பகுதி - 871

இருவினை அஞ்ச
பகுதி - 871

பதச் சேதம்

சொற் பொருள்

இருவினை அஞ்ச மல வகை மங்க இருள் பிணி மங்க மயில் ஏறி

 

இருவினை: நல்வினை, தீவினை; இருள் பிணி: அஞ்ஞானமும் நோயும்;

இன அருள் அன்பு மொழிய கடம்புவின் அதகமும் கொ(ண்)டு அளி பாடக்

 

கடம்புவின்: கடம்பின், கடப்ப மாலையின்; அதகமும்: உயிர் தரு மருந்தையும் (அதகம்: உயிர் தரு மருந்து); அளி பாட: வண்டுகள் பாட;

கரி முகன் எம்பி முருகன் என அண்டர் களி மலர் சிந்த அடியேன் முன்

 

கரிமுகன் எம்பி: யானைமுகன் தம்பியே; அண்டர்: தேவர்கள்; களி: களிப்புடன்;

கருணை பொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடம் கொ(ண்)டு அருள்வாயே

 

கடுகி: விரைவில்; நடம் கொடு: நடனம் புரிந்து;

திரி புரம் மங்க மதன் உடல் மங்க திகழ் நகை கொண்ட விடை ஏறி

 

மதன் உடல் மங்க: மன்மதனுடைய சரீரம் அழிய; நகைகொண்ட: சிரித்த; விடையேறி: விடையை வாகனாமாகக் கொண்ட சிவபெருமான்;

சிவம் வெளி அங்கண் அருள் குடி கொண்டு திகழ நடம் செய்து எமை ஈண

 

சிவம்: சிவன்; வெளி அங்கண்: வெட்டவெளியின்கண்—வெட்டவெளியிலே; ஈண: ஈன்ற;

அரசி இடம் கொள் மழுவுடை எந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா

 

அரசி: உமையம்மை; இடம்கொள்: இடதுபாகத்தில் வைத்திருக்கும்; மழுவுடை எந்தை: மழுவை (கோடரியை) ஏந்திய தந்தயான;

அருணை விலங்கல் மகிழ் குற மங்கை அமளி நலம் கொள் பெருமாளே.

 

அருணை: திருவண்ணாமலை; விலங்கல்: மலை;

இருவினை யஞ்ச மலவகை மங்க இருள்பிணி மங்க மயிலேறி... என்னுடைய நல்வினையும் தீவினையும் அச்சம்கொண்டு நீங்கவும்; ஆணவ, கன்ம, மாயா மலங்கள் மங்கிப் போகவும்; நீ மயில் வாகனத்தில் ஏறிவந்து;

இனவருள் அன்பு மொழிய க டம்புவின் அதகமும் கொடு அளிபாட... அருள்வாக்குகளையும் அன்பான மொழிகளையும் சொல்ல; உன்னுடைய கடப்ப மாலையிலுள்ள உயிர்தரும் மருந்தாகிய தேனைச் சுற்றி வண்டுகள் மொய்த்து ரீங்காரமிட;

கரிமுகன் எம்பி முருகனென அண்டர் களிமலர் சிந்த அடியேன்முன்...விநாயகன், ‘என் தம்பியே, முருகா’ என்று அழைக்க; தேவர்கள் மகிழ்ச்சிகொண்டு மலர்களைத் தூவ; அடியேன் முன்னாலே,

கருணைபொழிந்து முகமும் மலர்ந்து கடுகி நடங்கொடு அருள்வாயே...கருணை நிறைந்தவனாகவும் மலர்ந்த முகத்தவனாகவும் விரைவில் நடனமாடியபடி எழுந்தருள் புரிய வேண்டும்.

திரிபுர மங்க மதனுடல் மங்க திகழ்நகை கொண்ட விடையேறிச்... திரிபுரங்கள் அழியவும்; மன்மதனுடைய உடல் எரியவும் புன்னகை புரிந்தருளியவனும்; விடையேறுபவனுமான,

சிவம் வெளி யங்கண்அருள் குடிகொண்டு திகழந டஞ்செய்து... சிவன் வெட்டவெளியில் (பரவெளியில்) பேரருளோடு திருநடனம் செய்து,

எமையீண் அரசியிடங்கொள மழுவுடை யெந்தை அமலன் மகிழ்ந்த குருநாதா... எம்மை ஈன்றவளான உமையம்மையை இடது பாகத்தில் வைத்தபடி, மழுவாயுதத்தை ஏந்தியிருப்பவனான எந்தையும், மாசற்றவனுமான (சிவபிரான்) மனம் மகிழ்ந்த குருநாதனே!

அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை அமளிந லங்கொள் பெருமாளே.... திருவண்ணாமலைக் குன்றிலிலே மகிழ்ந்திருக்கின்ற குறமங்கையின் மலர்ப் படுக்கையிலே நலம் துய்க்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

திரிபுரம் அழியும்படியும் மன்மதனுடைய உடல் எரியும்படியும் புன்னகை பூத்தருளியவரும்; விடையேறுபவரும்; எம்மை ஈன்றவளான உமையம்மையை இடதுபாகத்தில் வைத்திருப்பவரும் எந்தையும் நிமலருமான சிவபெருமான் மகிழ்ந்த குருநாதனே!  திருவண்ணாமலைக் குன்றிலே மகிழ்ந்திருக்கும் குறமங்கையின் மலர்ப் படுக்கையிலே நலம் துய்க்கின்ற பெருமாளே!

அடியேனுடைய இருவினைகளும் மும்மலங்களும் அஞ்ஞானமும் பிணிகளும் ஒழியும்படியாக மயில்மீது ஏறியமர்ந்துகொண்டு; அருள் நிறைந்த மொழிகளைப் பேசி; தேன் நிறைந்த கடப்ப மலர் மாலையில் வண்டுகள் மொய்த்தபடிப் பாட; ‘தம்பியே, முருகா!’ என்று விநாயகன் அழைக்க, தேவர்கள் மலர்மாரி பொழிய, நடனமாடும் கோலத்தில் அடியேன் எதிரிலே எழுந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com