பகுதி - 803

பசை அற்ற உடல்வற்ற வினை..
பகுதி - 803

பதச் சேதம்

சொற் பொருள்

பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறிய கை சொறிய பல் வெளியாகி

 

பசையற்ற: ஈரமற்ற; வினை முற்றி: வினை முதிர்ந்து; நடைநெட்டி: நடை தள்ளாளி; பறிய: நிலை பெயர;

படலைக்கு விழி கெட்ட குருடு உற்று மிக நெக்க பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி

 

படலை: கதவு—இங்கே கண்ணில் விழும் பூ;

விசை பெற்று வரு பித்தம் வளியை கண் நிலை கெட்டு மெலிவு உற்று விரல் பற்று தடியோடே

 

வளியை: வாயுவை;

வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே

 

 

அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில் அடல் வஜ்ர கரன் மற்றும் உள வானோர்

 

நிருதர்க்கு: அரக்கர்களுக்கு; வஜ்ரகரன்: வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தியவன்—இந்திரன்;

அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறைய செய் அதுல சமர வெற்றி உடையோனே

 

அதுல: நிகரற்றவனே; சமர: போர்;

வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே

 

கிட்ணன்: கிருஷ்ணன்;

மதுர செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே.

 

விர்த்தகிரி: விருத்தாசலம்;

பசை அற்ற உடல் வற்ற வினை முற்றி நடை நெட்டி பறியக் கை சொறியப் பல் வெளியாகி... உடலில் ஈரம் வற்றிக் காய்ந்து தோல் வற்றிப்போய்; வினையின் பயன் முற்றிப்போய்; நடையில் தள்ளாட்டம் வந்து; நிலை தடுமாறி; கையால் சொறிந்தபடி இருந்து; (ஈறுகள் தேய்வதால்) பல் வெளிப்பட்டு துருத்திக்கொள்ள,

படலைக்கு விழி கெட்ட குருடு உற்று மிக நெக்க பழம் உற்று நரை கொக்கின் நிறமாகி... கண்ணிலே பூ விழுந்து மறைப்பதனால் பார்வையை இழந்து; உடல் தளர்ந்து பழத்தைப் போல ஆகி; தலைமயில் நரைத்து கொக்கைப் போல வெண்ணிறம் உடையதாகி,

விசை பெற்று வரு பித்தம் வளியைக் கண் நிலை கெட்டு மெலிவு உற்று விரல் பற்று தடியோடே... வேகத்தோடு எழுகின்ற பித்தத்தாலும் வாயுவாலும் கண் நிலைதடுமாறி, உடல் இளைத்து, விரல்களால் பற்றிக்கொள்ளப்பட்ட தடியோடு,

வெளி நிற்கும் விதம் உற்ற இடர் பெற்ற ஜனனத்தை விடுவித்து உன் அருள் வைப்பது ஒரு நாளே... வெளியிலே நிற்கின்ற தன்மையை உடையதும் துன்பத்தையே கொண்டதுமான பிறப்பிலிருந்து விடுவித்து உன் அருளைத் தருகின்ற நாள் ஒன்று உண்டாகுமா? (உன் அருளை விரைவிலேயே தந்தருள வேண்டும்.)

அசைவு அற்ற நிருதர்க்கு மடி உற்ற பிரியத்தில் அடல் வஜ்ர கரன் மற்றும் உள வானோர்... கலக்கம் இல்லாத அரக்கர்கள் இறந்துபட, அதனால் மகிழ்ச்சியடையந்தவனும் வஜ்ராயுதத்தை ஏந்தியவனுமான இந்திரனும் மற்ற தேவர்களும்,

அளவு அற்ற மலர் விட்டு நிலம் உற்று மறையச் செய் அதுலச் சமர வெற்றி உடையோனே... அளவில்லாமல் பூக்களைச் சொரிந்து பூமி முழுவதையும் மறையும்படிச் செய்த நிகரற்றவனே! போரில் வெற்றியையே அடைபவனே!

வசை அற்று முடிவு அற்று வளர் பற்றின் அளவு அற்ற வடிவு உற்ற முகில் கிட்ணன் மருகோனே...  வசைக்கு இடமில்லாமலும் எல்லையில்லாமலும் (பாண்டவர்களின்மீது கொண்டிருந்த) பற்றின் காரணமாக கணக்கற்ற வடிவங்களைக்* கொண்ட முகில் வண்ணனான கண்ணனின் மருமகனே!

(வில்லிபாரதத்தின்படி உத்தியோக பர்வத்தில் சகதேவனுக்கும்; வியாச, வில்லி பாரதங்களின்படி போரின்போது அர்ஜுனனுக்கும் விசுவரூப தரிசனம் கொடுத்தது இங்கே சொல்லப்படுகிறது.)

மதுரச் செம் மொழி செப்பி அருள் பெற்ற சிவ பத்தர் வளர் விர்த்த கிரி உற்ற பெருமாளே.... மதுரமும் செம்மையும் உடைய மொழிகளைப் பேசுகின்றவர்களும்; இறையருள் பெற்றவர்களுமான சிவபக்தர்கள் நிரம்பியிருக்கின்ற விருத்தாசலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

எதற்கும் கலங்காத அரக்கர்கள் மடிந்ததால் மகிழ்வுற்ற வஜ்ராயுதனாகிய இந்திரனும் பிற தேவர்களும் மிகுதியான மலர்மாரியைச் சொரிந்ததனால் பூமியே மறைந்துபோகும்படிச் செய்தவனாகிய நிகரற்றவனே! போரில் வெற்றியையே பெறுபவனே! வசையற்றதும் அளவற்றதுமான அன்பைப் பாண்டவர்கள்பால் வைத்திருந்தவனும் (சகதேவனுக்கும் அர்ஜுனனுக்கும்) விசுவரூப தரிசனத்தைக் காட்டியவனும் முகிலின் வண்ணத்தைக் கொண்டவனுமான கிருஷ்ணனின் மருகனே!  மதுரமும் செம்மையும் நிறைந்த மொழிகளைப் பேசி உனது திருவருளுக்கு ஆட்பட்ட சிவபக்தர்கள் நிறைந்திருக்கின்ற விருத்தாசலத்தில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

ஈரமில்லாமல் நைந்து வற்றிப் போயிருக்கின்ற இந்த உடலில் வினையும் முதிர்ச்சியடைய; நடை தடுமாற; நிலைபெயர; கை சொறிந்தவண்ணமாகவே இருக்க; பற்கள் வெளியே நீட்டிக்கொள்ள; கண்ணிலே பூ விழுந்து பார்வையை மறைக்க; உடல் நெகிழ்ந்து பழத்தைப்போல ஆக; மயிர் நரைத்து கொக்கின் நிறத்தைக் கொள்ள; வேகத்துடன் எழுகின்ற வாதத்தாலும் பித்தத்தாலும் நிலைதடுமாற; கைவிரல்கள் ஊன்றுகோலைப் பற்றியிருக்க; ஆதரவின்றி வெளியே நிற்கின்ற துன்பம் மிகுந்தததான இந்தப் பிறவியினின்றும் என்னை விடுவித்து உன்னுடைய திருவருளை அடியேனுக்கு விரைவில் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com