பகுதி - 781

புவனத்து ஒரு பொன்..
பகுதி - 781

பதச் சேதம்

சொற் பொருள்

புவனத்து ஒரு பொன் தொடி சிறு உதர கருவில் பவம் உற்று விதி படியில் புணர் துக்க சுக பயில் உற்று மரித்திடில் ஆவி

 

பொற்றொடி: பொன் வளையல்; பவம் உற்று: பிறந்து; புணர்: பொருந்துகிற;

புரி அட்டகம் இட்டு அது  கட்டி இறுக்கி அடி குத்து என அச்சம் விளைத்து அலற புரள்வித்து வருத்தி மணல் சொரிவித்து அனல் ஊடே

 

புரி அட்டகம்: அஷ்டகம் எனப்படுவது ஐம்புலன்களையும், மனம், புத்தி, அகங்காரம் என்ற மூன்றையும் சேர்த்து எட்டையும் கலந்து உருவான உடலைக் குறிக்கும்;

தவனப்பட விட்டு உயிர் செக்கில் அரைத்து அணி பற்கள் உதிர்த்து எரி செப்பு உருவை தழுவ பணி முட்களில் கட்டி இசித்திட வாய் கண்

 

தவனம்: வெப்பம், சூடு; எரி செப்பு உரு: எரிகின்ற, செம்பாலான உருவம்; இசித்திட: இழுத்திட;

சலனப் பட எற்றி இறைச்சி அறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளைய தளை இட்டு வருத்தும் யம ப்ரகர துயர் தீராய்

 

அயில்வித்து: உண்ணச் செய்து; ப்ரகரம்: பிரகரம்—அடித்தல்; யம ப்ரகரம்: யமன் அடிப்பதாகிய தண்டனை;

பவனத்தை ஒடுக்கும் மன கவலை ப்ரமை அற்று வகை ஐ வகை புலனில் கடிதில் படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர்

 

பவனத்தை: (பவனம்: காற்று) மூச்சுக் காற்றை; ப்ரமை: பிரமை;

பரி பக்குவர் நிட்டை நிவர்த்தியினில் பரிசுத்தவர் விரத்தர் கருத்து தனில் பரவப்படு செய்ப்பதியில் பரம குரு நாதா

 

விரத்தர்: பற்றை விட்டவர்கள்; செய்ப்பதி: வயலூர்;

சிவன் உத்தமன் நித்த உருத்திரன் முக் க(ண்)ணன் நக்கன் மழு கரன் உக்ர ரண த்ரி புரத்தை எரித்து அருள் சிற் குணன் நிற் குணன் ஆதி

 

நக்கன்: நக்னன், திகம்பரன்—திக்கையே ஆடையாக உடையவன்; மழு: கோடரி; நிற்குணன்: நிர்குணன்;

செக வித்தன் நிச பொருள் சிற் பரன் அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தட த்ரிசிர புர வெற்பு உறை சற் குமர பெருமாளே.

 

செக வித்தன்: உலகத்துக்கு வித்து, மூலம் ஆனவன்; ஒப்பிலி: ஒப்பற்றவன்; உற்பவ: உற்பவித்தவனே, தோன்றியவனே; பத்ம தட: தாமரைக் குளங்கள்; த்ரிசிரப்புர வெற்பு: திரிசிராப்பள்ளி மலை;

புவனத் தொருபொற்றொடி சிற் றுதரக் கருவிற் பவமுற்று விதிப் படியில் புணர்துக்கசுகப் பயில்வுற்று மரித்திடில் .... இவ்வுலகத்திலே, பொன் வளையலை அணிந்த அழகிய பெண்ணின் வயிற்றில் கருவிலிருந்து; உலகில் பிறந்து; விதிமுறைப்படி வந்து அடைகின்ற துக்கத்தையும் சுகத்தையும் அனுபவித்து இறக்கும்போது,

ஆவி புரியட்டகம் இட்டு அதுகட்டியிறுக்கு அடி குத்தெனஅச்சம்விளைத்து அலறப் புரள்வித்து வருத்தி மணற் சொரிவித்து .... உயிரை, புரி அஷ்டகம்* என்ற சூட்சும சரீரத்துக்குள் புகுத்தி, அதனைக் கட்டியும் அடித்தும், குத்தியும் அச்சத்தை உண்டாக்கியும்; அலறியபடி புரளம்படியும் செய்து துன்புறுத்தி, கொதிக்கின்ற மணலை மேலே கொட்டி,

(* துன்பத்தை உடலால்தான் அனுபவிக்க முடியும்; உயிரால் அனுபவிக்க முடியாது என்பதனால், ஐம்புலன்களும், புத்தி, மனம், அகங்காரம் என்ற மூன்றும் கொண்டதாகிய புரியட்டகம் என்னும் சூட்சும உடலுக்குள் அந்த உயிரைப் புகுத்தியபிறகு யமலோகத்தில் துன்புறுத்துவார்கள் என்பது கருத்து.)

அனலூடே தவனப் படவிட்டு உயிர்செக்கிலரைத்து அணிபற்களுதிர்த்து எரிசெப் புருவைத் தழுவப் பணி முட்களில்கட்டியிசித்திட ....... (அவ்வுடலை) நெருப்புக்குள்ளே புகுத்தி சூடேற்றி; செக்கிலே இட்டு அரைத்து; வரிசையாக இருக்கும் பற்கள் உதிரும்படியாக அடித்து; செம்பாலான, எரிகின்ற உருவம் ஒன்றைத் தழும்படியாகச் செய்து, முட்ககளில் கட்டியும் இழுத்தும்;

வாய்கண் சலனப் படஎற்றி இறைச்சியறுத்து அயில்வித்து முரித்து நெரித்து உளையத் தளையிட்டு வருத்தும் யம ப்ரகரத் துயர்தீராய்...வாயும் கண்ணும் கலங்கி அசையும்படியாக உதைத்தும்; இறைச்சியை அறுத்து அதை உண்ணும்படியாகச் செய்தும்; எலும்பை முரித்தும் நசுக்கியும்; வலியெடுக்கும்படியாக விலங்கு பூட்டியும் துன்புறுத்துகின்ற யமதண்டனை என்கின்ற துன்பத்தைத் தீர்த்தருளவேண்டும்.

பவனத்தை யொடுக்கு மனக்கவலைப் ப்ரமையற்று ஐவகைப் புலனிற் கடிதிற் படரிச்சையொழித்த தவச் சரியைக் க்ரியையோகர் ...மூச்சுக் காற்றை ஒடுக்கி; மனக் கவலை என்கின்ற மயக்கத்தை நீக்கி; ஐந்து புலன்களின் மீது வேகமாகப் படர்கின்ற ஆசைகளை ஒழித்த தவசீலர்களான, சரியை* கிரியை* மார்க்கங்களைக் கடைப்பிடிப்பவர்களும்; யோகிகளும்;

(* பக்தி மார்க்கங்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை:

1. சரியை: திருக்கோயிலில் அலகு இடுதல், மெழுகுதல், விளக்கு இடுதல், நந்தவனம் வைத்தல், பூ எடுத்தல், மாலை அமைத்தல், இறைவனை வாழ்த்துதல், திருவேடம் கண்டு பணிதல். இது 'தாத மார்க்கம் - சாலோகம்'.

2. கிரியை: பூஜை உபகரணங்களை அமைத்து நித்தியக் காரியம் செய்தல்.இது 'புத்ர மார்க்கம் - சாமீபம்'.

3. யோகம்: புலன்களை அடக்கிப் பிராண வாயுவைச் சலனம் அற நிறுத்தி ஆறு ஆதாரங்களின் பொருளை உணர்ந்து, சந்திர மண்டல அமிர்தத்தை உடல் முழுதும் நிரப்பி,முழு ஜோதியை நினைத்திருத்தல். இது 'சக மார்க்கம் (தோழ நெறி) - சாரூபம்'.

4. ஞானம்: புறத் தொழில் அகத் தொழில் இன்றி, அறிவு மாத்திரத்தாலே செய்யும் வழிபாடு ஞானம். இது 'சன்மார்க்கம் - சாயுஜ்யம்'.

என்று http://www.kaumaram.com/thiru/nnt0558_u.html விளக்குவதைக் காண்க.)

பரிபக்குவர் நிட்டை நிவிர்த்தியினில் பரிசுத்தர் விரத்தர்கருத்ததனிற் பரவப்படு செய்ப் பதியிற் பரமக் குருநாதா .... ஞனாத்தால் முதிர்ந்தவக்ளும்; நிஷ்டையையும் துறவையும் மேற்கொண்ட பரிசுத்தர்களும்; பற்றை ஒழித்தவர்களும் தங்களுடைய கருத்திலே வைத்துப் போற்றுகின்ற; வயலூரில் வீற்றிருக்கின்ற பரமகுருநாதனே!

சிவன் உத்தமன் நித்த வுருத்திரன் முக் கணன் நக்கன்மழுக்கரன் உக்ர ரணத் த்ரிபுரத்தை யெரித்தருள் சிற் குணன் நிற்குணன் ஆதி...சிவனும்; உத்தமனும்; என்றும் நித்தியனான உருத்திரனும்; முக்கண்ணனும்; திகம்பரனும்; கோடரியைக் கையில் ஏந்தியவனும்; கொடிய போர்க்களத்தில் திரிபுரத்தை எரித்தவனும்; ஞானத்தையே குணமாகக் கொண்டவனும்; குணமே அற்றவனும்; ஆதிமூர்த்தியும்;

செகவித்தன் நிசப் பொருள் சிற்பரன்அற்புதன் ஒப்பிலி உற்பவ பத்ம தடத் த்ரிசிரப் புர வெற்புறை சற் குமரப் பெருமாளே...... உலகத்துக்கு வித்தாக உள்ள மூலப்பொருளாக ஆனவனும்; உண்மைப் பொருளாக ஆனவனும்; அறிவுக்கு எட்டாதவனும்; அற்புதனும்; ஒப்பற்றவனுமான மகேஸ்வரனிடத்திலே தோன்றியவனே!  தாமரைக் குளங்கள் நிறைந்த திரிசிராப்பள்ளி மலையின் மீது வீற்றிருக்கின்ற பெருமாளே!

சுருக்க உரை

மூச்சை அடக்கி; மனக் கவலை என்னும் மயக்கத்தை ஒழித்து; ஐம்புலன்களின் மீது வேகமாகப் படர்கின்ற ஆசைகளை அறுத்தவர்களான தவசீலர்கள், சரியை, கிரியை மார்க்கங்களைப் பின்பற்றுபவர்கள், ஞான முதிர்ச்சி பெற்றவர்கள், நிஷ்டையில் ஆழ்ந்து, துறவு மேற்கொண்டவர்கள் என்று இவ்வாறான பெரியோர்கள் தங்களுடைய கருத்திலே வைத்துப் போற்றுகின்ற குருநாதா!  வயலூரில் வீற்றிருக்கின்ற பரமகுருநாதா!  சிவன்; உத்தமன்; அழிவற்ற உருத்திரன்; முக்கண்ணன்; நக்னன்; உக்கிரமான போர்க்களத்தில் திரிபுரங்களை எரித்தவன்; ஞானத்தையே குணமாகக் கொண்டவன்; குணமற்றவன்; மழுவை ஏந்தியவன்; ஆதி மூர்த்தி; உலகத்தின் மூலப்பொருள்; சத்தியமானவன்; அறிவுக்கு எட்டாதவன்; அற்புதன்; ஒப்பற்றவன் என்றெல்லாம் போற்றப்படுகின்ற சிவபெருமானிடத்திலே தோன்றியவனே! தாமரைக் குளங்கள் நிறைந்திருக்கின்ற திரிசிராப்பள்ளி மலையிலே வீற்றிருக்கின்ற பெருமாளே!

இவ்வுலகத்திலே ஒரு பெண்ணின் வயிற்றில் கருவாக வளர்ந்து, பூமியில் பிறந்து, விதியின் முறைப்படி துக்கத்தையும் சுகத்தையும் அனுபவித்தபிறகு மாண்டபிறகு அந்த உயிருக்கு, ‘புரியட்டகம்’ என்ற சூட்சும உடலைக் கொடுத்து; அவ்வுடலை அழுந்தக் கட்டியும் அடித்தும் குத்தியும் அச்சுறுத்தியும்; அலறிப் புரளச் செய்தும்;வருத்தியும்; கொதிக்கின்ற மணலை மேலே இறைத்தும்; (அந்த உடல்) சூடேறும்படியாக நெருப்புக்குள் போட்டும்; செக்கில் இட்டு அரைத்தும்; பற்கள் உதிரும்படியாகக் குத்தியும்; பற்றி எரிவதும் செம்பால் ஆனதுமான உருவத்தைத் தழுவச் செய்தும்; முட்களில் கட்டியும் இழுத்தும்; வாயும் கண்ணும் கலங்கும்படியாக எற்றியும்; மாமிசத்தை அறுத்துத் தின்னச் செய்தும்; எலும்பை ஒடித்தும் நொறுக்கியும் நசுக்கியும் வருந்தும்படியாக விலங்குகளைப் பூட்டியும் துன்பப்படுத்துகின்ற யமப் பிரகரம் எனப்படும் யமவாதனையை அடையாமல் ஆண்டருள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com