பகுதி - 783

குவளை பூசல் விளைத்திடும்
பகுதி - 783

பதச் சேதம்

சொற் பொருள்

குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர் குமுத வாய் அமுதத்தை நுகர்த்து இசை பொரு காடை

 

பூசல் விளைத்திடும்: போர் புரியும்; அம் கயல்: அழகிய மீன்; கடுவது: கடு அது—விஷம் அது; இசை பொரு காடை: ஓசை பொருந்துகின்ற காடை (என்னும் பறவை);

குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அ(ன்)னம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி குரல் விடா இரு பொன் குடமும் புளகிதமாக

 

குக்கில்: செம்போத்து; சுரும்பு: வண்டு; வன: அழகிய; பதாயுதம்: (காலையே ஆயுதமாகக் கொண்ட) கோழி; குரல்விடா: குரலெழுப்ப; புளகிதமாக: மயிர்க்கூச்சம் அடைய;

பவள ரேகை படைத்த அதரம் குறி உற வியாள படத்தை அணைந்து கை பரிசம் தாடனம் மெய் கரணங்களின் மதன் நூலின்

 

வியாள படம்: பாம்பின் படம் (இங்கே அல்குல்); பரிசம்: ஸ்பரிசம்; தாடனம்: தட்டுதல்; மெய்க் கரணங்களின்: உடலைக் கொண்டு செய்யும் தொழில்களில்;

படியிலே செய்து உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ

 

அவசமாய்: வசமிழந்து; வடபத்ர: ஆலிலை (போன்ற); நெடும்சுழி: வயிற்றுச் சுழி;

தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கை பயங்கரி புவநேசை

 

தவள ரூப: வெள்ளை வடிவங்கொண்ட; சரச்சுதி: சரஸ்வதி; புலோமசை: இந்திராணி; க்ருத்திகை: கார்த்திகைப் பெண்கள்; சமுக: சமூக; சேவித: வணங்கும்; புவநேசை: புவனேஸ்வரி;

சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி

 

நிரஞ்சனி: மலமற்றவள்; நிஷ்களி: உருவமற்றவள்;

சிவை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே

 

சிற்சுக சுந்தரி: அறிவு ரூபமான ஆனந்த அழகி; விதக்ஷணி: சிறப்பிக்கப்பட்டவள்; த்ரிபுரை: திரிபுரங்களை எரித்தவள்; யாமளை: சியாமளை—பச்சை நிறத்தவள்; அற்பொடு: அன்போடு (வலித்தல் விகாரம்);

சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத திரிசிரா மலை அப்பர் வணங்கிய பெருமாளே.

 

அலங்க்ருத: அலங்கரிக்கப்பட்ட;

குவளை பூசல் விளைத்திடும் அம் கயல் கடுவது ஆம் எனும் மை கண் மடந்தையர்... குவளைப் பூவையும்; போருக்கு எழுகின்ற அழகிய கயலையும்; ‘இது விஷம்தானோ’ என (ஐயம் தரக்கூடியதுமான) மை தீட்டிய கண்களை உடைய பெண்களின்,

குமுத வாய் அமுதத்தை நுகர்ந்து இசை பொரு காடை குயில் புறா மயில் குக்கில் சுரும்பு அ(ன்)னம் வன பதாயுதம் ஒக்கும் எனும்படி குரல் விடா... தாமரையை ஒத்த வாயில் ஊறும் அமுதத்தைப் பருகி; இசை பொருந்தியவையான காடை, குயில், புறா, மயில், செம்போத்து, வண்டு, அன்னம், கோழி ஆகியனவற்றின் குரலை ஒத்த தங்கள் குரலை எழுப்பவும்;

இரு பொன் குடமும் புளகிதமாக பவள ரேகை படைத்த அதரம் குறி உற... பொற்குடங்களைப் போன்ற இரு மார்பகங்களிலும் மயிர்க்கூச்சம் ஏற்படவும்; பவள ரேகையை உடைய உதடுகளின் அடையாளம் (உடலெங்கும்) பதிய;

வியாள படத்தை அணைந்து கை பரிசம் தாடனம் மெய் கரணங்களின் மதன் நூலின் படியிலே செய்து... பாம்பின் படத்தை ஒத்த அல்குலைத் தொட்டு கையால் ஸ்பரிசித்தும் தட்டியும்; உடலால் செய்யப்படும் தொழில்களை மதன நூல்களில் சொல்லப்படுகின்ற வகையில் செய்தும்;

உருக்கி முயங்கியெ அவசமாய் வட பத்ர நெடும் சுழி படியும் மோக சமுத்ரம் அழுந்துதல் ஒழிவேனோ... மனமுருகக் கூடித் தன்வசத்தை இழந்து; ஆலிலைபோன்ற வயிற்றுச் சுழியிலே வீழ்கின்ற மோகக் கடலிலே முழுகுவதை ஒழிப்பேனோ? (ஒழித்து அருள வேண்டும்.)

தவள ரூப சரச்சுதி இந்திரை ரதி புலோமசை க்ருத்திகை ரம்பையர் சமுக சேவித துர்க்கை பயங்கரி... வெண்மையான உருவைக்கொண்ட ஸரஸ்வதியும் லக்ஷ்மியும் ரதியும் இந்திராணியும் கிருத்திகை மாதர்களும் அரம்பையகளும் வணங்குபவளான துர்க்கையும் பயங்கரியும்;

புவநேசை சகல காரணி சத்தி பரம்பரி இமய பார்வதி ருத்ரி நிரஞ்சனி சமய நாயகி நிஷ்களி குண்டலி எமது ஆயி... புவனேஸ்வரியும் எல்லாவற்றுக்கும் மூலகாரணமானவளும் சக்தியும் முழு முதல்வியும் இமவானுடைய மகளான பார்வதியும் ருத்ரியும் மாசற்றவளும் சமயங்களின் தலைவியும் உருவமற்றவளும் கிரியா சக்தியானவளும் எம்முடைய தாயும்;

சிவை மநோமணி சிற்சுக சுந்தரி கவுரி வேத விதக்ஷணி அம்பிகை த்ரிபுரை யாமளை அற்பொடு தந்து அருள் முருகோனே... சிவையும் மனோன்மணியும் அறிவு ரூப ஆனந்த சுந்தரியும் வேதங்களால் போற்றப்படுபவளும் அம்பிகையும் திரிபுரங்களை எரித்தவளும் சியாமளையுமான உமையம்மை அன்போடு ஈன்றவனான முருகனே!

சிகர கோபுர சித்திர மண்டப மகர தோரண ரத்ந அலங்க்ருத திரிசிரா மலை அப்பர் வணங்கிய பெருமாளே.... மலை உச்சியும் கோபுரங்களும் சித்திர மண்டபங்களும் (நிறைந்த) மகரதோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திரிசிரா மலையில் வீற்றிருக்கின்ற சிவனார் வணங்கிய பெருமாளே!

சுருக்க உரை

வெண்மையான உருவைக்கொண்ட ஸரஸ்வதியும்; லக்ஷ்மியும்; ரதியும்; இந்திராணியும்; கிருத்திகை மாதர்களும்; அரம்;பையகளும் வணங்குபவளான துர்க்கையும்; பயங்கரியும்; புவனேஸ்வரியும்; எல்லாவற்றுக்கும் மூலகாரணமானவளும்; சக்தியும்; முழு முதல்வியும்; இமவானுடைய மகளான பார்வதியும்; ருத்ரியும்; மாசற்றவளும்; சமயங்களின் தலைவியும்; உருவமற்றவளும்; கிரியா சக்தியானவளும்; எம்முடைய தாயும்; சிவையும்; மனோன்மணியும்; அறிவு ரூப ஆனந்த சுந்தரியும்; வேதங்களால் போற்றப்படுபவளும்; அம்பிகையும்; திரிபுரங்களை எரித்தவளும்; சியாமளையுமான உமையம்மை அன்போடு ஈன்றவனான முருகனே! மலை உச்சியும் கோபுரங்களும் சித்திர மண்டபங்களம் நிறைந்ததும் மகர தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான திரிசிரா மலையில் வீற்றிருக்கும் சிவனாரால் வணங்கப்பட்ட பெருமாளே!

குவளைப் பூவையும்; போருக்கு எழுகின்ற அழகிய கயலையும்; ‘இது விஷம்தானோ’ என (ஐயம் தரக்கூடியதுமான) மை தீட்டிய கண்களை உடைய பெண்களின் தாமரையை ஒத்த வாயில் ஊறும் அமுதத்தைப் பருகி; இசை பொருந்தியவையான காடை, குயில், புறா, மயில், செம்போத்து, வண்டு, அன்னம், கோழி ஆகியனவற்றின் குரலை ஒத்த தங்கள் குரலை எழுப்பவும்; பொற்குடங்களைப் போன்ற இரு மார்பகங்களிலும் மயிர்க்கூச்சம் ஏற்படவும்; பவள ரேகையை உடைய உதடுகளின் அடையாளம் (உடலெங்கும்) பதியவும்; பாம்பின் படத்தை ஒத்த அல்குலைத் தொட்டு கையால் ஸ்பரிசித்தும் தட்டியும்; உடலால் செய்யப்படும் தொழில்களை மதன நூல்களில் சொல்லப்படுகின்ற வகையில் செய்தும்; மனமுருகக் கூடித் தன்வசத்தை இழந்து; ஆலிலைபோன்ற வயிற்றுச் சுழியிலே வீழ்கின்ற மோகக் கடலிலே முழுகுவதை ஒழிப்பேனோ? (இந்த மோகாவேசத்தை ஒழித்து அருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com