பகுதி - 753

ஊர்த்துவ தாண்டவம் ஆடும்
பகுதி - 753

பதச் சேதம்

சொற் பொருள்

வடிவது நீலம் காட்டி
முடிவுள காலன்கூட்டி வர 
விடுதூதன் கோட்டி விடுபாசம்

 

வடிவது: உடலின் நிறத்தை; நீலம் காட்டி: நீலமாக்கி; தூதன்: யம தூதன்; கோட்டிவிடு பாசம்: வளைத்து எறியும் கயிறு;

மகளொடு மாமன்பாட்டி 
முதல்உறவோரும் கேட்டு
மதி கெட மாயம் 
தீட்டிஉயிர் போ முன்

 

 

படி மிசை தாளும்காட்டி உடல் 
உறுநோய் பண்டு ஏற்ற பழ வினை 
பாவம்தீர்த்து அடியேனை

 

படிமிசை: உலகத்தில்; பண்டு ஏற்ற: முற்காலத்தில் அடைந்த;

பரிவோடு நாளும்காத்து விரி 
தமிழால்அம் கூர்த்த பர 
புகழ்பாடு என்று 
ஆட்கொண்டுஅருள்வாயே

 

கூர்த்த: அழகிய; பரபுகழ்: மேலான புகழ், திருப்புகழ்;

முடி மிசை சோமன்சூட்டி 
வடிவுளஆலங்காட்டில்
முதிர்நடமாடும் 
கூத்தர்புதல்வோனே

 

சோமன்: சந்திரன், பிறைநிலா;

முருகு அவிழ் தாரும்சூட்டி ஒரு
 தனிவேழம் கூட்டி
முதல்மற மானின் சேர்க்கைமயல் 
கூர்வாய்

 

முருகு: நறுமணம்; தாரும்: மாலையையும்; வேழம் கூட்டி: யானையை வரவழைத்து; மறமான்: வேடர்குல மான், வள்ளி;

இடி என வேகம்காட்டி நெடி 
தரு சூலம்தீட்டி எதிர் 
பொருசூரன் தாக்க வர ஏகி

 

நெடிதரு சூலம்: (புலால்) நெடிவீசுகின்ற சூலம்;

இலகிய வேல்கொண்டு ஆர்த்துஉடல் 
இரு கூறுஅன்று ஆக்கி
இமையவர் ஏதம்தீர்த்த
 பெருமாளே.

 

ஏதம்: துன்பம்;

வடிவது நீலம் காட்டி முடிவுள காலன் கூட்டிவர விடு தூதன் கோட்டி விடு பாசம்...  உடலை நீலமாக ஆக்கி, முடிவுக் காலத்துக்கான யமன் அழைத்துவருவதற்காக அனுப்புகின்ற தூதன் வளைத்து எறிகின்ற பாசக்கயிறு (மேலே விழுந்து உயிர் போகும்போது);

மகனொடு மாமன் பாட்டி முதல் உறவோரும் கேட்டு மதி கெட மாயம் தீட்டி உயிர் போ முன்... மகன், மாமன், பாட்டி முதலான உறவினர்கள் (மரணம் வந்ததை அறிந்து) புத்தி கலங்கி, உலக மாயை கூர்மையடைந்து உயிர் போவதற்கு முன்னாலே;

படி மிசை தாளும் காட்டி உடல் உறு நோய் பண்டு ஏற்ற பழ வினை பாவம் தீர்த்து... இவ்வுலகிலே உன்னுடைய திருவடிகளைக் காட்டி; உடலுக்கு ஏற்பட்ட நோய்களையும்; முற்காலத்தில் வந்து சேர்ந்த பழைய வினைகளாகிய பாவங்களை ஒழித்து;

அடியேனை பரிவோடு நாளும் காத்து விரி தமிழால் அம் கூர்த்த பர புகழ் பாடு என்று ஆட் கொண்டு அருள்வாயே... அடியேனை அன்போடு எப்போதும் காத்து, ‘விரிவான தமிழால் அழகிய திருப்புகழைப் பாடு’ என்று ஆட்கொண்டு அருளவேண்டும்.

முடி மிசை சோமன் சூட்டி வடிவுள ஆலங்காட்டில் முதிர் நடமாடும் கூத்தர் புதல்வோனே... சடாமுடியிலே பிறைச் சந்திரனைச் சூட்டிக்கொண்டு அழகிய திருவாலங்காட்டில் முதன்மையான நடனத்தை* ஆடுகின்ற கூத்தரான சிவபெருமானுக்குப் புதல்வனே!

(திருவாலங்காட்டில் ஆடியது ஊர்த்துவ தாண்டவம் எனப்படும் இடது பாதத்தைத் தூக்கியாடும் நடனம்.  இது பிறவியை அறுக்கும் என்பது கருத்து.)

முருகு அவிழ் தாரும் சூட்டி ஒரு தனி வேழம் கூட்டி முதல் மற மானின் சேர்க்கை மயல் கூர்வாய்... நறுமணம் வீசும் மாலையைச் சூட்டி, ஒப்பற்ற யானையான விநாயகரை வரவழைத்து, முன்னர் வேடர்குல மானாகிய வள்ளியை அடைய மோகித்தவனே!

இடி என வேகம் காட்டி நெடிதரு சூலம் தீட்டி எதிர் பொரு சூரன் தாக்க வர ஏகி... இடியைப்போன்ற வேகத்தைக் கொண்டு, புலால் மணம் வீசுகின்ற சூலத்தை ஏந்தியபடி எதிர்த்து வந்த சூரன் தாக்குவதற்காக வந்தபோது அவனை எதிர்த்துச் சென்று,

இலகிய வேல் கொண்டு ஆர்த்து உடல் இரு கூறு அன்று ஆக்கி இமையவர் ஏதம் தீர்த்த பெருமாளே.... திருக்கரத்தில் இலகும் வேலாயுதத்தை ஆரவாரத்தோடு வீசி, சூரனுடைய உடலை இரண்டு கூறாக்கி தேவர்களுடைய துன்பத்தைத் தீர்த்த பெருமாளே!


சுருக்க உரை:

சடையில் பிறைநிலவைத் தரித்து திருவாலங்காட்டில் ஊர்த்துவ தாண்டவம் ஆடும் சிவபெருமானுடைய மகனே! நறுமணம் கமழும் மாலையைச் சூட்டி, ஒப்பற்ற வேழமான விநாயகரை வரவழைத்து வள்ளியை அடைவதில் மோகம் கொண்டவனே!  இடிபோன்ற வேகத்தைக் காட்டி, புலால் நாற்றம் வீசுகின்ற சூலத்தை ஏந்தியபடி சூரன் எதிர்த்து வந்தபோது, திருக்கரத்தில் விளங்கும் வேலால் அவனுடைய உடலை இரண்டு கூறாக்கித் தேவர்களுடைய துன்பத்தைத் தீர்த்த பெருமாளே!

உடலை நீல நிறமாக்கி; முடிவுக்கு உரியவனான யமன் அனுப்பிய தூதன் வளைத்து எறிகின்ற காலபாசம் என்மேலே விழ இருப்பதை அறிந்து மகன், மாமன், பாட்டி முதலான உறவினர்கள் அனைவரும் கலங்கி நிற்க; உலக மாயையானது உச்ச நிலையை அடைந்து என்னுடைய உயிர் போவதற்கு முன்னாலே, இவ்வுலகிலே உனது திருவடிகளைக் காட்டியருளி; இந்த உடலுக்கு ஏற்பட்டிருக்கும் நோய்களையும்; பழைய வினைகளின் காரணமாகப் பற்றியிருக்கின்ற பாவங்களையும் ஒழித்து, விரிவான தமிழாலே உயர்வான உனது திருப்புகழைப் பாடும்படியாக அருளி ஆட்கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com