குலம் அஞ்சமுன் 
சென்றிடுதிறலோனே

 

துஞ்சியிடாவர்: குறையாதவர்கள்; சங்கரர் தந்த தென்பும்: சங்கரன் (முன்பு அருளிய வரங்களால் ஏற்பட்ட) செருக்கு;

சீதளம் முந்து மணம்தயங்கும் 
பொழில் சூழ்தர விஞ்சைகள் 
வந்துஇறைஞ்சும் பதி தேவர்பணிந்து 
எழு தென் பரங்குன்று உறை 
பெருமாளே.

 

சீதளம்: குளிர்ச்சி; முந்து மணம்: வெகுதொலைவுக்கு வீசும் மணம்; தயங்கும்: தங்கியிருக்கும், விளங்கும்; விஞ்சைகள்: வித்தியாதரர்கள்;

காது அடரும் கயல் கொண்டு இசைந்து ஐம்பொறி வாளி மயங்க மனம் பயம் தந்து... காதுகளை எட்டும் அளவுக்கு நீண்ட கயல் விழிகளைக் கொண்டு இசைவித்து; ஐம்புலன்களும் மன்மதனுடைய கணைகளாலே மயக்கம் கொள்ளவும்; மனத்தில் அச்சம் ஏற்படவும்;
 
இருள் கால் தர இந்து விசும்பு இலங்கும் பொழுது ஒரு கோடி காய் கதிர் என்று ஒளிர் செம் சிலம்பும்... இருளை நீக்குகின்ற நிலவு வானிலே ஒளிவிடும்போது; கோடி சூரியர்களைப் போல ஒளிவிடும் கால் சிலம்பையும்;
 
கணையாழியுடன் கடகம் துலங்கும்படி காமன் நெடும் சிலை கொண்டு அடர்ந்தும் பொரு மயலாலே... மோதிரத்தையும்; தோள்வளையையும் அணிந்தவர்களாலும்; மன்மதன் தன்னுடைய நீண்ட வில்லை எடுத்துவந்து தொடுக்கன்ற யுத்தத்தால் ஏற்படும் மயக்கத்தாலும்;
 
வாது புரிந்து அவர் செம் கை தந்து இங்கிதமாக நடந்தவர் பின் திரிந்தும் தன மார்பில் அழுந்தஅணைந்திடும் துன்பம் அது உழலாதே... மனம் மாறுபட்டும்; இணக்கமாகத் தம் கரங்களைக் கோத்து இனிமையாக நடந்துகொள்கின்ற பொதுமகளிரின் பின்னால் திரிந்தும்; அவர்களுடைய தனம் என் மார்பிலே அழுந்துவதால் விளையும் துன்பச் செயல்களில் நான் உழன்று கொண்டிருக்காமல்;
 
வாசம் மிகுந்த கடம்பம் மென் கிண்கிணி மாலை கரம் கொளும் அன்பர் வந்து அன்பொடு வாழ நிதம்புனையும் பதம் தந்து உனது அருள் தாராய்... மணம் மிக்க கடப்ப மலர்களால் காற்சதங்கைகளைப் போலத் தொடுக்கப்பட்ட மாலைகளைக் கைகளில் ஏந்திவருகின்ற அடியார்கள் வாழுமாறு (மனம் உவக்குமாறு) அணிந்துகொள்கின்ற உன் திருப்பாதங்களைத் தந்து உனது திருவருளைத் தரவேண்டும்.
 
போதில் உறைந்து அருள்கின்றவன் செம் சிரம் மீது தடிந்து விலங்கிடும் புங்கவ போத வளம் சிவசங்கரன் கொண்டிட மொழிவோனே... தாமரைப் பூவில் வீற்றிருக்கன்ற பிரமனுடைய செம்மையான சிரத்தின் மீது குட்டி அவனுக்கு விலங்கிட்ட சிறப்பைக் கொண்டவனே!  சிவசங்கர மூர்த்தி ஞானச் செல்வத்தை அடையும்படியாக (பிரணவப் பொருளை) உரைத்தவனே!
 
பூகம் உடன் திகழ் சங்கு இனம் கொண்ட கிரீவ மடந்தை புரந்தரன் தந்து அருள் பூவை கரும் குற மின்கலம் தங்கு ப(ன்)னிரு தோளா... பாக்கு மரத்தையும் சங்கையும் ஒத்த கழுத்தை உடையவளும்; இந்திரனுடைய மகளுமான தேவானை, கரிய குறவர்(களின் மகளான வள்ளி) ஆகியோருடைய ஒளிவீசும் ஆபரணங்களைத் தாங்குகின்ற பன்னிரு தோள்களைக் கொண்டவனே! 
 
தீது அகம் ஒன்றினர் வஞ்சகம் துஞ்சியிடாதவர் சங்கரர் தந்த தென்பும் பல சேர் நிருதன் குலம் அஞ்ச முன்சென்றடு திறலோனே... உள்ளத்தில் தீமை பொருந்தியவர்களும்; வஞ்சகத்தில் குறையாதவர்களும்; சங்கரனார் முன்னர் தந்த வரங்களாலே செருக்கு மிகுந்தவர்களுமான அரக்கர் கூட்டம் அஞ்சும்படியாக முன்சென்று (அவர்களை அழித்த) திறலோனே!
 
சீதளம் முந்து மணம் தயங்கும் பொழில் சூழ் தர விஞ்சைகள் வந்து இறைஞ்சும் பதி தேவர் பணிந்து எழுதென் பரங் குன்று உறை பெருமாளே.... குளிர்ச்சியும்; வெகுதொலைவுக்குக் கமழும் மணமும் பொருந்திய சோலைகள் சூழ்ந்திருப்பதும்; வித்தியாதரர்கள் வந்து வணங்குவதுமான திருப்பரங்குன்றப் பதியி;ல தேவர்களால் வணங்கப்படுகின்ற பெருமாளே!
 
சுருக்க உரை:
 
தாமரைப் பூவில் வீற்றிருப்பவனாகிய பிரமனுடைய தலையில் குட்டி விலங்கணிவித்த சிறப்பை உடையவனே!  சிவனார் ஞானச் செல்வத்தை அடையும்படியாக அவருக்குப் பிரணவப் பொருளை உபதேசித்தருளியவனே! பாக்கு மரத்தையும் சங்கையும் ஒத்த கழுத்தையுடைய தேவானை, குற மின்கொடியாகிய வள்ளி ஆகியோரின் ஆபரணங்கள் தங்குகின்ற பன்னிரு புயங்களை உடையவனே!  தீமையும் வஞ்சனையும் மாறாதவர்களும்; சிவபெருமான் முன்னர் அருளிய வரங்களாலே செருக்கடைந்தவர்களுமான அசுரர்கள் அஞ்சுமாறு போர்க்களத்தின் முன்சென்று அவர்களை அழித்த திறலோனே!  குளிர்ச்சியையும்; வெகுதொலைவுக்கு மணம்கமழும் தன்மையையும் கொண்ட சோலைகளால் சூழப்பெற்றதும்; வித்தியாதரர்கள் வந்து வணங்குவதுமான திருப்பரங்குன்றத்திலே தேவர்களால் வணங்கப்படுகின்ற பெருமாளே!
 
காதளவோடிய கண்களைக்கொண்டு இசைவித்து, மன்மதன் எய்கின்ற மலர்க் கணைகளால் ஐம்புலன்களும் மயக்கமடைந்து மனம் கலங்கச் செய்து; இருளைப் போக்கும்படியாக ஆகாயத்தில் நிலவு காய்கின்ற சமயத்திலே, ஒருகோடி சூரியர்கள் எழுந்ததைப் போன்ற ஒளியையுடைய பாதச் சிலம்புகளையும்; மோதிரத்தையும்; தோள்வளையையும் அணிந்த மன்மதன் தன்னுடைய நீண்ட வில்லைக் கொண்டு போர்தொடுப்பதால் ஏற்படும் மன மயக்கமும்; வாதிட்டுப் பிணங்கியும் கைகோத்து இணங்கியும் இனிமையாக நடந்துகொள்பவர்களான பொதுப்பெண்களுடைய தனம் எனது மார்பில் அழுந்துவதால் ஏற்படும் துன்பச் செயல்களிலே நான் உழன்றுகொண்டிருக்காமல்,
 
அன்பர்கள் தங்கள் கரங்களிலே ஏந்தி வருகின்ற; பாதச் சதங்கைகளைப் போலத் தொடுக்கப்பட்ட கடப்ப மாலைகளை அவர்களுடைய உள்ளம் மகிழுமாறு அணிகின்ற உன் திருப்பாதங்களைத் தந்து அருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com