பகுதி - 751

வள்ளியின்மீது கொண்ட மோகத்தால்
பகுதி - 751

பதச் சேதம்

சொற் பொருள்

சோதி மந்திரம்போதகம் பரவு ஞானஅகம் பரந்தே இருந்தவெளி தோடுஅலர்ந்த பொன் பூஇருந்த இடமும்கொ(ள்)ளாமல்

 

சோதி மந்திரம்: (யோகத்தால் அடையப்படும்) ஒளி மண்டலம்; போதகம்: உபதேசம்; ஞானகம்: ஞான அகம்—ஞானாகாசமாகிய பெருவெளி; தோடு அலர்ந்த: இதழ் மலர்ந்த;

சூது பந்தயம் பேசிஅஞ்சு வகை சாதிவிண் பறிந்து ஓடுகண்டர் மிகு தோதகம் பரிந்து ஆடுசிந்து பரி கந்து பாயும்

 

அஞ்சு வகை சாதி: ஐம்புலன்கள்; கண்டர்: அரக்கர்கள்; தோதகம்: வஞ்சகம்; சிந்து பரி: கடல் குதிரை (சிந்து: கடல்)—அதாவது வடவ முகாக்கினி; கந்துபாயும்:

வீதி மண்டலம் பூணமகிழ்ந்து கழி கோலம் மண்டி நின்றுஆடி இன்ப வகை வேணும் என்று கண்சோர ஐம்புலன்ஒடுங்கு போதில்

 

வீதி மண்டலம்: வீதி வட்டத்தில்;

வேதியன் புரிந்து ஏடுகண்ட அளவில் ஓடிவெம் சுடும் காடுஅணைந்து சுட வீழ்கிவெந்து உகுந்திடும்இந்த இடர் என்றுபோமோ

 

வேதியன்: பிரமன்; புரிந்து: தெரிந்து, தேர்ந்து; ஏடு: (மரணச்) சீட்டு; சுடும்காடு: சுடுகாடு; அணைந்து: அடைந்து;

ஆதி(த்த) மண்டலம்சேரவும் பரம சோமமண்டலம் கூடவும்பதும வாளன்மண்டலம் சாரவும்சுழி படர்ந்த தோகை

 

ஆதி மண்டலம்: சூரிய மண்டலம்—சூரிய மண்டலங்கள் பன்னிரண்டு; சோம மண்டலம்: சந்திர மண்டலம்; பதும வாளன்: தாமரையில் வீற்றிருக்கும் பிரமன்; பதுமவாளன் மண்டலம்: பிரமலோகம்;

ஆழி மண்டலம் தாவிஅண்ட முதலான மண்டலம் தேடிஒன்ற அதோமுக(மா)ன மண்டலம் சேடன்அங்கு அண அயில்கொண்டு உலாவி

 

ஆழி மண்டலம்: கடல் வட்டம்; அதோ முகமான: பாதாள லோகத்தில் (அதோ முகம்: கீழ்நோக்கு முகம்—அதோ என்றால் கீழே, பாதாளத்திலே என்று பொருள்.  ஆகவேதான் ‘அதோகதி’ என்கிறோம்); அங்கு அ(ண்)ண: அங்கே கொத்தி; அயில்: உணவு;

சூதர் மண்டலம் தூள்எழுந்து பொடியாகி விண் பறந்து ஓடமண்டி ஒரு சூரியன்திரண்டு ஓட கண்டுநகை கொண்ட வேலா

 

சூதர் மண்டலம்: சூரியர்களின் மண்டலம்;

சோடை கொண்டுஉளம் கான மங்கைமயல் ஆடி இந்திரன்தேவர் வந்து தொழ சோழ மண்டலம்சாரும் அம்பர் வளர்தம்பிரானே.

 

சோடை கொண்டு: விருப்பம் கொண்டு; கான மங்கை: வள்ளி;

சோதி மந்திரம் போதகம் பரவு ஞான அகம் பரந்தே இருந்த வெளி தோடு அலர்ந்த பொன் பூ இருந்த இடமும் கொ(ள்)ளாமல்...(யோகத்தால் அடையக்கூடிய) ஒளி மண்டலம்; ஞானோபதேசத்தால் அடையக்கூடிய ஞானாகாசமாகிய பெருவெளி; இதழ் அவிழ்ந்த கற்பகப் பூவாகிய பொன்மலர் மணக்கின்ற தேவலோகம் போன்ற மேலான பதங்களை அடைய முயலாமல்;

சூது பந்தயம் பேசி அஞ்சு வகை சாதி விண் பறிந்து ஓடு கண்டர் மிகு தோதகம் பரிந்து ஆடு சிந்து பரி கந்து பாயும் வீதி மண்டலம் பூண்அமர்ந்து... சூதாட்டத்துக்கான பந்தயங்களைப் பேசிக்கொண்டும்; விண்ணையும் பெயர்த்தபடி ஓடக்கூடிய ஐந்து இனத்தவராகிய ஐம்புலன்கள் வஞ்சகச் செயல்களை மிகவும் பரிவோடு செய்து வடவமுகாக்கினியாகிய குதிரையைப் போல முழுவேகத்தில் தறிகெட்டு ஓடுகின்ற வீதிவட்டத்தில் சிக்கிக்கொண்டு;

கழி கோல(ம்மண்டி நின்று ஆடி இன்ப வகை வேணும் என்று கண் சோர ஐம்புலன் ஒடுங்கு போதில்... மிக்க அலங்காரங்களைப் பூண்டு, நின்று அனுபவித்து, வகைவகையான இன்பங்கள் வேண்டும் என்று தேடி; கண்பார்வை மங்கி ஐம்புலன்களும் ஒடுங்குகின்ற சமயத்தில்;

வேதியன் புரிந்து ஏடு கண்ட அளவில் ஓடி வெம் சுடும் காடு அணைந்து சுட வீழ்கி வெந்து உகுந்தீடும் இந்த இடர் என்று போமோ... பிரமன் தேடியெடுத்து அனுப்பிய மரணச் சீட்டைப் பார்த்த அளவில் உயிர் பிரிய; கொடிய சுடுகாட்டை அடைந்த இந்த உடல் எரிக்கப்படும்போது சாம்பலாகிச் சிதறிப் போகின்ற (பிறவி என்னும்) துன்பம் என்று தீருமோ? (பிறவித் துயரைத் தீர்த்தருள வேண்டும்.)

ஆதி(த்தமண்டலம் சேரவும் பரம சோம மண்டலம் கூடவும் பதும வாளன் மண்டலம் சாரவும்... பன்னிரண்டு சூரிய மண்டலங்களும் சந்திர மண்டலமும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனுடைய உலகமும் ஒன்றுகூடவும்;

சுழி படர்ந்த தோகை ஆழி மண்டலம் தாவி அண்ட முதலான மண்டலம் தேடி ஒன்ற அதொ முக(மா) மண்டலம் சேடன் அங்கு (ண்)அயில் கொண்டு உலாவி... (கண்ணை ஒத்த) சுழிகள் படர்ந்திருக்கின்ற தோகையை உடைய உன்னுடைய மயிலானது கடல்வட்டத்தைக் கடந்து; ஆங்காங்கே உள்ள பற்பல அண்டங்களைத் தேடியடைந்து; பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனைக் கொத்தி உணவாகக் கொள்ளவும்;

சூதர் மண்டலம் தூள் எழுந்து பொடியாகி விண் பறந்து ஓட மண்டி ஒரு சூரியன் திரண்டு ஓட கண்டு நகை கொண்ட வேலா... சூரிய மண்டலங்கள் பொடிபட்டுத் தூளாகி ஆகாயத்தில் பறந்தோடவும்; அவ்வாறு தூள் பறப்பதைக் கண்டு பன்னிரண்டு சூரியர்களும் ஒன்றாகத் திரண்டு ஓடுவதைக் கண்டு சிரித்து நின்ற வேலனே!

சோடை கொண்டு உளம் கான மங்கை மயல் ஆடி இந்திரன் தேவர் வந்து தொழ... உள்ளத்தில் விருப்பம் எழ கானகக் குறத்தியான வள்ளியின்மீது கொண்ட மோகத்தால் அவளோடு விளையாடி; இந்திரனும் இதர தேவர்களும் வந்து தொழுது வணங்க;

சோழ மண்டலம் சாரும் அம்பர் வளர் தம்பிரானே.... சோழ மண்டலத்தைச் சேர்ந்த திருவம்பரில் வீற்றிருக்கின்ற தம்பிரானே!


சுருக்க உரை:

பன்னிரண்டு சூரியர்களின் மண்டலமும் சந்திர மண்டலமும் பிரமலோகமும் ஒன்றுகூடவும்; தோகையை உடைய உன்னுடைய மயில், கடலையும் பல அண்டங்களையும் கடந்து பாதாள லோகத்திலுள்ள ஆதிசேடனை உணவாகக் கொத்தவும்; சூரிய மண்டலங்கள் தூள்பட்டு ஆகாயத்தில் சிதறவும் அதைப் பார்த்துச் சிரித்த வேலனே!  வள்ளியின் மீது விருப்பம்கொண்டு அவளோடு விளையாட; இந்திரனும் இதர தேவர்களும் வந்து வணங்க; சோழமண்டலத்துத் திருவம்பரில் வீற்றிருக்கும் தம்பிரானே!

யோகத்தால் அடையப்படும் ஜோதி மண்டலம்; ஞானோபதேசத்தால் அடையப்படும் ஞானாகாசமாகிய பரவெளி; கற்பக மலர்கள் மலர்ந்து நறுமணம் கமழும் தேவலோகம் ஆகியவற்றைப் போன்ற பெரிய பதங்களை அடைய எந்த் முயற்சியையும் செய்யாமல்; சூதாட்டத்துக்குப் பந்தயம் சொல்லிக்கொண்டும்; வடவமுகாக்கினி குதிரையைப் போலப் பாய்ந்து ஓடக்கூடியவையும்; பரிவோடு இருப்பனவற்றைப் போன்று இருந்தபடி வஞ்சிப்பவையுமான ஐம்புலன்கள் அதிவேகமாகப் பாய்ந்து தறிகெட்டோடுகின்ற வீதிவட்டத்தில் சிக்கிக்கொண்டு; அலங்காரங்களைப் பூண்டு; நிறைய அனுபவித்து; கண் பார்வை மங்கி; ஐம்புலன்களும் ஒடுங்குகின்ற அந்தச் சமயத்திலே,

பிரமன் தேடியனுப்பிய மரண ஓலை வந்ததும் உயிர் பிரிந்துபோக, இந்த உடலை உறவினர்கள் சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்று சுட்டெரிக்க அங்கே சாம்பலாகிச் சிதறிப் போவதான இந்தப் பிறவித் துயர் என்றுதான் ஓயுமோ? (அடியேனுடைய பிறவித் துயரை நீக்கியருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com