பகுதி - 669

மயில் மீது அமர்ந்த கோலத்தில்
பகுதி - 669

பதச் சேதம்

சொற் பொருள்

கீத விநோதம் மெச்சு(ம்) குரலாலே

 

 

கீறும் மை ஆர் முடித்த குழலாலே

 

கீறும்: வகிர்ந்த, வகிடு எடுக்கப்பட்ட; மை ஆர்: மை போலக் கரிய;

நீதி இலாது அழித்தும் உழலாதே

 

 

நீ மயில் ஏறி உற்று வரவேணும்

 

 

சூது அமர் சூர் உட்க பொரு சூரா

 

சூதுஅமர் சூர்: சூது நிறைந்தவர்களான சூரர்கள்; உட்க: அஞ்சும்படியாக;

சோண கிரியில் உற்ற குமரோசா

 

சோணகிரி: அண்ணாமலை

ஆதியர் காது ஒருச் சொல் அருள்வோனே

 

ஆதியர்: சிவனார்; ஒருச் சொல்: ஒப்பற்ற சொல் (ஒரு=ஒப்பற்ற);

ஆனை முகார் கனிட்ட பெருமாளே.

 

ஆனைமுகார்: ஆனை முகர் (நீட்டல் விகாரம்); கனிட்ட: கனிஷ்ட, இளைய;

கீத விநோத மெச்சு குரலாலே... ராக விநோதங்களைக் கொண்டதும் மெச்சக் கூடியதுமான இனிய குரலாலும்;
 
கீறு மையார் முடித்த குழலாலே... வகிடு எடுக்கப்பட்டதும்; கரிய நிறமுள்ளதும்; வாரி முடியப்பட்டதுமான கூந்தலாலும் (பெண்களிடம் மயங்கி)
 
நீதி யிலாதழித்தும் உழலாதே... நீதிக்குப் புறம்பான செயல்களைச் செய்து நான் திரியாமல் இருக்கும்படியாக,
 
நீமயி லேறி யுற்று வரவேணும்... நீ மயில் மீது அமர்ந்த கோலத்தில் வரவேண்டும்.
 
சூதமர் சூரர் உட்க பொருசூரா... சூது நிறைந்தவர்களான சூரர்கள் அஞ்சும்படியாகப் போரிட்ட சூரனே!
 
சோண கிரீயி லுற்ற குமரேசா... திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் குமரேசா!
 
ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே... ஆதி தேவரான சிவனாரின் காதில் ஒப்பற்ற பிரணவப் பொருளை ஓதியவனே!
 
ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.... ஆனைமுகனுக்கு இளைய (கனிஷ்ட) பெருமாளே!
 
 
சுருக்க உரை:
 
சூது நிறைந்தவர்களான சூரர்கள் அஞ்சும்படியாகப் போரிட்ட சூரனே!  திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் குமரேசனே!  ஆதிதேவரான சிவனாரின் காதில் ஒப்பற்ற பிரணவத்தின் பொருளை ஓதியவனே!  ஆனைமுகனுக்கு இளைய பெருமாளே!
 
ராகங்களின் இனிமையால் விநோதங்கள் அமைந்து மெச்சக்கூடிய இனிய குரல் வளத்தாலும்; வகிரப்பட்டதும்; கருமையானதும்; முடியப்பட்டதுமான கூந்தலாலும் மயங்கி நான் நீதியான செயல்களையெல்லாம் அழித்தபடி திரியாமல் இருக்கும்படியாக மயில் மீது அமர்ந்த கோலத்திலே நீ எழுந்தருளவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com