பகுதி -765

எதையும் தனக்கென்று சேர்த்து
பகுதி -765

பதச் சேதம்

சொற் பொருள்

 

கனி தரும் கொக்குகண் செவி
 வெற்பும் பழனியும் தெற்குசற்குரு 
வெற்பும் கதிரையும் சொற்கு
உட்பட்டதிருச்செந்திலும்வேலும்

 

கொக்கு: மாமரம்; கட்செவி வெற்பு: நாகமலை—திருச்செங்கோடு; சற்குரு வெற்பு: சுவாமிலை; கதிரை: கதிர்காமம்; சொற்குட்பட்ட திருச்செந்தில்: புகழுக்கு இருப்பிடமான திருச்செந்தில்;

கனவிலும் செப்பதப்பும் (ன்)னை
சங்கட உடம்புக்குதக்க அனைத்தும்
களவு கொண்டிட்டுகற்பனையின் 
கண்சுழல்வேனை

 

 

 

 

புனிதன் அம்பைக்குகைத்தல ரத்நம்
பழைய கங்கைக்குஉற்ற புது முத்தம்
புவியில் அன்றைக்குஅற்று 
எய்ப்பவர்வைப்பு என்று உருகா

 

 

புனிதன்: சிவன்; அம்பைக்கு: அம்பிகைக்கு; முத்தம்: முத்து; எய்ப்பவர்: இளைப்பவர்; வைப்பு: சேமிப்பு, காப்பு நிதி; உருகா: உருகி;

 

எப்பொழுதும்வந்திக்கைக்கு 
அற்றஎ(ன்)னை 
பின் பிழையுடன் பட்டுபத்தருள் 
வைக்கும் பொறையை என்செப்பி 
செப்புவது ஒப்புஒன்று உளதோ தான்

 

 

பத்தருள்: பக்தர்களின் வரிசைக்குள்; பொறையை: பொறுமையை;

 

அனனியம் பெற்றுஅற்று அற்று 
ஒருபற்றும் தெளி தரும்சித்தர்க்கு 
தெளிசில்கொந்த அமலைதென் கச்சி 
பிச்சி மலர்கொந்தள பாரை

 

 

அனனியம்: அன்னியமற்ற தன்மை—நீ வேறு, நான் வேறு என்றில்லாத நிலை; தெளிசில்: தெளிவடைந்த; கொந்த: கொத்து, பூங்கொத்து, பூங்கொத்துகளை அணிந்த; அமலை: மலமற்ற, தூய, நிர்மல; தென்: அழகிய; கச்சி: காஞ்சி; கொந்தள பாரை: கூந்தல் பாரத்தை உடையவள்;

 

அறவி நுண் பச்சைபொன் 
கொடிகற்கண்டு அமுதினும்தித்திக்கப்படு 
சொல்கொம்பு அகிலஅண்டத்து 
உற்பத்திசெய் முத்தின்பொல(ம்மேரு

 

 

அறவி: அறச் செல்வி; கொம்பு: பூங்கொம்பை ஒத்தவள்; முத்தின்: முத்தை ஒத்த; பொலம்: பொன்; மேரு: மேருவை ஒத்த;

 

தனி வடம் பொற்புபெற்ற முலை 
குன்றுஇணை சுமந்து எய்க்கப்பட்ட
நுசுப்பின் தருணிசங்கு உற்று 
தத்துதிரை கம்பையினூடே

 

 

தனிவடம்: ஒப்பற்ற வடம்; பொற்பு: அழகு; எய்க்கப்பட்ட: இளைத்துப் போன; நுசுப்பின்: இடையின்; தருணி: இளமையுள்ளவள்; தத்து: தத்துகின்ற, ததும்புகின்ற; திரை: அலை; கம்பையின் ஊடே: கம்பை நதியின் ஊடே;

 

தவம் முயன்ற  அபொற்றப் 
படிகைக்கொண்டு அறம்இரண்டு 
எட்டு எட்டும்வளர்க்கும் தலை
விபங்கர்க்கு 
சத்யம்உரைக்கும்பெருமாளே.

 

 

பொற்றப் படி: மேலான படி; இரண்டு எட்டு எட்டும்: (2x8+8) முப்பத்திரண்டு; தலைவி பங்கர்க்கு: உமையைப் பங்கில் கொண்டுள்ள சிவனுக்கு;

கனி தரும் கொக்கு கண் செவி வெற்பும் பழனியும் தெற்குச் சற்குரு வெற்பும் கதிரையும் சொற்கு உட்பட்ட திருச்செந்திலும் வேலும்... பழங்களைத் தருகின்ற மாமரங்கள் நிறைந்திருக்கும் நாகமலை எனப்படும் திருச்செங்கோடு; பழனி; தெற்கே இருக்கின்ற சுவாமிமமலை; கதிர்காமம்; புகழ்பெற்ற திருச்செந்தில்; வேல் முதலானவற்றை,

கனவிலும் செப்பத் தப்பும் எ(ன்)னை சங்கட உடம்புக்குத் தக்க அனைத்தும் களவு கொண்டிட்டு கற்பனையின்கண் சுழல்வேனை... கனவில்கூடச் சொல்லி அறியாதவனாகிய என்னை; சங்கடம் நிறைந்ததான இந்த உடலுக்குத் தேவைப்படும் அனைத்தையும் திருட்டு வழியிலாவது அடைகின்ற கற்பனைகளில் மூழ்கிக் கிடக்கின்ற என்னை;

புனிதன் அம்பைக்குக் கைத்தல ரத்நம் பழைய கங்கைக்கு உற்ற புது முத்தம் புவியில் அன்றைக்கு அற்று எய்ப்பவர் வைப்பு என்று உருகா... புனிதனாகிய பரமசிவனுடைய தேவியின் கையில் இருக்கின்ற இரத்தினம் என்றும்; கங்கையிலே தோன்றிய புதிய முத்து என்றும்; பூமியிலே எதையும் தனக்கென்று சேர்த்து வைக்காமல் (இறைவனிடத்திலே எல்லாவற்றையும் ஒப்படைத்தவர்களுடைய) காப்பு நிதி என்றும் சொல்லிச் சொல்லி மனமுருகி;

எப்பொழுதும் வந்திக்கைக்கு அற்ற எ(ன்)னை பின் பிழையுடன் பட்டு பத்தருள் வைக்கும் பொறையை என் செப்பி செப்புவது ஒப்பு ஒன்று உளதோ தான்...  ஒருபோதும் வணங்காதவனாகிய என்னை; (இத்தனைக் குற்றங்களுக்கு உரியவன் என்றறிந்த பின்னாலும்) என் பிழை பொறுத்து உன்னுடைய பக்தர்கள் கூட்டத்தோடு ஏற்றுக்கொண்ட உன் பெருங்கருணையை நான் என்ன சொல்லிப் புகழ்வது?  அக்கருணைக்கு ஈடும் உண்டோ?


அனனியம் பெற்று அற்று அற்று ஒரு பற்றும் தெளி தரும் சித்தர்க்கு தெளிசில் கொந்த அமலை தென் கச்சி பிச்சி மலர் கொந்தள பாரை... அன்னிய பாவமற்று, ‘நீ, நான்’ இரண்டும் ஒன்றே என்ற அத்துவித நிலையைப்பெற்று; எல்லாப் பற்றுகளும் அறவே அற்றுப்போய் தெளிவடைந்தவர்களாகிய சித்தர்கள் தெளிந்து உணர்ந்தவளும்; மலர்க்கொத்துகளைச் சூடிய நிர்மலையும்; அழகிய காஞ்சியில் வீற்றிருப்பவளும்; பிச்சிப் பூவைச் சூடிய பாரமான கூந்தலை உடையவளும்;  

அறவி நுண் பச்சை பொன் கொடி கற்கண்டு அமுதினும் தித்திக்கப்படு சொல் கொம்பு அகில அண்டத்து உற்பத்தி செய் முத்தின் பொல(ம்) மேரு... அறச்செல்வியும்; பச்சை நிறங்கொண்ட நுண்ணிய கொடிபோன்றவளும்; கற்கண்டையும் அமுதத்தையும்விட இனிய சொற்களை உடையவளும்; பூங்கொம்பை நிகர்த்தவளும்; எல்லா அண்டங்களையும் பிறப்பிக்கும் முத்தைப் போன்றவளும்; அழகிய மேருவை ஒத்தவளும்;

தனி வடம் பொற்பு பெற்ற முலை குன்று இணை சுமந்து எய்க்கப்பட்ட நுசுப்பின் தருணி சங்கு உற்று தத்து திரை கம்பையினூடே... ஒப்பற்ற மணிவடத்தால் அழகுபெற்ற இரண்டு குன்றுகளைப் போன்ற மார்பகங்களைச் சுமந்து அதனால் இளைத்திருக்கின்ற இடையை உடையவளும் இளமையானவளுமான உமையம்மை, சங்குகள் நிறைந்து தத்திப் பரவும் அலைகளுடையுடைய கம்பை நதிக்கரையில்,

தவம் முயன்று அப் பொற்றப் படி கைக்கொண்டு அறம் இரண்டு எட்டுஎட்டும் வளர்க்கும் தலைவி பங்கர்க்கு சத்யம் உரைக்கும் பெருமாளே... தவம் புரிந்து சிறப்புமிக்க அந்தப் படியிலிருக்கும் நெல்லைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களை* வளர்த்த நாயகியான உமையம்மையை இடதுபாகத்தில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்கு மெய்ப்பொருளான பிரணவ மந்திரத்தை உபதேசித்த பெருமாளே!

(* முப்பத்திரண்டு அறங்கள் என்று பெரிய புராணம் சொல்வன: சாலை அமைத்தல், ஓதுவார்க்கு உணவு, அறுசமயத்தாருக்கும் உணவு, பசுவுக்குத் தீனி, சிறைச் சோறு, ஐயம், தின்பண்டம் நல்கல், அநாதைகளுக்கு உணவு,  மகப்பெறுவித்தல், மகவு வளர்த்தல், சிசுக்களுக்குப் பால் நல்கல், அநாதைப் பிணம் சுடுதல், அநாதைகளுக்கு உடை, சுண்ணாம்பு பூசல், நோய்க்கு மருந்து, வண்ணார் தொழில், நாவிதத் தொழில், கண்ணாடி அணிவித்தல், காதோலை போடுதல், கண் மருந்து, தலைக்கு எண்ணெய், ஒத்தடம் தருதல், பிறர் துயர் காத்தல், தண்ணீர்ப் பந்தல், மடம் கட்டுதல்,  தடாகம் அமைத்தல், சோலை வளர்த்தல், தோல் பதனிடல், மிருகங்களுக்கு உணவு, ஏர் உழுதல், உயிர் காத்தல், கன்னிகாதானம்.)

சுருக்க உரை:

‘நீ, நான்’ என்ற வேறுபாடு இல்லாத அத்துவித நிலையை எய்திய சித்தர்கள் தெளிந்து உணர்ந்தவளும்; நிர்மலையும்; பூங்கொத்துகளைச் சூடியவளும்; பிச்சி மலரை அணிந்த கூந்தல் பாரத்தை உடைவளும்; அறச்செல்வியும்; பச்சை நிறத்து மென்கொடியும்; கற்கண்டையும் அமுதத்தையும்விட இனிமையான சொற்களை உடையவளும்; பூங்கொம்பை ஒத்தவளும்; எல்லா அண்டங்களையும் பிறப்பித்த முத்தும், அழகிய மேருமலையுமானவளும்; இணையில்லாத மணிவடங்களை அணிந்த கொங்கை பாரத்தால் இளைத்த இடையை உடையவளும்; இளைமை வாய்ந்தவளுமான உமையம்மை, சங்குகள் நிறைந்து அலைகள் பரவுகின்ற கம்பை நதிக்கரையில் தவம்புரிந்து; சிறப்புமிக்க படியைக் கொண்டு இருநாழி நெல்லைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களை வளர்க்கும் தேவியான உமையை இடது பாகத்தில் கொண்டிருக்கும் சிவபெருமானுக்குப் பிரணவத்தின் பொருளை உபதேசித்த பெருமாளே!

மாமரங்கள் நிறைந்த திருச்செங்கோட்டையும்; பழனியையும்; சுவாமி மலையையும்; கதிர்காமத்தையும்; திருச்செந்தூரையும்; வேலாயுதத்தையும் கனவில்கூட நினைத்தறியாதவனும்; உடலின் சுகத்துக்குத் தேவையானவற்றைத் திருடியாவது பெற நினைக்கும் கபட எண்ணங்களைக் கொண்டவனும்; எல்லாப் பற்றுகளையும் அறுத்து நீ ஒருவனே வைப்புநிதி எனக்கொண்டு வாழ்கின்ற பெரியோர்களைப் போல உன்னை வணங்காதவனாகிய என்னுடைய குற்றங்களைப் பொறுத்துக்கொண்டு, தெளிந்த சிந்தனையை உடைய உன்னுடைய பக்தர்களுடைய திருக்கூட்டத்தோடு என்னையும் சேர்த்துக்கொண்ட உன்னுடைய இணையற்ற கருணையை என்ன சொல்லிப் புகழ்வேன்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com