பகுதி - 873

கரு பற்றி பருத்து..
பகுதி - 873

பதச் சேதம்

சொற் பொருள்

கரு பற்றி பருத்து ஒக்க தரைக்கு உற்றிட்டு உரு பெற்று கருத்தின் கண் பொருள் பட்டு பயில் காலம்

 

கருப்பற்றி: (ஒரு தாயின்) கருவைப் பற்றிக்கொண்டு; பருத்து: வளர்ந்து;

கணக்கிட்டு பிணக்கிட்டு கதித்திட்டு கொதித்திட்டு கயிற்றிட்டு பிடித்திட்டு சமன் ஆவி

 

கணக்கிட்டு: ஆயுளைக் கணக்கிட்டு; பிணக்கிட்டு: மாறுபாடு கொண்டு; கதித்திட்டு: விரைந்து வந்து; கொதித்திட்டு: கோபம் கொண்டு; கயிற்றிட்டு: பாசக் கயிற்றை வீசி; பிடித்திட்டு: உயிரைக் கவர்ந்து; சமன்: யமன்;

பெருக்க புத்தியில் பட்டு புடை துக்க கிளை பின் போய் பிணத்தை சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்

 

ஆவி பெருக்க: ஆவியைப் பிரிக்க; புடை: பக்கதிலுள்ள; துக்கக் கிளை: துக்கத்திலிருக்கும் உறவினர்கள்

பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்து தொக்கு அற கத்து பிறப்பு பற்று அற செச்சை கழல் தாராய்

 

பிறத்தல்: (அந்தப்) பிறப்பில்; தொக்கு: சருமம், தோல்—இங்கே உடல்; கத்து பிறப்பு: அழுது கதறும் பிறப்பு; செச்சை: வெட்சிப் பூ;

பொருப்பு கர்ப்பூர கச்சு தன பொற்பு தினை பச்சை புன கொச்சை குற தத்தைக்கு இனியோனே

 

 

புரத்தை சுட்டு எரித்து பற்றலர்க்கு பொற் பத துய்ப்பை புணர்த்து பித்தனை கற்பித்து அருள்வோனே

 

புரத்தை: திரிபுரத்தை;

செருக்கு அ குக்கரை குத்தி செரு புக்கு பிடித்து எற்றி சினத்திட்டு சிதைத்திட்டு பொரும் வீரா

 

குக்கர்: நாய்கள், நாய் போன்றவர்கள் (குக்கல்: நாய்);

திருத்தத்தில் புகழ் சுத்த தமிழ் செப்பு த்ரய சித்ர திரு கச்சி பதி சொக்க பெருமாளே.

 

 

கருப் பற்றிப் பருத்து ஒக்கத் தரைக்கு உற்றிட்டு உருப் பெற்று... ஒரு தாயுடைய கர்ப்பத்தை அடைந்து, வளர்ந்து, உரிய காலம் வந்ததும் பூமியை வந்தடடைந்து; அந்தந்தப் பருவங்களுக்கு உரிய உருவங்களை முறைப்படி அடைந்து;

கருத்தின் கண் பொருள் பட்டு பயில் காலம்... எண்ணத்திலே பொருள் சேர்ப்பதையே குறியாகக் கொண்டு காலத்தைச் செலுத்துகின்ற சமயத்திலே,

கணக்கிட்டுப் பிணக்கிட்டு கதித்திட்டுக் கொதித்திட்டுக்... ஆயுள் முடிந்ததைக் கணக்கிட்டுப் பார்த்து, மாறுபாடு கொண்டு விரைந்து வந்து, கோபித்து,

கயிற்றிட்டுப் பிடித்திட்டுச் சமன் ஆவி பெருக்க... பாசக் கயிற்றை வீசி, யமன் உயிரைப் பிரித்து எடுத்துச் செல்லும்போது (அது),

புத்தியில் பட்டுப் புடைத் துக்கக் கிளைப் பின் போய்... புத்தியில் உறைத்து, துக்கத்தில் ஆழ்ந்தபடி சுற்றியிருக்கின்ற உறவினர்கள் பின்னாலே வந்து,

பிணத்தைச் சுட்டு அகத்தில் புக்கு அனைவோரும்... பிணத்தை எரித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பிவந்து எல்லோரும்,

பிறத்தல் சுற்றம் முற்று உற்றிட்டு அழைத்துத் தொக்கு அறக் கத்து... அந்தப் பிறவியில் சுற்றத்தார்களாக உள்ள அனைவரையும் வரும்படிச் செய்து, அவர்கள் உடல் சோர்ந்து தளரும்படியாக அழுது கரைகின்ற,

பிறப்புப் பற்று அறச் செச்சைக் கழல் தாராய்...பிறவி என்பதில் உள்ள பற்று நீங்கும்படியாக, வெட்சிமாலையால் சூழப்பட்ட உனது திருவடிகளைத் தந்தருள வேண்டும்.

பொருப்புக் கர்ப்புரக் கச்சுத் தனப் பொற்புத் தினைப் பச்சைப்புன... மலையை ஒத்ததும் கற்பூரத்தையும் கச்சையும் அணிந்ததும் அழகுள்ளதுமான மார்பகத்தை உடையவளும்; பசுமையான தினைப்புனத்தைக் காத்தவளும்;

கொச்சைக் குறத் தத்தைக்கு இனியோனே... மழலைச் சொல்லைப் பேசுபவளுமான குறக்கிளியான வள்ளிக்கு இனியவனே!

புரத்தைச் சுட்டு எரித்துப் பற்றலர்க்குப் பொற் பதத் துய்ப்பை... திரிபுரங்களைச் சுட்டெரித்துப் பகைவர்களாயிருந்த திரிபுராதிகளுக்கு மேலான பதவி நுகர்ச்சியை,

திரி புரங்களைச் சுட்டு எரித்து, திரிபுரங்களில் பற்று இல்லாமல் சிவ வழிபாட்டில் இருந்த மூவர்க்கு* மேலான பதவி நுகர்ச்சியை 

புணர்த்து அப்பித்தனைக் கற்பித்து அருள்வோனே... கூட்டிவைத்த பித்தனாகிய சிவபெருமானுக்கு (குருவாக நின்று) பிரணவப் பொருளை ஓதுவித்து அருளியவனே!

செருக்கு அக் குக்கரைக் குத்திச் செருப் புக்குப் பிடித்து எற்றி... செருக்குடைய நாயைப் போல இழிந்தவர்களான அசுரர்களைக் குத்தியும் போருக்குச் சென்று பிடித்து எற்றியும்,

சினத்திட்டுச் சிதைத்திட்டுப் பொரும் வீரா... கோபித்து அழிவடையச் செய்து போரிட்ட வீரனே!

திருத்தத்தில் புகல் சுத்தத் தமிழ்ச் செப்புத் த்ரய... பிழையில்லாமல் ஓதப்படும் சுத்தமான முத்தமிழால் சொல்லப்படுகின்ற,

சித்ரத் திருக் கச்சிப் பதிச் சொக்கப் பெருமாளே.... சிறப்பு வாய்ந்ததும் மேன்மையானதுமான கச்சிப்பதியில் வீற்றிருக்கின்ற அழகிய பெருமாளே!

சுருக்க உரை

மலையைப் போன்றதும் கற்பூரத்தையும் கச்சையும் அணிந்ததுமான மார்பகத்தை உடையவளும்; மழலை பேசுபவளும்; தினைப்புனத்தைக் காத்தவளுமான வள்ளிக்கு இனியவனே! திரிபுரங்களை எரித்த சிவபெருமானுக்குப் பிரணவப் பொருளை குருவாக நின்று உரைத்தவனே! செருக்குடையவர்களும் நாயிலும் கடையவர்களுமான அசுரர்களை அழித்தவனே! பிழையில்லாமல் ஓதப்படும் சுத்மான முத்தமிழால் சொல்ப்படுகின்ற சிறப்பை உடையதும் மேன்மையானதமான கச்சிப்பதியில் வீற்றிருக்கின்ற பெருமாளே!

தாயின் கருவில் தோன்றி, வளர்ந்து, காலக் கணக்குப்படி பத்து மாதங்களில் பிறந்து, பொருள்தேடி வாழ்ந்து, வாழ்நாளைச் செலவழிக்கின்ற சமயத்தில், ஆயுள் முடிந்தது என்பதைக் கணக்கிட்டு யமன் வந்து பாசக்கயிற்றை வீசி, உயிரைப் பிரித்தெடுத்துச் சென்ற பிறகு, சுற்றத்தார் அனைவரும் துக்கமடைந்து, பிணத்தை எரித்து வீட்டுக்குத் திரும்புகின்ற இயல்பையுடைய இந்தப் பிறவிச் சுழற்சியில் உள்ள பற்று நீங்கும்படியாக வெட்சிமாலையைப் புனைந்த உன் திருப்பாதங்களைத் தந்தருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com