பகுதி - 679

உன் திருவடிகள் கிடைக்கப்பெறும் தகுதி
பகுதி - 679

பதச் சேதம்

சொற் பொருள்

பட்டு ஆடைக்கே பச்சோலை காதுக்கே பத்தி தன(ம்) மா 

 

பச்சோலை: பச்சை ஓலை, காதணி; பத்தி: வரிசை என்று பொருள்; இங்கே சீரான, குலையாத என்று பொருள் கொள்கிறோம்;

கும்பக்கே நிட்டூர பார்வைக்கே பட்டு ஆசைப்பட்டு உறவாடி

 

கும்பக்கே: கும்பத்துக்கே, குடத்துக்கே; நிட்டூர: கொடுமையான;

ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏ(ச்)சு உற்றே முற்ற தடுமாறும்

 

ஒட்டார்: ஒட்டாதவர்கள், ஆகாதவர்கள்; நட்டார்: நண்பர்கள்;

ஒட்டார பாவிக்கே மிக்காம் உற்றாள் கிட்ட தகுமோ தான்

 

ஒட்டார: பிடிவாத; உற்றாள்: உன் தாள்;

கட்டாவி போதுள் உட்டாவி பூக காவில் புக்கு அளி பாடும் 

 

கட்டாவி: கள் தாவி—தேனைத் தேடி; போது: பூ; உட்டாவி: உள்(ளே) தாவி; பூக: பாக்குமர; காவில்: தோப்பில்; அளி: வண்டு;

கற்பு ஊர் நல்சார் அக்காழி தோய் க(ர்)த்தா சத்தி தகவோடே

 

அக்காழி: அந்தக் காழி—சீகாழி; கத்தா: கர்த்தா, முதல்வனே;

முட்டாக கூரிட்டு ஏனட்டாள் முற்றாமல் கொள் குமரேசா

 

முட்டாகக் கூரிட்டு:  எதிர்ப்பட வேண்டும் (என்ற எண்ணம்) மிகுந்து; ஏனட்டாள்: ஏனல் தாள், தினையின் தாள்; முற்றாமல்: முதிர்வதற்கு முன்னால்;

முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.

 

முத்தா: முத்துப் போன்றவனே; முத்தீ அத்தா: மூன்று வகையான தீயாலும் வளர்க்கப்படும் ஓமங்களுக்கும் தலைவனே; முத்தா: முக்தனே;

பட்டு ஆடைக்கே பச்சை ஓலைக் காதுக்கே... பட்டு ஆடைக்காகவும்; பசிய ஓலையால் ஆன காதணியை அணிந்த செவிக்கும்;
 
பத்தித் தன மா கும்பக்கே நிட்டூரப் பார்வைக்கே பட்டு... கட்டுக் குலையாத குடங்களைப் போன்ற மார்பகங்ளுக்கும்; கொடுமையாக விழிக்கும் பார்வைக்கும் அகப்பட்டு;
 
ஆசைப்பட்டு உறவாடி ஒட்டார் நட்டார் வட்டாரத்து ஏசு உற்றே... ஆசையுடன் உறவாடி; வேண்டியவர் வேண்டாதவர் என்று அனைத்து வட்டாரங்களிலும் ஏச்சுக்கு ஆளாகி;
 
முற்றத் தடுமாறும் ஒட்டாரப் பாவிக்கே... முழுக்கவே தடுமாற்றம் அடைந்துள்ள; பிடிவாதம் நிறைந்த பாவியாகிய எனக்கு,
 
மிக்காம் உன் தாள் கிட்டத் தகுமோதான்... மேலான உன் திருவடி கிடைக்கப்பெறும் தகுதி இருக்கிறதோ? (தகுதியுள்ளவனாக்கி எனக்கு உன் திருவடிகளைத் தரவேண்டும்).
 
கள் தாவிப் போது உள் தாவிப் பூகக் காவிற் புக்கு அளிபாடும்... தேனைத் தேடித் திரிந்து, மலர்களின் உள்ளே தாவி, பாக்குமரத் தோப்புக்குள் புகுந்து வண்டுகள் பாடுகின்ற,
 
கற்பு ஊர் நற்சார் அக் காழித் தோய் கத்தா... சிறந்த முறைமைகள் வாய்ந்ததும்; நன்மைகள் நிறைந்ததுமான சீகாழித் தலத்தில் வீற்றிருக்கின்ற முதல்வனே!
 
சத்தித் தகவோடே முட்டாகக் கூரிட்டு... (இச்சா) சக்தியின் அம்சம் பொருந்திய வள்ளி, முன்னே வந்து எதிர்ப்படவேண்டும் என்ற எண்ணம் மிகுதியாகி;
 
ஏனல் தாள் முற்றாமல் கொள் குமரேசா... தினைப் பயிரின் தாள் முதிர்வதற்கு முன்னாலேயே அவளைக் கவர்ந்துகொண்ட குமரேசா!
 
முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே.... முத்தைப்போல அருமை வாய்ந்தவனே!  மூன்று வகை அக்கினியாலும்* செய்யப்படும் வேள்விக்குத் தலைவனே!  பரிசுத்தனே!  முக்தனே—பற்றற்றவனே! முக்தியைத் தரும் பெருமாளே!
 
(* காருகபத்தியம், ஆகவனீயம், தட்சிணாக்கினி என்பவை அக்கினியின் மூன்று வகைகள்)
 
 
சுருக்க உரை:
 
தேனைத் தேடித் திரிந்து; பூக்களுக்குள் தாவி; பாக்கு மரத் தோப்புக்குள்ளே புகுந்து வண்டுகள் பாடுகின்ற; முறைமையும் நன்மையும் சிறந்ததுமான சீகாழித் தலத்தில் வீற்றிருக்கின்ற தலைவனே! வள்ளி எதிர்ப்பட வேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து; தினைப் பயிரின் தாள் முற்றுவதற்கு முன்பாகவே அவளைக் கவர்ந்துகொண்ட குமரேசா!  முத்தைப் போல அருமை வாய்ந்தவனே!  மூன்று அக்கினிகளாலும் செய்யப்படும் வேள்வியின் தலைவனே!  பரிசுத்தன!  பற்றற்றவனே!  முக்தியை தருகின்ற பெருமாளே!
 
உடுத்தியிருக்கிற பட்டுச் சேலைக்கும்; காதில் அணிந்திருக்கும் குழைக்கும்; குடம் போன்ற மார்பகத்துக்கும் ஆசைப்பட்டு மயங்கி, அந்தப் பெண்களுடைய கொடுமையான பார்வையில் அகப்பட்டு; ஆசை கொண்டு; காதலாகி; அதனால் நண்பர்கள், ஆகாதவர்கள் என்று அனைவரிடமும் பழிச்சொல்லுக்கு ஆளாகி முற்றிலும் தடுமாறிக் கலங்குகின்றவனும்; பிடிவாதம் நிறைந்தவனுமான பாவியேனுக்கு உன் திருவடிகள் கிடைக்கப்பெறும் தகுதி இல்லையெனினும் அவற்றைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com